அரசியலில் ஏற்படும் கூட்டணிகளை விட சினிமாவில் ஏற்படும் கூட்டணிகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பும் மதிப்பும் அதிகம். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான கூட்டணிதான் பாலா-சூர்யா கூட்டணி.
இந்த கூட்டணியில் உருவாகிக் கொண்டிருந்த வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக வந்த செய்தி சூர்யா, பாலா ஆகிய இரு ஜாம்பவான்களின் ரசிகர்களையும் வருத்தப்பட வைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் காண்போரின் மனதை எல்லாம் முதல் பாதியில் லேசாக்கி பிற்பாதியில் டன் டன்னாக கனத்த உணர்வை சுமந்துகொண்டு செல்ல வைத்தவர் பாலா. யார்யா இது… என்று சேது முதற்கொண்டு சிலிர்த்துக் கிடந்தது தமிழ் திரை உலகம்.
சூர்யா: நந்தாவுக்கு முன் நந்தாவுக்கு பின்
சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது படத்தில் சூர்யாவை தனது கஸ்டடிக்குள் கொண்டுவந்தார் சூர்யா. ஆமாம்… பாலாவின் நடிகர் தேர்வு, அவரது இயக்கம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, கஸ்டடி என்ற வார்த்தைதான் பொருத்தமானது.
அந்த காலகட்டத்தில் நடிகர் சூர்யா அரும்பு மீசையும் குறும்புப் பார்வையும் கொண்ட ஒரு சாதாரண சாக்லேட் ஹீரோதான். இந்த நிலையில்தான் பாலா என்ற இரும்புப் பட்டறைக்குள் நுழைகிறார் சூர்யா.
நந்தா படத்தைப் பற்றி அப்போது ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியளித்த இயக்குனர் பாலா, ‘சேது என் நண்பன். நந்தா நான் தான்…’ என்று சொல்லியிருந்தார். இதே தலைப்பில்தான் அந்த பேட்டியும் வந்திருந்தது. அதாவது பாலா தன்னையே ஒரு கதாபாத்திரமாக்கி அதில் நடிக்க சூர்யாவை தேர்வு செய்தது அப்போது ஆச்சரியமாக பேசப்பட்டது.
’நந்தா’ வெளியானதும் அதுவரை சூர்யா மீது கட்டமைக்கப்பட்ட விமர்சன பிம்பங்கள் அத்தனையும் உடைந்து சுக்குநூறாகின. பழைய சூரியாவை உறித்து தூரப் போட்டுவிட்டு புதிய சூர்யாவை வெளிச்சம் போட்டுக் காட்டினார் பாலா.
நந்தா படத்திற்கு பின் சூர்யாவை தமிழ் சினிமா இயக்குநர்களும், சினிமா பார்வையாளர்களும், சினிமா விமர்சகர்களும் மிரட்சியுடன் பார்த்தனர். அந்தளவுக்கு சூர்யாவை முழுமையான பண்பட்ட நடிகராக மாற்றி இருந்தார் இயக்குநர் பாலா.
தனக்கு பாலா ஏற்படுத்திக் கொடுத்த இந்த திருப்புமுனைக்கு நன்றிக் கடனாகத்தான் பிதாமகன் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பாலா கேட்ட போது, எவ்வித ஈகோவும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டார் சூர்யா.
பிதாமகன் படத்தில் சூர்யாவின் இன்னொரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தார் பாலா. அதன் பின் நடிப்பில் பல்வேறு உச்சங்களை தொட்டார் சூர்யா. அதற்கு அடித்தளமிட்டு கொடுத்தவர் இயக்குநர் பாலாதான். அந்த நன்றி மறக்காத வகையில்தான் பாலாவின் இயக்கத்தில் சூர்யா தானே நடித்து தயாரிக்க ஒப்புக்கொண்ட படம் வணங்கான்.
பாலா- சூர்யா: கோடு விழுந்தது எங்கே?
வித்தியாசமான ஹீரோ என்று பெயர் வாங்கிய பிறகு தனது சினிமாக்களை தேர்ந்தெடுப்பதில் தெளிவான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார் சூர்யா. அதாவது தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் படத்தின் முழுமையான திரைக்கதை வடிவம் தயாரிக்கப்பட்டு அதனை முழுமையாக படித்த பின்புதான் படப்பிடிப்பிற்கு செல்வது சூர்யாவின் வழக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது எனும் பேச்சு தொடங்கியபோது, ’இந்தப் படத்தில் உனக்கு மீனவர் கதாபாத்திரம். அதோடு காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி’ என்று பாலா சொன்னதும் சூர்யாவுக்கு உடனே பிடித்திருக்கிறது. அதனால் அந்தப் படத்தைத் தாமே தயாரிப்பது என முடிவு செய்த சூர்யா.பாலா மீது இருந்த நம்பிக்கையில் படப்பிடிப்பிற்கு சென்றார்.
கதை நிகழும் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக வீடு ஒன்றையும் கட்டி முடித்திருந்தார் சூர்யா. படப்பிடிப்பு முடிந்த பின் அந்த வீட்டை ஒரு மீனவ குடும்பத்திற்கு இலவசமாக கொடுப்பது என சூர்யா முடிவு செய்திருந்தார்.
14 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற காலத்தில் ஒரு நாள் கூட அந்த வீட்டை பயன்படுத்தவில்லை இயக்குனர் பாலா. இதுமட்டுமல்லாமல் ஒரே காட்சியை வழக்கம்போல பலமுறை எடுத்திருக்கிறார் பாலா. இது சூர்யாவுக்கு நெருடல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
நிராகரிக்கப்பட்ட நிறைய திரைக்கதைகள்
இன்னமும் பாலா தன்னை நந்தா காலத்து நடிகராகவே ட்ரீட் செய்கிறாரோ என்ற எண்ணம் சூர்யாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. பாலாவின் பழைய பாணி ஷூட்டிங் நடைமுறைகளில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை.
மேலும் அவரது பல்வேறு சந்தேகங்களுக்கு பாலாவின் பதில்களில் சூர்யாவிற்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து யாரிடமும் கூறாமல் சென்னை வந்து விட்டார் சூர்யா.
இதனால் அதிர்ச்சியமடைந்த பாலா மேற்கொண்டு படப்பிடிப்பை தொடராமல் படப்பிடிப்பு குழுவுடன் சென்னை திரும்பினார். அதன் பின் வணங்கான் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சுதா கொங்கரா களத்தில் இறங்கினார். சூர்யா -பாலா இடையே அவர் நடத்திய பேச்சுவார்த்தையில், முழுமையான திரைக்கதை வடிவத்தை பாலா கொடுத்த பின் வணங்கான் படப்பிடிப்பை தொடரலாம் என சூர்யா நிபந்தனை விதித்தார்.
பாலாவும் அதனை ஏற்றுக் கொண்டார். கதையாசிரியரும், இயக்குநருமான விஜி தயார் செய்து கொடுத்த இரண்டு திரைக்கதை வடிவமும் சூர்யாவால் நிராகரிக்கப்பட்டது. அதன் பின் எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் வசனகர்த்தா ஜெயமோகன் இருவரும் எழுதிக் கொடுத்த திரைக்கதை வடிவமும் சூர்யாவுக்கு திருப்தி தரவில்லை.
திருவண்ணாமலையில் இயக்குநர்கள் ஏ.எல்.விஐய், வசனகர்த்தா அஜயன்பாலா, விஜி போன்றவர்கள் கலந்துகொண்ட விவாதத்தில் இறுதிசெய்யப்பட்ட திரைக்கதையையும் சூர்யா நிராகரித்துவிட்டார்.
உடைந்த கூட்டணி!
இத்தனை நிராகரிப்புகளுக்குப் பின்னர் இன்னொரு திரைக்கதையோடு இருவரும் சேர்ந்து செயல்படுவது சாத்தியமில்லை என்பதை சூர்யா, பாலா இருவருமே உணர்ந்துவிட்டனர். இந்த நிலையில் வேறு வழியின்றி வணங்கான் படத்தில் இருந்து பாலாவும், சூர்யாவும் பரஸ்பரம் விலகிக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இதை பாலாவே அதிகாரபூர்வமாக அறிவிக்கட்டும் என்று சூர்யா சொல்லிவிட்டார்.
இந்தப் பின்னணியில்தான் டிசம்பர் 4 ஆம் தேதி மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழுநம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே, வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பணிகள் தொடரும்” என்று இயக்குநர் பாலா கூறியிருக்கிறார்.
இயக்குநர் பாலா அறிக்கை வெளியிட்ட ஒரு மணிநேரத்தில் இதை மேற்கொள் காட்டி, “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வணங்கான் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்” என்று அறிவித்தார் சூர்யா.
சூர்யா தரப்பில், இந்தப் படத்துக்கு இதுவரை சுமார் பத்து கோடி வரை செலவாகிவிட்டது. இருந்தாலும் திரைக் கதையில் திருப்தி இல்லாமல் படத்தைத் தொடர்வதில் பலனில்லை என்று முடிவு செய்ததால் இருவரும் சுமுகமாகப் பேசி விலகிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
பாலாவின் மன வலி
பாலா என்கிற படைப்பாளியின் சிந்தனை மூலம் முழுமையான நாயகன் ஆனார் சூர்யா. ஆனால் இப்போது காலமாற்றம் காரணமாக பாலாவின் சிந்தனை, படப்பிடிப்பு பாணி, சூர்யாவுக்குப் பழசாகத் தெரிகிறது. இதுதான் பிரிவுக்கான அடிப்படை காரணம் என்பதை பாலா வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லாமல் சொல்கிறது.
“நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல்வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் ” என்கிற வரிகளில் பாலா என்கிற உன்னத படைப்பாளியின் இயலாமையை வலியை உணர முடிகிறது.
–இராமானுஜம்
வேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!
தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா