விஜய்க்கு விதித்த அபராதத்துக்கு தடை!

Published On:

| By Kalai

புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.  அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்து, வருமானத்தை மறைத்ததற்கான 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி,  விசாரணையை செப்டம்பர் 16க்கு தள்ளிவைத்துள்ளார்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel