பிக் பாஸ் சீசன் 8 : மாறி மாறி மன்னிப்பு கேட்கும் ஹவுஸ்மேட்ஸ்!

Published On:

| By christopher

வாரம் முழுவதும் சண்டை போட்டுக்கொண்டு இருந்த நபர்கள் ‘மன்னிப்பு கேக்குறவன் மனுஷன், மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்’ என ’விருமாண்டி’ அன்னலட்சுமியின் வார்த்தைகளுக்கு இணங்க மாறி, மாறி பெரிய மனுஷன் ஆகும் முயற்சியில் ஈடுபட்டதை இன்றைய பிக் பாஸ் எபிசோடின் தொடக்கத்தில் பார்க்க முடிந்தது.

அட.., வீக் எண்ட் எபிசோட் வரப்போகுதுல? உம்ம்.., வாரம் முழுவதும் சண்டை போடுவதும், வார இறுதி வரும் போது இணைந்த கைகளாவதும் பிக் பாஸ் கலாசார வழக்கம். பிக் பாஸ் கலாசாரத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் மற்றொரு வழக்கமும் உண்டு. தொன்று தொட்டு சீசன்களில் வழங்கப்படும் ஒரே டெம்பிளேட் டாஸ்க்கள். இன்றைக்கு அப்படி ஒரு டாஸ்கும் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு இன்னொரு பிக் பாஸ் வழக்கத்தைப் பற்றி பேசியாக வேண்டும். அதே தான், வேக்கப் டான்ஸ்.

நேற்றைய எபிசோடில் அந்த வேக்கப் பாடல் இல்லாது இருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது என நாம் எழுதினோம். ‘அது எப்டி? பின்ன காபி ரைட் வாங்கி வைச்ச பாட்டெல்லாம் நாங்க எங்க தான் யூஸ் பண்றது..?’ என இன்றைய எபிசோடில் அந்த வழக்கமும் பின்பற்றப்பட்டது. சரி, இப்படி வழக்கமான டெம்பிளேட்டில் பயணிக்கும் ஒரு கேம் ஷோவை எப்படி வழக்கத்துக்கு மாறாக விமர்சிப்பது? ஆக, உங்கள் மின்னம்பலம் வழங்கும் வழக்கமான பிக் பாஸ் விமர்சனத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

மழையின் காரணமாக பிக் பாஸும் ஆஃப் டே லீவ் எடுத்து விட்டார் போலும். நாளின் டாஸ்க் அறிவிக்க அவர் வராததால், ஹவுஸ்மெட்ஸ் தங்களின் திறமைகளை காட்டலாம் என இந்த வார கேப்டன் சத்யாவின் தலைமையில் தங்களது கலைத் திறமைகளைக் காட்டத் தொடங்கினர். ஆரம்ப கால மிமிக்ரி ஆர்டிஸ்ட் போல் விஜய் சேதுபதி வாய்ஸை எடுத்து நடித்த விஜே விஷாலின் பெர்ஃபாமன்ஸை வீக் எண்டில் வறுக்க இப்போதே விசே தயாராகி வருகிறார் என்பது நம்பத்தகாத சோர்ஸ் அளித்த தகவல்.

தர்ஷிகாவின் பாவனை, அன்ஷிதா – விஷாலின் ஆக்டிங் , ஆனந்தியின் பாட்டு எனத் தொடர்ந்த இந்த பிக் பாஸ் பட்ஜட் கலை நிகழ்ச்சியில் ரஞ்சித் – ஜாக்குலின் செய்த ஆக்டிங் பெர்ஃபாமன்ஸ் ரசிக்க வைத்தது. உங்களில் பலருக்கும் அவரை ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்தாக தெரியும், அல்லது ராசக்காபாளையம் ரஞ்சித்தாக தெரியும், ஆனால், ‘சைமன் நாடாரை’ பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது. மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்கம்’ படத்தைப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். தலைவன் எந்த மாதிரியான பெர்ஃபாமர் என்று. ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் தலைவன் செய்யும் பெர்ஃபாமன்ஸ் அதை விட சூப்பர் என்பது வேற கதை.

நாளின் முதல் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில், பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கு வேகமாக பஸர் அடித்து அந்தந்த அணியினர் பதிலளிக்க வேண்டும். அதில் சில கேள்விகள் ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்’ என்கிற ரேஞ்சிற்கான கேள்விகளாகவே இருந்தது. அதிலும், குங்குமப் பூவில் இருந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது என்கிற அறிவான பதிலை வழக்கம் போல் மிக தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார் அருண். இந்த போட்டியின் முடிவில், பெண்கள் அணி வென்றது. இதன் அடுத்த ரவுண்டாக மற்றொரு டாஸ்க் அறிவிக்கப்பட்டது.

கடந்த 7 சீசன்களில் வழங்கப்பட்டு வரும், அடுத்த 200 சீசன்களிலும் நிச்சயம் இடம்பெறவும் உள்ள அந்த செவென் ஷாட்ஸ் விளையாட்டின் பேரக்குழந்தையான மற்றொரு பந்தெறியும் டாஸ்க்கை புத்தம் புதிய டாஸ்க் போல் பெயரிட்டு அறிவித்தார் பிக் பாஸ். இந்த டாஸ்க் தொன்று தொட்டு அனைத்து சீசன்களிலும் இடம்பெறுவதன் நோக்கம், இதில் உடல்ரீதியான தாக்குதலுக்கும், அதன் மூலம் ஹவுஸ்மேட்ஸ் ட்ரிகர் ஆவதற்கும், வீட்டில் சலசலப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு என்கிற காரணத்தால் தான். இம்முறையும், அப்படி ஒரு நிகழ்வு நடக்க நேர்ந்தது. ஆனால், அதை விளையாட்டாக அணுகிய போக்கு பாராட்டத்தக்கதே.

இந்த டாஸ்கின் அறிவிப்பில் ஒற்றை கேமரா மட்டும் தர்ஷா குப்தா அழும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. என்ன காரணம் என்று டாஸ்குக்கு பிறகு பார்த்தால், அவர் சமைக்கும் சமையல் வீட்டாருக்கு பிடிக்கவில்லையாம். இது என்னடா ஒரு குக் வித் கோமாளி போட்டியாளருக்கு வந்த சோதனை? ஒன்றை கவனித்தீரா? வீட்டில் உள்ள குக் வித் கோமாளியின் போட்டியாளர்களாக வலம் வரும் விஜே விஷால், தர்ஷா சமைக்கும் சாப்பாடு எவருக்கும் பிடிப்பதில்லை. எவிக்ட் ஆகி சென்ற போது இதை ரவீந்தரும் குறிப்பிட்டிருந்தது நியாபகம் இருக்கும்.

ஆக, குக் வித் கோமாளியில் யார் நிஜமாக சமைக்கிறார் என்கிற சந்தேகம் லேசாக எழுகிறது. அடுப்பை ஆஃப் செய்து விட்டு சமைப்பது, இஞ்சி வாசம் போவதற்காக இஞ்சி சேர்க்கிறேன் என சொல்வது, மஞ்சள் பொடி மட்டும் போட்டு பூரி மசால் செய்வது என அடிப்படை சமையலிலே தடுமாற்றம் இருப்பதே அத்தகைய சந்தேகங்களுக்கு காரணம்.

ஆனால், இந்த கிச்சன் சண்டை தர்ஷா குப்தாவை பெண்கள் அணியில் இருந்து விலக்கி வைத்துள்ளது என்பதையும் காண முடிந்தது. அதை மேலும் வலுப்படுத்தும் வண்ணம், விஷாலும் ‘நாங்க உன்ன ஃபிரெண்ட் மாதிரி பார்க்குறோம். அவங்க தான் உன்ன வீக்கா பார்க்குறாங்க. அவங்க கூட சேராத’ என சொல்லும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. தர்ஷாவின் இந்த தொட்டாஞ்சினுங்கித் தனம் பிக் பாஸ் வீட்டில் செல்லாது. ஆனால், ஆண்கள் அணியிடத்து பெண்கள் அணி மீதான ஒரு இன்செக்யூரிட்டி இருந்து வருவதையும் பார்க்க முடிந்தது. வார்த்தை ரீதியாக, உடல் மொழி ரீதியாக, சிந்தனை ரீதியாகக் கூட பெண்கள் அணியை அரசியல் தெளிவின்றி தாக்க நேரிட்டால் மக்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடும் என்கிற எண்ணம் அவர்களிடத்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. இது ஒரு வகையில் ஆண்கள் அணியின் பலவீனமும் கூட.

இன்றைக்கு வழங்கப்பட்ட டாஸ்கில் இரண்டு ரவுண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் ஒரு டாஸ்கை வென்றுள்ளது. ஆக, நாளை நடக்கவிருக்கும் மூன்றாவது டாஸ்கே வெற்றி பெற்ற அணியைத் தீர்மாணிக்கும். இந்த டாஸ்கின் மிக முக்கிய அட்வாண்டேஜ் நாமினேஷன் ஃப்ரீ. அது எந்த அணிக்கு கிடைக்கும் என்பது நாளையே தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

மதி சந்தை முதல் மதி எக்ஸ்பிரஸ் வரை… மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தீபாவளி சிறப்புச் சந்தை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel