‘விமர்சனம்’ என்கிற தலைப்பில் கமல்ஹாசன் செய்த ஒரு பெரும் லெக்சரில் தொடங்கியது நேற்றைய (நவம்பர் 26) எபிசோட். Bigg Boss Season 7 Day 56
அவர் செய்த சொற்பொழிவின் காரணம் நமக்குப் பின்னரே தெரிய வந்தது. அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல்ஹாசன் உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம், ’வீட்டிற்குள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாதவர் யார்? ‘ என கேள்வி கேட்டார். அதாவது, தற்போது கமல்ஹாசனுக்கு ஒரு பதில் வேண்டும். அந்த பதிலை வைத்து ‘அந்த’ குறிப்பிட்ட நபரைக் கண்டிக்க வேண்டும்.
ஏனென்றால், கமல்ஹாசனே தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு கண்டித்தால் அவர் ‘மை(ம)ய்யத்தில்’ இருந்து விலகியதாக ஆகிவிடுமாம். அப்படி அவர் கேள்வி கேட்க, எந்த ஹவுஸ்மேட்ஸும் அவர் எதிர்பார்த்த ‘அந்த’ நபரை சொல்லாமல் அர்ச்சனாவையே சொன்னனர். ஆகையால், அதுகுறித்து அர்ச்சனாவிடம் விளக்கம் கேட்டார் கமல்ஹாசன். அதில் குறுக்கே வந்த விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே முட்டிக்கொண்டது.
அதைத்தொடர்ந்து, தான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நபரான பூர்ணிமாவை குறிப்பிடாமல், ’நான் யாரப் பத்தி விமர்சிக்கனும்ன்னு நீங்க யாரும் சொல்லக் கூடாது. நீங்க எனக்கு வசனம் எழுத முடியாது. நான் நீங்க நினைக்கிற மாதிரி கேள்வி கேட்கலன்னா என்ன பண்ணிருவீங்க நீங்க?’ என சற்று காட்டமாகவே கேட்டார்.
அவர் கேட்டது தன்னை நோக்கி தான் என்பது பூர்ணிமாவுக்கும் புரிந்தது. இருப்பினும் அதுகுறித்து மீண்டும் மாயாவிடம் புலம்பிக்கொண்டே இருந்தார் பூர்ணிமா. மறுபக்கம் விஷ்னுவிற்கும் அர்ச்சனாவிற்கும் ஏற்பட்ட மோதல் மீண்டும் வெடிக்கத் தொடங்க, இடையில் வந்து விசித்ரா தீர்த்து வைத்தார்.
முதல் வைல்டு கார்டு எண்ட்ரீயாக விஜய் வர்மா வீட்டிற்குள் நுழைந்தார். உள்ளே வந்ததும் அவருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதுபடி, வீட்டிலிருக்கும் ஹவுஸ்மேட்ஸின் ஏதேனும் ஒரு குணத்தை சுட்டிக்காட்டி அதை உடைக்க வேண்டும். இதில், மாயாவின் குரூப்பிசம், ரவீனாவின் தன்னிட்டையில்லா தன்மை குறித்து பேசிய விஜய் வர்மா, வினுஷா குறித்து நிக்சன் பேசியதை சுட்டிக்காட்டியது மிகச் சரியானதாகத் தெரிந்தது. பூர்ணிமாவை சரியாக ஆட்டத்தை கவனிக்க சொல்லி விஜய் வர்மா வலியுறுத்தியது அவரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
அடுத்ததாக, இந்த வார புத்தக பரிந்துரையாக எழுத்தாளர் மனோஹர் எழுதிய ‘பெண்ட் இன் தி கேங்கஸ்( Bend in the ganges)’ என்கிற புத்தகத்தை பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து வீட்டின் இந்த வாரத்தின் இரண்டாவது எவிக்சனாக அக்ஷயா வெளியேற்றப்பட்டார். அவரின் வெளியேற்றத்தால் கண் கலங்கும் ‘டைட்டில் வின்னர்’-ரின் காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது.
இதையடுத்து கமல்ஹாசன் செய்த ஒரு விஷயமே இந்த எபிசோடின் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. பிக் பாஸ் ரசிகர்களின் மீம்ஸ், டிரால்ஸ், விமர்சனங்கள், கேள்விகள், ஆதங்கங்கள் என அனைத்தும் கமல்ஹாசனை பாதித்துள்ளது என நேற்றைய எபிசோடில் அவரிடத்தில் தெரிந்தது.
வீட்டில் நடக்கும் விதி மீறல், முக்கியமாக நாமினேசன் குறித்து கலந்தாலோசிப்பது, மைக்க கழற்றி விட்டு ரகசியம் பேசுவது போன்ற செயல்களையும் அதை பெரும்பாலும் செய்யும் மாயா – பூர்ணிமாவை கடுமையாக சாடினார். குறிப்பாக பூர்ணிமாவிடம், ‘என்னை கண்டெண்ட் ஆக்காதீர்கள். முடிந்தால் என்னைத் தாண்டி ஏதாவது கண்டெண்ட் செய்ய முயற்சி செய்யுங்கள்’ என தடாலடியாகவே தந்தார். அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரீயாக அனன்யா உள்ளே நுழைந்தார்.
அவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. வீட்டிலிருக்கும் நபர்களுக்கு அவர்களின் குணங்களுக்கு தகுந்த பெயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், மாயாவிற்கு ‘விஷ பாட்டில்’, பூர்ணிமாவிற்கு ‘தவளை’, ரவீனாவிற்கு ‘கை பொம்மை’, மணிக்கு ‘பூமர்’, நிக்சனுக்கு ‘கிரிஞ்ச்’ என ஏறத்தாழ சரியான டைட்டிலே அனைவருக்கும் வழங்கினார் அனன்யா.
இப்படி வெளியில் இருந்து உள்ளே எண்ட்ரீ தந்த இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்களின் மனநிலையின் படி வெளி நிலவரத்தை ஓரளவுக்கு சுதாரித்த மாயாவும் பூர்ணிமாவும் கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இருக்கலாம் எனத் திட்டம் போடத் தொடங்கினர். வினுஷா குறித்து நிக்சன் செய்த ஆபாச கமெண்ட் மிகவும் கண்டனத்திற்குறியது என சொன்னார் அனன்யா. ‘ஒரு அக்காவ எப்படி டா அப்படி பேசுவ?’ என அனன்யா நிக்சனிடம் நேருக்கு நேர் கேட்டு அவரை வீட்டின் கேமரா முன்னரே வினுஷாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தது அனன்யாவின் மிக சிறப்பான செயல். ஆனால், இந்த விஷயத்தை வீட்டில் இத்தனை நாட்களாக இருக்கும் பெண்ணியவாதிகள் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதை ஒரு அழகிய முரணாகத் தான் நாம் கடந்து போக வேண்டும். மீறினால் நமக்கும் ரெட் கார்டு தான் போலும்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடரும் மழையால் தக்காளி விலை மீண்டும் உயர்வு!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
இரண்டு சிலை திறப்புகளும், இந்திய அரசியல் வரலாறும்
பியூட்டி டிப்ஸ்: மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புண்டா?
Bigg Boss Season 7 Day 56