விஷாலின் கண்ணை தைத்து விட்டேனா? – இயக்குநர் பாலா பரபரப்பு பதில்!

Published On:

| By Kumaresan M

மதகதராஜா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, நடிகர் விஷால் மேடையில் பேசிய போது அவரின் உடல் நடுங்கியது. மைக்கை பிடித்து பேச முடியாதபடி கையும் நடுங்கியது. கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது. காய்ச்சல் காரணமாக விஷாலுக்கு கை நடுங்கியதாக விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் அந்த படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், ‘என்னை இப்படி பார்த்ததேயில்லை, என்ன ஆச்சு’ என நிறைய பேர் எனக்காக கண்ணீர் விட்டு அழுதார்கள். என்னோட உடல் நிலை குறித்து நிறைய பேர் நலம் விசாரிச்சாங்க. பூ விற்கிற அம்மா, தூய்மையாளர் அம்மா என நிறைய அன்புள்ளங்கள் நான் நல்லா இருக்கனும்னு உண்மையா நலம் விசாரிச்சாங்க. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் புண்ணியம் செஞ்சிருக்கனும்’ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, அவன் இவன் படத்தில் விஷால் நடித்த போது, கண்ணை மேலே நோக்கி பார்த்து கொண்டிருக்கும்படி நடிக்க வேண்டியது இருந்தது. இதற்காக, இயக்குநர் பாலா விஷாலின் கண்ணை தைத்து விட்டார். அப்போதிருந்தே, விஷாலுக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக சமூகவலைத் தளத்தில் கூறி வந்தனர்.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு வணங்கான் பட வெற்றி விழாவில் இயக்குநர் பாலா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,’ விஷால் உடல் நலம் பாதித்ததற்கு அவன் இவன் படத்தில் கண்குறைபாடுள்ளது போன்று எடுத்த காட்சிகள்தான் காரணமென்று சிலர் பரப்பி வருகின்றனர். இன்னும் சிலர் அவரின் கண்ணை நான் தைத்து விட்டதாக கூறுகின்றனர். இதில், நான் என்ன சொல்வது. அவரவருக்கு தோன்றியதை பேசுகிறார்கள். இதை, நான் கண்டு கொள்ள தேவையில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel