பிக் பாஸ் சீசன் 8 : சாச்சனாவுக்கு நேர்ந்தது அநியாயமா?

Published On:

| By christopher

Bigg Boss Season 8: Is sachana's eviction unfair?

பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக 24 மணி நேரத்தில் ஒரு எவிக்‌ஷன் நடந்தது இதுவே முதல் முறை. ஆக, இந்த முதல் நாள் எபிசோடின் புரோமோ தொட்டே சுவாரஸ்யம் பற்ற ஆரம்பித்துவிட்டது.

சோசியல் மீடியா எங்கும் #justice_for_sachana என ஹேஸ்டேக்கள் வைரலாகத் தொடங்கியுள்ளது. சரி, அதுபற்றி சற்று விரிவாக பார்க்கும் முன் இந்த முதல் எபிசோட் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம்.

‘எனக்கு பெண்கள் குழு எடுத்த முடிவு மீது உடன்பாடில்லை’ எனக் கூறி சோபாவில் படுத்து சத்யாகிரகம் செய்த ஜாக்லின் கண்களில் கண்ணீர் துளிகளைக் காண்பதாக ஆரம்பித்தது இந்த எபிசோட். “நான் இப்போது ஒத்துப் போனால் பின் வரும் எல்லா முடிவுகளுக்கும் ஒத்துப்போகும் நிலை ஏற்பட்டு விடும்” என படுக்கைக்கு போகும் முன் ஜாக்லின் சொன்னது சரியான ஸ்டேட்மண்ட். ஆனால், தூக்குவதற்கு முன் அழுதது, பின் மறுநாள் அதே பெண்கள் அணியுடன் ஒத்துப் போக முயன்றது ஒருவித ஆட்ட தடுமாற்றத்தையே காட்டியது. பின் இதர பல நிகழ்வுகளில் அவர் உணர்ச்சிவசப்பட்டதும் அதையே உறுதிப்படுத்தியது.

மறுநாள் காலை விடிய.., பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் ஒளிர, புதுப்பேட்டை படத்தில் இருந்து ‘வரியா!’ பாடல் ஒலிக்க.., அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் குல வழக்கப்படியான முறையில் ஆட, ரவீந்தர் மட்டும் பிக் பாஸ் டேக் லைன் வாக்கியத்திற்கான ஆளாய் ஓடவும் ஒளியவும் முடியாத ஆளாய் இருந்தார். 24 மணி நேரத்தில் ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என முந்தைய தொடக்க நாளிலேயே விஜய் சேதுபதி சொல்லிருந்த நிலையில், அது யார் என்பதை தேர்வு செய்வது குறித்து ஹவுஸ்மேட்ஸ் ஆலோசித்தனர்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தீபக் – ரவீந்தர் சொன்ன முறையை அப்படியே ஆமோதித்தனர் என்றே சொல்ல வேண்டும். அதன்படி, ஒருவர் தான் ஏன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியான நபர் என்று சொல்ல வேண்டும். அதில் பதற்றத்துடன் கூறிய ஒரு வார்த்தையின் முடிவே சாச்சனாவின் எவிக்‌ஷனுக்கு காரணம் என நினைத்துக்கொண்டால், நாமும் தீபக் – ரவீந்தரின் சொற்களுக்கு ஆமோதித்த ஹவுஸ்மேட்ஸ் ஆகிவிடுவோம்.

”இந்த வீட்டில் எங்கள் அணி நழுவ விட்ட ஒரு அட்வான்டேஜுக்கு நானும் ஒரு வகையில் காரணம். அதனால் நான் வெளியே போனால் கூட பரவாயில்லை!” என சாச்சனா கூறியது ஒரு வித குற்ற உணர்ச்சி, அதை வெளிப்படுத்துவதில் இருந்த பதற்றத்தில் வெளிப்பட்ட ஒரு ஸ்டேட்மேண்ட் மட்டுமே.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆட்டத்தில் வரும் இதுபோன்ற குற்ற உணர்ச்சி தேவையில்லாத ஒன்றே என்பது வேறு கருத்து. ஆனால், ”எனக்கு பிக் பாஸ் வீட்டில் நிறைய ஆடைகள் போட்டுக்கொள்ள வேண்டும், அதற்காக நான் இந்த வீட்டில் இருக்க ஆசைப்படுகிறேன்” என தர்சா குப்தா சொன்ன காரணம் அதை விட அபத்தமாக ஏன் தெரியவில்லை?

தங்களின் இருப்புத் தகுதி குறித்து பேசியதில் முத்துக்குமரன், ஜெஃப்ரி, தீபக் சொன்ன காரணங்கள் மட்டுமே சிறந்தவைகளாக காணப்பட்டது. குறிப்பாக, ”25 ஆண்டுகளாக போராடி வரும் ஒரு வாய்ப்பை 24 மணி நேரத்தில் நிச்சயம் நான் விடத் தயாராக இல்லை” என தீபக் கூறியது நச். ”என் உடல் நிலையை வைத்து என்னை யாரும் நிராகரித்துவிடக் கூடாது அதனால் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க நினைக்கிறேன்!” என ரவீந்தர் சொன்ன காரணம் ஒரு தந்திரமான மேனிபுலேஷனாகத் தான் காண முடிந்தது.

அங்கு அதுவரை அவரை யாரும் அப்படி ஒரு காரணம் சொல்லி நாமினேட் செய்யவும் இல்லை, அதற்கான சூழலும் நிகழவில்லை. ஆனால், தானாகவே முன் வந்து இப்படி ஒரு வாக்கியத்தை முன் வைப்பது ஒரு வித மென்மையான சுயபாதுகாப்பு யுக்தி தான்.

வீட்டிற்குள் கோட்டை கிழித்த பிக் பாஸ் இனி ஆண்களுக்கான வீட்டுப் பகுதியில் யார் வரவேண்டும், வருவதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற விதிகளை ஆண்களும், பெண்கள் வீட்டுப் பகுதிக்கான நுழைவு விதிகளை பெண்களும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் எனப் பெண்களும் முடிவு செய்துகொள்ள வேண்டும் என கொடுத்த ட்விஸ்ட் சிறப்பு. அத்தியாவசிய தேவையான கிச்சன் பகுதி ஆண்கள் வசம் இருப்பதால் இத்தகைய முடிவு அந்த அணிக்கு மேலும் பலத்தைத் தந்தது.

ஆனால், பெண்கள் வசம் இருந்தது கன்ஃபசன் ரூம் மற்றும் லிவ்விங் ரூம் மட்டுமே. ஆக, அவர்களால் எந்த ஒரு பாதிப்பை விளைக்கும் விதிகளையும் ஆண்களுக்கு விதிக்க இயலவில்லை. விரைவில், இந்த ஒரு விதியால் இரு அணிகளுக்கும் இடையே காரசார சண்டைகள் வர வாய்ப்புண்டு என்பது மட்டும் நமக்குப் புரிந்தது. இது, சென்ற சீசனின் பிக் பாஸ் vs ஸ்மால் பாஸ் கான்சப்டை விட சுவாரஸ்யமானதாக மாறுகிறது.

இதைத் தொடர்ந்து, இந்த சீசனில் முதன்முறையாக அறிவிக்கப்பட்ட 24 மணி நேர எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் நடந்தது. அதில் ஜாக்லினுக்கும் சாச்சனாவுக்கும் நிறைய வாக்குகள் கிடைத்துக்கொண்டிருந்த நிலையில், ரவீந்தரை நாமினேட் செய்தார் அருண். ஆனால் அவர் சொன்ன காரணம் சரியாக இல்லாததால் விளக்கமளிக்கும் படி கேட்டுக்கொண்டார் பிக் பாஸ். ஏனென்றால், ‘ ரவீந்தர் ஒரு தயாரிப்பாளர், அவருக்கு எங்களைப் போல் வாய்ப்பு அவசியம் இல்லை’ என அருண் கூறியது சற்று அபத்தமான காரணம்.

Image

ஆனால், குற்ற உணர்ச்சியில் சாச்சனா சொன்ன ஒரு வார்த்தையை மட்டும் காரணமாக கூறி சிலர் அவரை நாமினேட் செய்தது அதை விட அபத்தமான ஒரு காரணமே. உண்மையில், இருக்கும் ஹவுஸ்மேட்ஸில் தெளிவான சிந்தையுடன் உள்ள நபர்களில் ஒருவர் தான் சாச்சனா. ஆனால், அவரின் பதற்றமும் தேவை இல்லாத குற்ற உணர்வுமே அவரை பகடைக்காயாக மாற்றியுள்ளது.

தன் முடிவில் இருந்து ஜாக்லின் பின் வாங்கியதால் அவரை நாமினேட் செய்கிறேன் என முத்துக்குமரன் சொன்னது சிறந்த கேம். அர்னவ் தந்திரமாக ஆடுகிறார் என சவுந்தர்யா சொன்ன காரணமும் சிறந்த தனித்த ஒரு ஆய்வே. ஆனால், இறுதியில் அதிக ஓட்டு கணக்கெடுப்பில் சாச்சனா வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

இந்த பிக் பாஸ் சீசனின் முதல் டாஸ்காக ‘நாற்காலி யார் காலி?’என்கிற டாஸ்க் இரு அணியினருக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவரே இந்த வாரத்தின் வீட்டின் தலைவராவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த டாஸ்கில் ஓடவும் ஒழியவும் முடியாத ரவீந்தர் சீனப் பெருஞ் சுவராக தடுத்தே பலரை சிதற விட்டார். மறுபக்கம் ஆட்டத்தின் விதி புரியாத ரஞ்சித் ஓடி வரும் பெண்களிடம் கபடி ஆட முயற்சித்த காட்சியையும் பார்க்க முடிந்தது. இப்படி முதல் நாளே உடல் பலம் சார்ந்து நடத்தப்பட்ட இந்த டாஸ்கில் பெண்கள் அணியைச் சேர்ந்த தர்ஷிகா வெற்றிப் பெற்று வீட்டின் முதல் தலைவியானார்.

வீட்டின் முதல் வார எவிக்‌ஷன் பிராசஸில் ஜாக்லின், ரவீந்தர், அருண், முத்து, சவுந்தர்யா, ரஞ்சித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்த முதல் எபிசோடைப் பொறுத்தவரை தீர்க்கமான தனித்த முடிவுகளை, தனித்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களாக முத்துகுமரன், ஆர்.ஜே. ஆனந்தி, சவுந்தர்யா, தீபக், ஆகியோர் மட்டுமே திகழ்கின்றனர்.

இதில் ரவீந்தர் மிகத் தந்திரமாக அனைவரையும் சற்று மேனிபுலேட் செய்யும் போக்கில் ஆடுவதைப் பார்க்க முடிந்தது. பிக் பாஸைப் பொறுத்தவரை தனித்த விளையாட்டு மட்டுமே வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். ஆக, இந்த வார எவிக்‌ஷன் புராசஸ் மற்றும் இதர டாஸ்க்குகள், நிகழ்வுகள் இவர்களின் தனித் தன்மையையும், நிதானத்தையும் எவ்வாறு சோதிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

நீலகிரி: இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய ஆ.ராசாவிடம் கோரிக்கை!

கோயம்பேட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை: ஏழு நாட்கள் நடக்கிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel