தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு(வயது 77) உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 11) காலமானார்.
தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத பொக்கிஷமாக பார்க்கப்படும் திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளிவந்த ’16 வயதினிலே’
இந்த படத்தின் மூலம் இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்படும் பாரதிராஜாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
பாரதிராஜாவுக்கு மட்டுமின்றி அதில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோருக்கும் அவர்களது வாழ்வில் மறக்கமுடியாத படமாக அது அமைந்தது.
16 வயதினிலே மட்டுமின்றி கிழக்கே போகும் ரயில், கன்னிப் பருவத்திலே, மகாநதி, பொண்ணு பிடிச்சிருக்கு, எங்க சின்ன ராசா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
இதனால் இவரது ஸ்ரீ அம்மன் கிரியேஷசன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் படங்கள் என்றாலே வெற்றிதான் என்ற நிலை இருந்தது.
எனினும் அடுத்தடுத்த படங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட ராஜ்கண்ணு, பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோரின் உதவியால் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த கடந்த மே மாதம் ஒருநாள் குளியல் அறையில் தவறிவிழ கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இந்த செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
ராஜ்கண்ணு மறைவு குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “16 வயதினிலே”திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
எனது முதல் பட தயாரிப்பாளர்!
நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது முதல் படமான கிழக்கே போகும் ரயில் மூலம் எனது முதல் தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணு, எனது திரையுலக பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவர் மீது மிகுந்த மரியாதையும், அற்புதமான ஞாபகங்களையும் கொண்டு வந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!
இந்து பொது சிவில் சட்டம்: மத்திய அரசுக்கு திமுக ஐடியா!