கடந்த ஆண்டு வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ எப்படிப்பட்ட எதிர்ப்பலைகளை உருவாக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். சில மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியானபோதும் கூட, அது சர்ச்சைகளைக் குவித்தது.
இந்தச் சூழலில் அதன் இயக்குநர் சுதீப்தோ சென், தயாரிப்பாளர் விபுல் அம்ரித்லால் ஷா, நாயகி அடா சர்மா ஒன்றாக இணைந்து மீண்டும் ’பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’ படத்தைத் தந்திருக்கின்றனர்.
2001 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தில் நக்சல்பாரி இயக்கத்தவரை ஒழிக்கும் நோக்கில் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை இப்படம் பேசுகிறது என்பதைத் தெளிவாகச் சொன்னது ட்ரெய்லர். சரி, ஒரு திரைப்படமாக எத்தகைய அனுபவத்தை நமக்குத் தருகிறது இந்த ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’?
நீரஜா எனும் பெண் அதிகாரி
பஸ்தர் மாவட்டத்தில் மேலோங்கியிருக்கும் நக்சலைட்களின் ஆதிக்கத்தைத் தரைமட்டமாக்க, அங்கிருக்கும் பழங்குடி மக்களோடு நெருங்கிப் பழகுகிறார் ஐஜி நீரஜா மாதவன் (அடா சர்மா). அவர்களின் தினசரி வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஆர்வம் காட்டுகிறார்.
அந்த வகையில் மிலிந்த் காஷ்யப் (சுப்ரத் தத்தா) எனும் நபரின் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெறத் தன்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தன்று தனது வீட்டின் அருகே தேசியக் கொடியை ஏற்றுகிறார் மிலிந்த். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் அதில் பங்கேற்கின்றனர். அப்போது, அங்கு வரும் நக்சல்பாரி இயக்கத்தினர் மிலிந்தை வனத்திற்குள் இழுத்துச் செல்கின்றனர்.
சிறிய எச்சரிக்கையோடு தன்னை அவர்கள் விட்டுவிடுவார்கள் என்று நம்புகிறார் மிலிந்த். ஆனால், அவரைக் கொடூரமாகக் கொலை செய்கிறார் அக்குழுவின் தலைவனான லங்கா ரெட்டி (விஜய் கிருஷ்ணா). அந்தக் காட்சி, மிலிந்தின் மனைவி ரத்னாவை (இந்திரா திவாரி) மொத்தமாக உருக்குலைக்கிறது.
அதேநேரத்தில், அவரது மகன் ராமனை இழுத்துச் சென்றுவிடுகின்றனர் அந்த இயக்கத்தினர். கணவனை இழந்து, மகனைப் பிரிந்து சோகத்தில் தவிக்கும் ரத்னாவைத் தேற்றும் வகையில் அவருக்கு ‘சிறப்பு போலீஸ் அலுவலர்’ எனும் பதவியைப் பெற உதவுகிறார் நீரஜா. எஸ்பிஓவுக்கான பயிற்சி கிடைக்குமாறு செய்கிறார்.
அதேநேரத்தில், நக்சலைட் இயக்கத்தினரில் ஒருவராக மாறுகிறார் ரத்னாவின் மகன் ராமன். என்னதான் பஸ்தரில் நக்சலைட்கள் இயக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து நீரஜா ஈடுபட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை இடும் விதமாக நீதிமன்றத்தின் வழியாகச் சில சட்டப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்கிறார் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் நீலம் நக்பால் (ஷில்பா சுக்லா).
நக்சல்பாரி இயக்கம்
நக்சலைட்களால் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சமூகச் செயல்பாட்டாளர், எழுத்தாளர் வன்யா ராய் (ரெய்மா சென்) மீதும் குற்றம் சாட்டப்படுகிறது; அவருக்கு ஆதரவாக நீலம் வாதாடுகிறார். அறிவு வட்டத்தில் அங்கம் வகிக்கும் வன்யா ராய், நீலம் போன்றவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கங்களோடும், உள்நாட்டிலுள்ள நக்சல்பாரி இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பைப் பேணுகின்றனர்.
பெரும்பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குச் சாதகமான கருத்துகளைப் பொதுவெளியில் பரப்புகின்றனர். அந்த ‘லாபி’யை உடைக்க, நீலம் போன்றவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஆஜாராகிறார் உத்பல் (யஷ்பால் சர்மா). ஒருநாள் பஸ்தரில் உள்ள இரண்டு காவல்துறை முகாம்களை அடியோடு சிதைக்க முடிவு செய்கின்றனர் லங்கா ரெட்டி தலைமையிலான நக்சல்பாரி இயக்கத்தினர்.
அதனை முன்கூட்டியே அறியும் நீரஜா, தனக்குப் பெரும்படை வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், அவர் அதனைக் கேட்பதாக இல்லை. அதன் பலனாக, பஸ்தர் வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் பலியாகின்றனர்.
Ajith Kumar: வெளிநாட்டில் குடியேறுகிறாரா அஜித்?
அதனைக் கண்டு சோகத்தில் அழும் நீரஜா, அவர்களது மரணத்திற்குப் பழி வாங்கும் வகையில் நக்சல்பாரி இயக்கத்தினரின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா? இல்லையா? என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
அயர்ச்சி தரும் இந்தக் கதையைத் திரைமொழியின் துணை கொண்டு விறுவிறுப்பானதாக மாற்றாமல், அப்படியே காட்சியாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர் சுதீப்தோ சென்.
நீரஜா எனும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி நக்சலைட்களுக்கு எதிராகக் கடுமையாகப் போராடுவதாகக் காட்டினால், வனங்களில் இருக்கும் பழங்குடி மக்களோடு அவர் உறவு பாராட்டுவதாகச் சொன்னால், மொத்தக் கதையும் நம்பகமானதாக மாறிவிடும் என்று எண்ணியிருக்கிறார் இயக்குநர்.
அதனைச் செயல்படுத்தும் நோக்கில், நீரஜா ஒரு கர்ப்பிணி என்பதை அப்பாத்திரம் உணரும் கணத்தை நம் கண் முன்னே காட்டுகிறார். அதுவே, குறிப்பிட்ட காட்சிகளுக்குப் பிறகு இயக்குநர் என்ன சொல்வார் என்பதை முன்கூட்டியே நமக்குப் புரிய வைக்கிறது.
ஏன் இந்த ‘ட்ராமா’
தொலைக்காட்சி சீரியல்களில் மருமகளை மாமியார் கொடுமைப்படுத்தும்போதோ அல்லது மாமியாருக்கு எதிராகக் கொடூரச் செயல்களில் மருமகள் ஈடுபடும்போதோ, ‘ஏன் இந்த ஓவர் ட்ராமா’ என்று மனதில் தோன்றும். ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’ அதற்குக் கொஞ்சமும் குறையாத வகையில் திரையில் ஓடி நிற்கிறது.
நக்சலைட் இயக்கத்தினர் மீது கொஞ்சம் கூட இரக்கம் தோன்றாத வகையில், அவர்களை வில்லன்களாகச் சித்தரிக்க எண்ணியிருக்கிறார் இயக்குனர் சுதீப்தோ சென். அது அவரது விருப்பம். அதற்காக, பணம் மட்டுமே அவர்களது பிரதான நோக்கம் என்று திரையில் காட்டுகிறார்.
அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் அரசு எந்திரம் எவ்வாறு போராடுகிறது என்பதையும் சொல்கிறார். காவல் துறையினர் நேர்மையாகப் போராடுவதற்கு எதிராக, ஆட்சியாளர்களில் சிலரே செயல்படுவதாகக் காட்டுகிறார். பலமுறை பல காலகட்டங்களில் பல கலைஞர்களால் திரைப்படங்களில் இது போன்று சித்தரிப்புகள் நிகழ்ந்துள்ளன.
மின்னம்பலம் டாப் எம்பிக்கள் விருது விழா!
ஏன், ஆர்.கே.செல்வமணி தந்த ‘கேப்டன் பிரபாகரன்’ கூட கொஞ்சமாக வீரப்பன் வாழ்வை ஒட்டி உருவாக்கப்பட்ட ஒரு கதை தான். ஆனால், அது போன்ற படங்களில் ‘இது உண்மைச் சித்தரிப்பு’ என்று எங்கும் சொல்லப்படவில்லை. மாறாக, ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’யின் தொடக்கமே ‘இது ஒரு உண்மைக்கதை’ என்ற எழுத்துருக்கள் உடன் ஆரம்பிக்கிறது.
கூடவே, சினிமாவுக்கான சுதந்திரத்தைக் கொண்டு சில பெயர்களையும் சம்பவங்களையும் கற்பனையாகச் சித்தரித்ததாகச் சொல்கிறது. அந்தச் சித்தரிப்புதான், ஒரு திரைப்படமாகத் தந்திருக்க வேண்டிய சுவாரஸ்யங்களை அடியோடு உருக்குலைத்திருக்கிறது.
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் நடுவே, ஒரு பச்சிளம் குழந்தையை நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் கையில் தூக்குவதாக ஒரு காட்சி இப்படத்தில் வருகிறது. அதற்கடுத்த நொடியே, அவர் அந்த சிசுவை நெருப்பில் தூக்கி வீசுவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அந்த ஒரு காட்சியே, ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’ தரும் காட்சியனுபவம் எத்தகையது என்பதற்கான ஒரு சோறு பதம்.
படம் எப்படி இருக்கிறது
இதுவே யதார்த்தம் என்று ஏற்றுக்கொள்பவர்களால் இப்படம் கொண்டாடப்படலாம்: அவர்கள் அதனைச் செவ்வனே செய்யட்டும்! உண்மையைச் சொன்னால், இந்த திரைப்படம் காவல் துறை, நக்சலைட் இயக்கங்களின் பார்வைகளை முன்வைக்காமல், வெறுமனே சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பழங்குடியின மக்களின் பார்வையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
அவர்களது வாழ்வின் வலிகளும், வேதனைகளும் காட்சிகளின் மீது படியுமாறு செய்திருக்க வேண்டும். அந்த எளியவர்களின் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, இயக்குநர் சுதீப்தோ சென்னும் அமர்நாத் ஜாவும் இணைந்து தங்களுக்குத் தோன்றிய விதத்தில் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை ஆக்கியுள்ளனர். அந்த ஆக்கத்தின் வழியாகத் தாங்கள் விரும்பிய உலகத்தைப் படைத்துள்ளனர்.
Amigo Garage: அமீகோ கேரேஜ் – திரை விமர்சனம்!
காஸ்ட்டிங் இயக்குனர் முகேஷ் சாப்ரா, ஒளிப்பதிவாளர் ராகுல் தருமன், படத்தொகுப்பாளர் தேவ் ராவ் ஜாதவ், இசையமைப்பாளர் பிஷாக் ஜோதி, தயாரிப்பு வடிவமைப்பாளர் நரேந்திர ரகுரிகர் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் அதற்குத் திரையில் உருவம் தர உதவியிருக்கின்றனர்.
அடா சர்மா, யஷ்பால் சர்மா, இந்திரா திவாரி, விஜய் கிருஷ்ணா, அனங்கா பிஸ்வாஸ், ஷில்பா சுக்லா என்று பல நடிப்புக்கலைஞர்கள் இயக்குநருக்குத் தோள் கொடுத்திருக்கின்றனர். அனைவரது ஒருங்கிணைப்புடனும் ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’ ஒரு படைப்பாக உருவம் பெற்றுள்ளது.
ஆனால், அது ரசிகர்களான நமக்கு ‘உயிர்ப்பினை’த் தருகிறதா? என்பதுவே கேள்வி. இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு இப்படம் ‘அருவெருப்பாக’த் தோன்றக்கூடும். வலதுசாரி சிந்தனையாளர்களுக்கு ‘முழுமையான உண்மை’யாகத் தெரியக்கூடும்.
ஆனால் நாட்டிலுள்ள அரசியல், சமூகப் பிரச்சனைகள் குறித்து எதுவுமே தெரியாத சாதாரண ரசிகர்களுக்கு இப்படம் என்ன தருகிறது? இப்படத்தில் உண்மை எத்தனை சதவிகிதம் உள்ளது? என்ற கவலை அவர்களுக்குத் தேவையற்ற ஒன்று.
மனதைத் தொடும் வகையில் காட்சியாக்கம் அமைந்திருந்தால், இதில் வரும் கதாபாத்திரங்களின் கஷ்டங்களைக் காலத்திற்கும் அவர்கள் தங்களது மனதில் நிறைத்துக் கொள்வார்கள். அதற்கு, சுவாரஸ்யம் தரும் வகையில் திரையில் அப்படம் ஓடியாக வேண்டும்.
‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’ அப்படியொரு சுவாரஸ்யத்தைக் கொஞ்சம் கூட தராமல் ஏமாற்றியிருக்கிறது. மொத்தத்தில் இந்த ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’ ஏமாற்றம் தரும் காட்சியாக்கம்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rain Update: நோட் பண்ணிக்கங்க மக்களே… தொடர்ந்து நாலு நாளைக்கு மழை இருக்கு!
அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
CSK: விழுந்தது அடுத்த அடி… ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட வீரர்!
Comments are closed.