போலா சங்கர்: விமர்சனம்!

Published On:

| By Selvam

அஜித் பட ‘ரீமேக்’ பரிதாபங்கள்!

அறுபது வயதைத் தாண்டியபிறகு, எப்படிப்பட்ட வேடங்களில் நடிப்பது எனும் குழப்பம் நாயகர்களைத் தொற்றும். முன்னணி நட்சத்திரங்கள் என்றால் இன்னும் நிலைமை மோசம். ரசிகர்கள் எதையெல்லாம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்துகொள்வதற்குள், நான்கைந்து ஆண்டுகள் கடந்து போயிருக்கும். அதற்குள் நான்கைந்து படங்களிலும் நடித்திருப்பார்கள். அப்படியொரு இக்கட்டில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிக்கியிருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது ‘போலா சங்கர்’. தொண்ணூறுகளில் வந்திருக்க வேண்டிய படம் எனும் எண்ணத்தையே இது ஏற்படுத்துகிறது. ஏன் இந்த நிலைமை? அஜித் நடித்த வெற்றிப்படமான ‘வேதாளம்’ ரீமேக் என்றே விளம்பரப்படுத்தப்பட்ட இப்படம் ஏன் நம்மை அயர்வுற வைக்கிறது?

அதே ‘வேதாளம்’ கதை!

கொல்கத்தாவில் ஒரு வாடகை டாக்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் சங்கர் (சிரஞ்சீவி). அவரது தங்கை மகாலட்சுமி (கீர்த்தி சுரேஷ்) ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். வெளிநாட்டு நிறுவனமொன்றில் பைலட் ஆக வேலை செய்யும் ஸ்ரீகர் (சுஷாந்த்), கொல்கத்தாவில் தன் பெற்றோரைச் சந்திக்க வருகிறார். அப்போது, முதன்முறையாக மகாலட்சுமியைக் கண்டதுமே காதல் கொள்கிறார். அந்த ஸ்ரீகரின் சகோதரி லாஸ்யா (தமன்னா), ஒரு வழக்கறிஞர். நீதிமன்றம் அவரது வழக்கறிஞர் பணிக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கக் காரணமாகிறார் சங்கர். அதற்குப் பழிவாங்க லாஸ்யா துடிக்க, அதற்குள் ஸ்ரீகர் – மகாலட்சுமி இடையிலான நட்பு காதலாகிக் கல்யாணத்தில் முடிகிறது. அதன் தொடர்ச்சியாக, சங்கர் உடனான மோதலைக் கைவிட்டு காதல் பார்வை வீசுகிறார் லாஸ்யா.

Bhola Shankar Movie Review

ஒருநாள் தன் காதலைத் தெரிவிக்க சங்கரைத் தேடிச் செல்கிறார் லாஸ்யா. பதிலுக்குக் காதல் செய்யாமல், சில பேரைப் பந்தாடிக் கொண்டிருக்கிறார் சங்கர். அவர்கள் அனைவருமே, பெண் கடத்தலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் சங்கருக்கு என்ன தகராறு? ஏன் அவர்களைக் கொன்றொழிக்க நினைக்கிறார் என்பதுதான் ‘போலா சங்கர்’ படத்தின் மீதிக்கதை.

ஏறக்குறைய ‘வேதாளம்’ படத்தில் பார்த்த அதே கதை தான். கொஞ்சமாக ’பட்டி டிங்கரிங்’ செய்து இதில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மெகர் ரமேஷ். அந்த திருத்தங்கள் கதையை ‘பாலீஷ்’ செய்வதற்குப் பதிலாக, நம்மை ‘பஞ்சர்’ ஆக்கியிருப்பதுதான் வேதனை.

பழைய படமா இது..?

தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவை தவிர்த்து மற்ற நாயகர்கள் எல்லாம் கொஞ்சம் பாதை மாறி வெகுநாட்களாகிவிட்டது. என்னதான் கமர்ஷியல் படங்கள் என்றாலும், ரசிகர்கள் ஏற்கும் விஷயங்களை மட்டுமே திரையில் காட்டுவது என்ற முடிவோடு இருக்கின்றனர். இளம் நாயகர்கள் கூட அதில் விதிவிலக்கல்ல. ஆனால், மேற்சொன்ன இருவர் மட்டும் அதனைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதற்கான உதாரணமாக, ‘ஆச்சார்யா’வைத் தொடர்ந்து ‘போலா சங்கர்’ தந்திருக்கிறார் சிரஞ்சீவி.

ஒரு கமர்ஷியல் படத்திற்கு இந்த நடிப்பு போதும் என்று ஒரு வரையறை வகுத்தால், அதனை மிகச்சுலபமாகப் பூர்த்தி செய்துவிடுவார் சிரஞ்சீவி. இந்த படமும் அந்த வரிசையில் சேர்கிறது. இந்த வயதிலும் ரசிக்கத்தக்க வகையில் ‘டான்ஸ்’ ஆடுகிறார்; காமெடி செய்கிறார்; அதோடு, கால மாற்றங்களுக்கேற்ற கதைகளையும் அவர் தேர்ந்தெடுக்கலாம். ரஜினி பாணியில் ‘ஜெயிலர்’ போன்ற படங்களைத் தர வேண்டிய நேரமிது. அதைவிடுத்து, மகன் ராம்சரணையும் தம்பி பவன் கல்யாணையும் பிரதியெடுத்துக்கொண்டு இப்போதும் ‘டூயட்’ பாடுவதை என்னவென்று சொல்வது?

‘காவாலா’வில் வந்த தமன்னாவா இது என்று பதற வைக்கிறது ‘போலா சங்கர்’ படத்தில் அவரது இருப்பு. அவரது அழகு, நடிப்பு எல்லாமே அச்சம் கொள்ளும் விதமாக உள்ளது..

கீர்த்தி சுரேஷுக்கு இதில் அதிக காட்சிகள். அதற்கேற்ப, அவரும் சரியான ‘மீட்டரில்’ நடித்துள்ளார். ‘மாஸ்டர்’ என்று சிரஞ்சீவியை விளிப்பதோடு, தன் பணியை முடித்துக் கொண்டுள்ளார் அவரது ஜோடியாக வரும் சுஷாந்த்.

கீர்த்தியின் பெற்றோர்களாக வரும் முரளி சர்மா – துளசி ஜோடி, தமிழில் நடித்த தம்பி ராமையா – சுதா ஜோடியின் பாத்திர வார்ப்பை ஈடு செய்யவில்லை. வில்லன்களாக வருபவர்களில் தருண் அரோரா மட்டுமே கொஞ்சம் தெரிந்த முகம்.

Bhola Shankar Movie Review

இவர்கள் தவிர்த்து ராஷ்மி கௌதம், ஸ்ரீமுகி போன்ற தெலுங்கு டிவி நட்சத்திரங்கள் திரைக்கதையில் தேவையற்ற இடங்களில் ‘கவர்ச்சி’யை வெளிப்படுத்தி கதைப்போக்கைச் சிதைக்கின்றனர். ’வேதாளம்’ நகைச்சுவையை அப்படியே இதிலும் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனால் வெண்ணிலா கிஷோர் உட்பட பல இளம் நகைச்சுவை நடிகர்கள் ’சிரிப்பு மூட்டுறதுன்னா என்ன’ என்று நம்மை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றனர்.

டட்லியின் ஒளிப்பதிவில் எல்லா பிரேம்களும் ‘பளிச்’சென்று இருக்கின்றன. ஆனால், அவற்றில் வழமையான தெலுங்கு பட அழகியல் அம்சங்கள் தவிர்த்து சிறப்பாக ஏதுமில்லை. ’வேற வழியே இல்ல’ எனும்விதமாகக் கொடுத்த காட்சிகளைக் கோர்த்திருக்கிறது மார்த்தாண்ட் வெங்கடேஷின் படத்தொகுப்பு.

மஹதி ஸ்வரசாகரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி இசை ’துடிப்பை’ அதிகரிக்கிறது.

சிவா, ஆதி நாராயணாவின் ‘வேதாளம்’ கதை உரிமத்தைப் பெற்று, அதிலிருந்த கடினமான விஷயங்கள் அனைத்தையும் களைந்துவிட்டு இந்த ‘போலா சங்கர்’ரை தந்திருக்கிறார் இயக்குனர் மெகர் ரமேஷ். இதற்குப் பதிலாக, சிரஞ்சீவியின் பழைய படமொன்றைப் பார்த்துவிடலாம் என்பதுதான் உண்மையான நிலவரம். இதிலும் கூட, தேவையே இல்லாமல் வன்முறை அதிகமாகத் திணிக்கப்பட்டுள்ளது. தன் படங்களைக் குடும்பத்துடன் பார்க்க வரும் ரசிகர்களை மனதில் கொண்டு, அது போன்ற அம்சங்களில் சிரஞ்சீவி போன்ற மூத்த நாயகர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

’ரீமேக்’ பரிதாபங்கள்!

’மங்காத்தா’வுக்குப் பிறகு தமிழில் அஜித் நடித்த அத்தனை படங்களும் ஏதோ ஒரு வகையில் வெற்றிப்படங்களாகவே கருதப்படுகின்றன. அவற்றைத் தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி மொழிகளில் ‘ரீமேக்’ செய்யும் முயற்சிகள் இப்போதுவரை நடந்து வருகின்றன. இறுதியாக வெளியான ‘துணிவு’ வரை அனைத்தும் அந்த வரிசையில் இருக்கிறது. ஆனால், அப்படி ரீமேக் ஆன படங்களில் ஒன்று கூட பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. இதனைக் கதையிலுள்ள குறை என்று சொல்வதா அல்லது அஜித்தின் செல்வாக்கு அவற்றைத் தாண்டியது என்று சொல்வதா எனத் தெரியவில்லை.

இதற்கு முன் தெலுங்கிலும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்ட ‘வீரம்’ படுதோல்வியைத் தழுவியது. ’நேர் கொண்ட பார்வை’யும் அந்த வரிசையில் சேரும். இந்த படங்களில் எல்லாம் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹேர்ஸ்டைலில் நடித்ததோடு, தனது உண்மையான வயது திரையில் தெரிய வேண்டுமென்று அஜித் மெனக்கெட்டிருப்பார். குறிப்பாக, ‘வேதாளம்’ படத்தில் அவரது ‘ஆலுமா டோலுமா’ மொட்டை தலை கெட்டப் ரசிகர்களை அதிரச் செய்தது. அந்த படத்தை ரீமேக் செய்ய விரும்பும் நட்சத்திர நாயகர்கள், அந்த கெட்டப்பை ஏற்கத் தயாராக இல்லை.

Bhola Shankar Movie Review

அங்குதான் தோல்வி ஆரம்பமாகிறது. ஒரு படத்தின் ‘யுஎஸ்பி’ எதுவோ, அதைக் கீழே போட்டு மிதித்தபிறகு வேறு என்ன மீதமிருக்கும்? ’போலா சங்கர்’ படத்திலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. அஜித்தின் ‘அப்பாவித்தனத்தை’, சிறிதளவு கூட திரையில் சிரஞ்சீவி பிரதிபலிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், அனிருத்தின் பின்னணி இசையும் வெற்றியின் ஒளிப்பதிவும் சேர்ந்து வேதாளத்தில் செய்த மாயாஜாலத்தை ‘போலோசங்கர்’ தொடக் கூட இல்லை.

‘வேதாளம்’ நூறு கோடி வசூலைத் தொட்டபோது, சென்னை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது. அதனை மீறி, அப்படத்தின் வெற்றி சிலாகிக்கப்பட்டது. இத்தனைக்கும், ‘வேதாளம்’ படத்தில் பல காட்சிகள் ‘கிரிஞ்ச்’தனமாகவே இருக்கும். ஒரு ரீமேக் படத்திலுள்ள குறைகளைக் களையாமல், அதனை அப்படியே பிரதியெடுத்தால் வெற்றிகள் எப்படித் தேடி வரும்? அப்படியொரு கஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறது ‘போலா சங்கர்’. இதன் பிறகாவது, அஜித் படங்களை ரீமேக் செய்து பரிதாபத்திற்கு உள்ளாகும் முடிவை பிற மொழி நாயகர்கள் கைவிடுவார்கள் என்று நிச்சயமாக நம்பலாம். ஏனென்றால், அந்த படங்களின் வெற்றியில் பெரும்பங்கினை அஜித் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட ரசிகர்கள் வேறு நாயகர்களுக்குக் கிடைப்பது மிக அரிது.

அதனால், இனிமேலாவது ‘அஜித் பட ரீமேக் பரிதாபங்கள்’ என்று தனி வீடியோவை உருவாக்கும் அளவுக்கு, யாரும் எந்த ரீமேக் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்!

உதய் பாடகலிங்கம்

கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவா பொங்கல்!

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ED கஸ்டடி? பொறியில் சிக்கிய பொன்முடி-டென்ஷனில் அமைச்சர்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel