ஆன்லைனில் பாலியல் தொழில்: வைரலில் பகாசூரன் டிரைலர்!

Published On:

| By Prakash

’பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன்.ஜி. அவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ’வண்ணாரப்பேட்டை’.

வணிகரீதியாக தோல்வியடைந்த படம். இரண்டாவதாக மோகன்.ஜி இயக்கிய திரௌபதி தமிழகத்தில் நிலவிவரும் ஜாதிய பிரச்சினையை, அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் பற்றியும், அரசியல் ரீதியாக பேசும் படமாக இருந்தது.

படம் வெளியான பின்பு தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசை அதிர வைத்தது. ரூ.65 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பிற்போக்குதனமான, நாடக பாணி, வலதுசாரி சிந்தனை படம் என்கிற விமர்சனங்களை கடந்து திரையரங்குகளில் 16 கோடி ரூபாயை வசூல் செய்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் மதமாற்ற அரசியலை பேசியது.

மதவாதிகள், பாஜக இந்தப் படத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டபோதும் வணிகரீதியாக பெரும் வெற்றியை பெறவில்லை.

அடுத்ததாக ‘ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பகாசூரன்‘ படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆணவப் படுகொலை, ஜாதி, மதமாற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு பகாசூரன் கதைகளம் இருப்பதை டிரைலர் உறுதி செய்கிறது.

bakasuran movie trailer in viral

பாலியல் தொழிலாளியாகும் கல்லூரி மாணவிகள் குறித்தும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்து பேசும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.

இயக்குநர் செல்வராகவன் – நட்டி நட்ராஜ் இருவரின் நடிப்பும் கவனம் பெறுகிறது.

‘வாழ்க்கையில் எது நடந்தாலும் எதிர்த்து போராட வேண்டுமே தவிர, இப்படியெல்லாம் இறங்கிவிடக்கூடாது.

ஒழுக்கத்தை விட்டோம் என்றால் எல்லாம் நாசமாக போய்விடும்” என்கிற வசனம் படத்தின் திரைக்கதை என்னவாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கல்லூரிகள் மற்றும் ஆன்லைன் ஆப்களின் வழியே நடக்கும் பாலியல் தொழில் குறித்த பிரச்சினையை மையமாக கொண்டு பகாசூரன் படம் இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தின் முன்னோட்டத்தை பாஜக தலைவர்களில் ஒருவரான H.ராஜா தனது சமூகவலைத் தளத்தில் வெளியிட்டு எல்லோரும் திரையரங்கு சென்று பகாசூரன் படம் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதால் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

பகாசூரன் திரைப்படம் இயக்குநர் மோகன்.ஜியின் புதிய முயற்சிக்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இராமானுஜம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel