பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகர் சித்திக்கை கட்டிப்பிடித்து அழுத வீடியோ போலியானது என்று நடிகை பீனா விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சித்திக் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச் செயலாளராக இருந்தார். மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்தார் என அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். சித்திக் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சித்திக்குக்கு அம்மா சங்கத்தில் பிரிவு உபச்சார விழா நடந்ததாகவும் அப்போது, நடிகை பீனா ஆண்டனி அவரை கட்டிபிடித்து அழுததாகவும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.
இதனால், அதிர்ச்சியடைந்த பீனா தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “சித்திக்கின் மகன் ஷாபியை தனக்கு சிறுவயதில் இருந்து தெரியும். அவர் திடீரென்று இறந்து போனார். அந்த சமயத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறுதிச்சடங்கில் என்னால் பங்கேற்க முடியவில்லை. பின்னர், அவரை அம்மா பொதுக்குழு கூட்டத்தின் போது சந்தித்தேன். இந்த சமயத்தில் அவரை கட்டி பிடித்து எனது வருத்தத்தை தெரிவித்தேன். நான் மட்டுமல்ல அங்கு வந்திருந்த ஏராளமானோர் அவருக்கு ஆறுதல் கூறினர்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னை ஒரு சகோதரி போலத்தான் அவர் எப்போதும் நடத்துவார். இந்த வீடியோவை சிலர் பரப்பி என் கேரக்டரை விமர்சனம் செய்கின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் குற்றச்சாட்டையும் தீர விசாரித்து தவறு இருந்தால் தண்டனை கொடுக்க வேண்டும்” என பீனா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ்க்கு முட்டு கொடுக்கும் பினராயி விஜயன்… கைதுக்கு தடை விதித்த நீதிமன்றம்!
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம்