பிக் பாஸ் சீசன் 8 : ’என் இடுப்ப தொட்டா ஃபேன்ஸ் கோவிச்சிப்பாங்க!’ – தர்ஷா குப்தா

Published On:

| By christopher

Bigg Boss Season 8: Darsha Gupta to arnav controversy

எதுக்குப்பா பிக் பாஸ் வீட்டுக்குள்ள இந்த வேக்கப் டான்ஸ் என பல விமர்சனங்களில் நாம் எழுதியதுண்டு. அதற்கு செவிசாய்த்து இன்றைய எபிசோட் வேக்கப் டான்ஸ் இன்றி தொடங்கியது. நிர்வாகத்திற்கு அடியேனின் நன்றிகள். ஆனால், இந்த ஹவுஸ்மேட்ஸை வைத்துக்கொண்டு எப்பேற்பட்ட டாஸ்க் கொடுத்தாலும் சீசனை சுவாரஸ்யமாக்க முடியாது என்கிற விரக்தியில் பிக்பாஸ் டீம் வந்திருக்க கூடும்.

அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்ய வறட்சி இந்த சீசன் முழுதும் தெரிவதை நம்மால் பார்க்க முடிகிறது. சரி, எடுத்ததும் குமுறல்களைக் கொட்டாமல் எபிசோடின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம்.

 

அடுத்த வாரம் பெண்கள் அணிக்கு யாரை அனுப்புவது என ஆண்கள் அணியினர் பேசிக்கொள்வதாய் தொடங்கியது இன்றைய எபிசோட். அதில், பெண்களின் காவலர், மனிதத் தன்மை மாணிக்கம் அர்ணவை கலாய்க்கும் காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அர்னவைப் பொறுத்தவரை பெண்கள் அணிக்கு கருணை காட்டுவார், அவர்களின் டிரஸுக்கு மேட்சிங்கான கப்பில் வெந்நீர் தருவார், ஆனால் ஒர்க் அவுட் செய்யும் போது டிஸ்கஷனுக்கு தனது ஆண்கள் அணியினர் கூப்பிட்டால் மட்டும் கோபம் வந்துவிடும். ஆக, பகுதி நேர பெண்கள் அணிக்கு வேலை பார்க்கும் அவரை அடுத்த வாரம் முழுக்க பெண்கள் அணிக்கு அனுப்பி விடலாம் என ஆண்கள் அணியினர் பேசிக்கொண்டனர்.

இதற்கிடையில், ஆனந்தி – தர்ஷிகா இடையே நடந்த உரையாடலில் , ‘வெளிய நம்மல யாரெல்லாம் கழுவி ஊத்துறாங்கன்னே தெரியல டி’ என பேசிக்கொள்வதைப் பார்க்க முடிந்தது. இது பிக் பாஸில் நடக்கும் வழக்கம் தான். உள்ளே வரும் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் சில நாட்களில் உருவாகும் ஒரு வித ஃபோபியா போன்றது. மறுபக்கம், இந்த சீசனின் இணைபிரியா தோழிகளாக வலம் வரும் ஜாக்குலின் – சவுந்தர்யா இடையேயான சில ஊடல் காட்சிகளை பார்க்க முடிந்தது. ‘மச்சா நான் அப்படி சொல்லல டா’, ‘மச்சி நீ கோபப்பட்டுகிட்டியா..?’ ‘மச்சி சாரி டா’ என பல ஊடல் வார்த்தை பரிமாற்றத்தைப் பார்த்தோம். லேசாக சீசன் 7யில் இருந்த ஒரு இணைபிரியா ஜோடியை நியாபகப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

ஆண்கள் அணியில் தனித்து விடப்படுவதாக உணர்ந்த தர்ஷாவிடம் ‘நான் அவங்கள மாதிரி இல்ல. என் கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னா கூட நான் பேசுவேன்’ என தன் வழக்கமான செயற்கை பாசாங்கை காட்டிய அர்ணவை அப்படியே வார்த்தைகளை திரித்து ஆண்கள் அணியிடம் ‘எல்லாரும் எனக்கு மெண்டல் டார்சர் தரீங்கன்னு அர்ணவ் சொன்னார்’ என தர்ஷா சொன்னது பக்கா சகுனி வேலை.

ஒரே வார்த்தையில முடிச்சிவிட்டீங்க போங்க என ஆண்கள் அணியினரிடத்து சலசலப்பு ஏற்பட்டது. இதை சத்யா மட்டுமே சரியாக உணர்ந்தார் எனத் தோன்றியது. ஆனால் இந்த சலசலப்பில் ‘நானே சீரியல்ல ஹீரோடா ‘ போன்ற பஞ்ச் வசனங்களை நமது ’பாரதி கண்ணம்மா’ அருண் கூறியதற்கு சிரிக்காமல் எவரும் இருந்திருக்க முடியாது. வீட்டில் இன்ன டீமு இன்ன மேட்ச்சுன்னே தெரியாது சுற்றிக்கொண்டிருக்கும் ஒரே ஹவுஸ்மேட் அவர் தான். சுருக்கமாக சொல்லப்போனால் இவர் தான் சீசன் 8 யில் ‘டைட்டில் வின்னர் சரவண விக்ரம்’ .

இந்த வாரத்திற்கான டாஸ்காக இரு அணியை இரண்டு டிவி சேனல்களாக மாற்றினார் பிக் பாஸ். அதில் ஆண்கள் அணியின் ‘கிங்க்ஸ்’ டிவி சீஇஓ- வாக ரஞ்சித் நியமிக்கப்பட்டார். அந்த சேனலைப் பற்றி அவர் கூறும்போது ‘பெண்களுக்கு அடக்கத்தைக் கற்றுத் தருவோம்’, ‘பாசத்தைக் கற்றுத் தருவோம்’ எனப் பேசியபோது ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித் நமக்கு நியாபகம் வந்தார். ஏனுங்கன்னா… வீக் எண்ட் எபிசோடுல சேதுபதி வருவாருங்கிறத மறந்துட்டீங்களாங்கன்னா..? ஆனால், அவர் சொன்ன சில கருத்துகளுக்கு வீட்டின் பெண்களும் எந்த கேள்வியும் கேட்காது இருந்தது ஏன் எனத் தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த டிவி டாஸ்க்- ஐ ‘கிரிஞ்ச் ஷோ’ என்ற வார்த்தைக்குள் அடைத்து விடலாம்.

இதில், பெண்கள் அணியில் சுனிதா சரியாக ஆடவில்லை என ஜாக்குலின் – சுனிதா இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. ஆனால், ஆண்கள் அணியில் தர்ஷா குப்தா – அர்ணவ் ஜோடி கெமிஸ்ட்ரி பொங்க ஆடியதை டாஸ்கிற்கு பின்னர் ஹவுஸ்மேட்ஸ் நக்கல் அடித்தனர். இதில், ‘ஏன் இடுப்ப பிடிக்காதீங்க. ஃபேன்ஸ் கோவிச்சிப்பாங்க!’ என்று வேற தர்ஷா குப்தா சொன்னாராம்.

இதற்கு பிறகு, இந்த டாஸ்கின் ரேங்கிங் டேஸ்டில் தங்களை 17 இடங்களில் எந்த இடம் என்பதை அவரவரே தேர்ந்தெடுக்க வேண்டும் என சொன்னார். பிக் பாஸ். வழக்கமாக இந்த டாஸ்கை எல்லா சீசனிலும் வைப்பதுண்டு. இதில் முதல் இடத்திற்கான போட்டிகள், வாக்குவாதங்கள் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் அனல் பறக்கும். குறிப்பாக சென்ற சீசனில் பிரதீப் ஆண்டனி செய்த வாக்குவாதங்கள் அனைவருக்கும் நியாபகம் இருக்கும். ஆனால், இந்த சீசனைப் பொறுத்தவரை எவருக்கும் முதல் இடத்தைப் பற்றிய கவலை இல்லை. ஏறத்தாழ அன்னபோஸ்டாகவே அந்த இடத்தை பிடித்தார் முத்துக்குமரன். இதில், தன் இடத்திற்காக ஜெஃப்ரி பேசியபோது அனைவரும் சிரித்தது ஜெஃப்ரியை வெகுவாக காயப்படுத்தியது.

ஆனால், வித்தியாசமாக 17ஆவது இடத்திற்கு நான் போட்டி போடுகிறேன் என அர்ணவ் எடுத்த கோமாளித்தனமான மூவை பார்க்க முடிந்தது. அந்த வீட்டில் இருக்கும் 17உம் ஜோக்கரா இருந்தா என்ன பண்றது..? என ’பருத்தி வீரன்’ கஞ்சா கருப்பு போல் நமக்கு சொல்லத் தோன்றுவது வேறு கதை. ஆனால், 17ஆவது இடத்திற்கு போட்டி போட்டும் தோற்றுப்போன ஒரே பிக் பாஸ் ஹவுஸ்மேட் என்றால் அது நமது அர்ணவ் தான். இது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று. இப்படியாக எந்த வித சுவாரசியமும் இன்றி கடந்தது இன்றைய எபிசோட்.

ஆட்டத்தின் போக்கை மாற்ற வேண்டும், வைல்டு கார்டு எண்ட்ரியை வரச் சொல்லுங்கப்பா என முதல் வாரத்திற்குள்ளே நம்மை கேட்க வைக்கின்றனர். முத்துக்குமரனின் ஆதிக்கம், போர் அடிக்கும் போட்டி, ஆட்ட மாற்றம் குறித்த முடிவுகள் இந்த வீக் எண்டிலேயே எடுக்கப்பட்டால் சுபம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா 

நெருங்கும் மாநாட்டு தேதி… அரசியல் பயிலரங்கம் நடத்தும் தவெக!

53ஆம் ஆண்டு விழா : தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel