திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தல்: பாக்யராஜ் வெற்றி!

Published On:

| By Monisha

சென்னை வடபழனியில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் மற்றும் நடிகருமான கே.பாக்யராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் 8 மணிக்குத் தொடங்கியது. 2022-24 ஆண்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவுகள் இன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் இரவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று மாலையே முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பாண்டில் எழுத்தாளர் சங்கத் தலைவராக உள்ள பாக்கியராஜ் 192 வாக்குகள் பெற்று 40 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். பாக்கியராஜை எதிர்த்து எதிரணியில் போட்டியிட்ட எஸ்.ஏ. சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துத் தோல்வியுற்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ் “எழுத்தாளர் சங்கத்திற்கு நல்லது நடக்கவேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் எழுத்தாளர்கள் இந்த வெற்றியைக் கொடுத்துள்ளார்கள்.

அதன்படி அவர்களின் கதைக்கான பாதுகாப்பு, கதை உரிமை, ஊதியம் இவையனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தோம். அதனைக் கண்டிப்பாகச் செய்யவுள்ளோம்.

இதில் வெற்றி தோல்வி என்று எதுவும் கிடையாது, அனைவரும் ஒன்றுதான். இது எங்கள் அணியின் வெற்றியல்ல எங்கள் சங்கத்தின் வெற்றியாகத்தான் கருதுகிறேன். இனி போட்டி பொறாமைகள் அனைத்தையும் ஓரம் தள்ளிவிட்டு, சங்கத்திற்கு எது நன்மையோ அதனைச் செய்யவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மோனிஷா

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: இரவுக்குள் முடிவுகள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share