ஓர் அழகான காதல் கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல் டைம்லூப் வகை ஒரு சயின்ஸ் ஃபிக்க்ஷன் த்ரில்லராக வந்திருக்கும் படம் பனராஸ்.
கடந்த வாரம் இந்துக்களின் ஆன்மீக பூமியான காசியை, கங்கை ஆற்றை சுத்தப்படுத்தியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த வாரம் காசியை சுற்றி வருகிறது பனாரஸ்.
படத்தின் காமிரா கதைக்காக காசி சென்றார்களா, காசியை மக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக பனாரஸ் படம் எடுக்கப்பட்டதா என்கிற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
பட ஆரம்பத்திலேயே நாயகி சோனல் மோண்டோரியோவிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன் ஜயீத் கான், அறிமுக நடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல.
தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லும்போது இது உண்மைதானா என்று நினைக்க வைக்கிறது.
அவர்களுக்குள் ஏற்படும் உரசலில் சோனல், பனாரசுக்கு பறந்து விட, அவளிடம் மன்னிப்புக் கேட்க ஜயீத்தும் அங்கே வர, நீறு பூத்த காதல் மீண்டும் நெருப்பாகிறது.
இரண்டாம் பாதியில் வரும் டைம் லூப் காட்சிகளும் உண்மைதானா என்று வியக்க வைக்கின்றன. ஆனாலும் அதையும் விஞ்சிய ஒரு அறிவியல் புனைவு உள்ளே இருக்கிறது என்பது ஆச்சரியம். எல்லாவற்றையும் ஒரு காதல் கயிற்றால் கட்டிக் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர்.
அடுத்த வீட்டுப் பெண் போன்ற வனப்பில் கதாநாயகி சோனல் கவர்கிறார். அச்யுத் குமார் இல்லாத கன்னட படங்கள் இல்லை போலும். இதில் சோனலின் சித்தப்பாவாக வரும் அவரது கேரக்டரை கணிக்க முடியவில்லை. ஜயீத்தின் பனாரஸ் நண்பராக டெத் போட்டோகிராபர், ஆட்டோ ஓட்டுநர், நாயகனின் நண்பர் எனப் பலமுகம் காட்டியிருக்கும் சுஜய்சாஸ்த்ரி கவனம் ஈர்க்கிறார். அவருக்குள் இருக்கும் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும், படம் முடியும்போதும் நம்மை கலங்கடித்து அனுப்புகிறார்.
கங்கை பாயும் ஆன்மிக பூமியான பனாரஸ் நகரை இதுவரை யாரும் காட்டிடாத கோணத்தில் காட்டி சிலிர்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணிஇசையில் பழனிபாரதியின் வரிகளில் பாடல்கள் கேட்கக் கேட்க இதமாக இருக்கின்றன.
இயக்குநர் ஜெயதீர்த்தாவுக்குக் காதல் கதையும் காட்சிகளும் நன்றாக வருகின்றன. அதற்கும் டைம் டிராவல் டைம் லூப் போன்ற விசயங்களைக் கலந்து சொதப்பியிருக்கிறார்.
பனாரஸ் : பட்டு இல்லை ஆனால் பட்டு போன்றது. காசி நகரையும் கங்கை அழகையும் கண்டுகளிக்க வைக்கும் காட்சிகளுக்காக பார்க்கலாம்.
இராமானுஜம்
பால் விலை உயர்வு எபெக்ட்: இனிக்கும் டீ, கசக்கும் விலை!
ஆர்.எஸ்.எஸ்.பேரணி: மத்திய அரசுக்கு பயந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!