திரைப்படங்களில் சமகாலப் பிரச்சனையொன்றைப் பேசும்போது, அது பற்றிய தகவல் முன்கூட்டியே வெளிவராமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். சிறிது பிசகினாலும், அப்படம் பேசும் விஷயம் ஒன்றுமேயில்லை என்பதாகச் சூழல் மாற்றப்பட்டுவிடும்.
’திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’ மூலமாகச் சர்ச்சைகளை உருவாக்கிய இயக்குனர் மோகன் ஜி தனது நான்காவது படமான ‘பகாசுரன்’, இளம்பெண்களை விபசாரப் படுகுழிக்குள் தள்ளும் சில மொபைல் செயலிகளைப் பற்றிய கதை என்ற தகவலைப் பகிர்ந்தபோதும் அப்படித்தான் தோன்றியது.
அப்போதே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் சிறிது தாமதமாகத் தற்போது வெளியாகியுள்ளது.
உண்மையில், படத்தின் உள்ளடக்கம் அவரது பேச்சைவிட பன்மடங்கு வீரியமாக இருக்கிறதா?
அப்பாவிப் பெண்களே குறி!
ஆள் அரவமற்ற இடத்திற்கு ஒரு மாணவியை அழைத்துச் செல்லும் நடுத்தர வயது நபரைப் பின்தொடர்ந்து வருகிறார் ஒரு மனிதர். அந்த பெண்ணைத் தப்பியோடச் சொல்லிவிட்டு, அவரைக் கொடூரமாகக் கொல்கிறார். அவரது வயது 50க்கும் மேல். அந்த கொலை நிகழும் விதமே, அவர் எப்படிப்பட்ட இழப்பைச் சந்தித்திருப்பார் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கிறது.
இன்னொரு புறம் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, தனது புலனாய்வுத் திறனால் காவல் துறைக்கு உதவி வருகிறார். ஒருநாள் அவரது சகோதரரின் மகள் தற்கொலை செய்துகொள்கிறார். அப்பெண்ணின் மொபைலை ஆராயும்போது, அவர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வருகிறது. நன்றாகப் படித்து, நல்ல வேலையில் பணிபுரிந்து, திருமணமும் நடக்க இருந்த நிலையில், இப்படியொரு நிலைக்கு அவர் ஆளானது ஏன்?
அதற்கான காரணத்தைத் தேடிச் செல்கையில், அவரைப் போன்று பல நூறு இளம்பெண்கள் இப்படியொரு கோரப் பிடியில் சிக்கியிருப்பது தெரிகிறது. இந்த உண்மையைச் சொன்னதும் அழுது ஓலமிடும் அவரது சகோதரர், அது பற்றி போலீசில் புகார் கொடுக்க மறுக்கிறார். பெற்றோர்களின் தயக்கம்தானே இது போன்ற குற்றங்கள் ஆறாய்ப் பெருக வழி வகுக்கிறது என்று எண்ணுபவர், அதேபோல பாதிக்கப்பட்ட ஒரு தகப்பனைத் தேடத் தொடங்குகிறார்.

இறுதியில் இவ்விரண்டு மனிதர்களும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அப்போது, அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா என்பதோடு படம் முடிவடைகிறது.
முதல் கதையில் நட்டியும், இரண்டாவது கதையில் செல்வராகவனும் இடம்பெற்றுள்ளனர். ‘பழிக்குப் பழி’ என்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், இது செல்வராகவனின் பார்வையில் கதை சொல்வதாகவே அமைந்திருக்கும்.
திரௌபதி, ருத்ர தாண்டவம் இரு படங்களிலுமே நாயகன் ஒரு பக்கம் அதிரடி நிகழ்த்தினால், அதற்கிணையான இன்னொருவர் எதிர்ப்புறத்தில் இருந்து அதனைக் கண்டறியும் நோக்கில் பயணிப்பார்.
இதிலும் அப்படித்தான். ஆனால், இருவரது நோக்கமும் ஒன்றுசேரும்போது அந்த காட்சி பலப்படுவதற்குப் பதிலாக ரொம்பவும் பலவீனமானதாக மாறியிருப்பது படம் தொடங்கும்போது உண்டான பரபரப்பை ’பெப்பரப்பே’ என்றாக்குகிறது.
காணாமல்போன நேர்த்தி!
திரௌபதி, ருத்ர தாண்டவம் இரு படங்களிலும் மையக்கதை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் திரைக்கதையும் காட்சியாக்கமும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படங்களின் பட்ஜெட் குறைவால் ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு போன்ற நுட்பங்கள் சில குறைகளைக் கொண்டிருக்கும்.
இந்த படத்தில் அத்தடைகளைத் தாண்டியிருக்கிறார் மோகன் ஜி. ஆனாலும், முந்தைய படங்களில் இருந்த நேர்த்தியான காட்சியாக்கம் இதில் இல்லை. அதனால், பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய காட்சிகள் ஜீவனற்று இருக்கின்றன.
முக்கியமாக, மொபைலில் உள்ள டேட்டிங் செயலிகளால் இளம் பெண்கள் படுகுழிக்குள் விழுவதாகப் பேட்டிகளில் பேசியிருந்தார் மோகன் ஜி. ஆனால், ‘மெய்நிகர் விபச்சாரம்’ (Virutal Prostituion) செய்வதாகக் காட்டப்படுவதைத் தவிர, ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட செயலி மூலமாக விபச்சாரம் செயல்படுகிறது என்பதைத் தவிர அந்த செயலிகளைப் பற்றி விழிப்புணர்வூட்டும் விதமாக ஏதும் சொல்லவில்லை.
அதனாலேயே, இறுதிக் காட்சியில் குழந்தைகள் கையில் மொபைல் இருப்பதைப் பார்த்து செல்வராகவனும் நட்டியும் வருத்தப்படுவது தாக்கம் ஏற்படுத்தவில்லை.
என்னதான் மிட்ஷாட், டூஷாட் என்று தெளிவாக காட்சிகளை வடிவமைத்தாலும், பார்வையாளர்களின் உணர்வுகளைத் தொடும் வகையில் அதன் ஆக்கம் அமையவில்லை. ’எல்லாமே அமையறதுதான்’ என்றொரு வார்த்தை திரையுலகில் வெகு பிரபலம். அதுவே இங்கு நினைவுக்கு வருகிறது.

செல்வராகவன், நட்டியின் பாத்திரங்கள் ஒரேமாதிரியான பிரச்சனையைச் சந்திக்கின்றன என்பதோடு முடிந்துபோகாமல், இரண்டிலும் சம்பந்தப்பட்ட மனிதர்களும் ஒரேமாதிரியான பீடத்தில் இருப்பவர்கள் தான் என்று காட்டியிருந்தால் திரைக்கதையில் இன்னும் ‘இறுக்கம்’ கூடியிருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தனியார் கல்வி நிறுவனத் தாளாளர் ஒரு இளம்பெண்ணுடன் அரை நிர்வாணமாக இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அது தொடர்பாகப் புலனாய்வுச் செய்திகளும் சிறகடித்துப் பெருகி ஒருகட்டத்தில் காணாமல் போயின.
சமீபத்தில் கூட பெங்களூருவில் ஒரு பனிரண்டாம் வகுப்பு மாணவி பள்ளி முதல்வரால் கொடூரமாகப் பலியானதாகச் செய்திகள் வந்தன. இது போன்றவற்றை ஒன்றிணைத்தால் நிச்சயம் ஒரு கமர்ஷியல் பட கதை கிடைத்துவிடும். ஆனால், லாஜிக் சார்ந்த கேள்விகளை மீறி திரையில் ஓடும் கதையுடன் ஒன்ற சிறப்பான நடிப்பு அமைய வேண்டும். அந்த வகையில் ‘பகாசுரன்’ திருப்தியைத் தரவில்லை.
துருத்தல்கள் எதற்கு?
பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தியின் தகப்பனாக நடித்துள்ளார் செல்வராகவன். வசனம் பேசும்போது அவரது முகம் ரோபோ போல இருந்தாலும், அங்க அசைவுகளைப் பொறுத்தவரை அவரிடம் இருந்து அபாரமான உடல்மொழி வெளிப்படுகிறது. சாணிக்காயிதம், பீஸ்ட் இரண்டிலும் செல்வாவின் முகம் உறைந்த பிரேம்களில் இடம்பெறாதது இங்கு நினைவுக்கு வருகிறது.
போலவே, ஆக்ஷன் காட்சிகள் அளவுக்கு நட்டி சாந்தமாக வசனம் பேசும் காட்சிகள் இயல்பாக இல்லை.
மீண்டும் வில்லனாக ராதாரவி நடித்துள்ளார்; அவருக்குப் பதிலாக எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களைப் பயன்படுத்தியிருந்தால் புது அனுபவமாக இருந்திருக்கும்.
ராமச்சந்திரன் துரைராஜ், சரவண சுப்பையா, கே.ராஜன், குணநிதி, தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன் உட்படப் பலர் நடித்தாலும், அவர்களை மீறிச் சில காட்சிகளே வரும் சசி லயா நம் மனதில் நிற்கிறார். அவரது வில்லத்தனம் தான் முன்பாதியைக் காப்பாற்றுகிறது.
அதேநேரத்தில் செல்வாவின் மகளாக வரும் தாரக்ஷி அழகாக இருக்கிறார்; நன்றாக வசனம் பேசி நடித்திருக்கிறார்; ஆனாலும், இந்தக் கதைக்கு அன்னியமாகத் தெரிகிறார்.
பின்பாதி திரைக்கதை மட்டுமல்லாமல் காஸ்ட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
பாரூக் ஜே.பாஷாவின் ஒளிப்பதிவும் தேவராஜின் படத்தொகுப்பும் முந்தைய மோகன் ஜி படங்களை நினைவூட்டுகின்றன. இதில் சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறது. அதேநேரத்தில், பல காட்சிகள் பின்னணி இசை சிறிதுமற்று இருப்பதை மோகன் ஜியின் ஸ்டைல் என்றே கருத வேண்டியிருக்கிறது.
பாடல்களைப் பொறுத்தவரை ‘என்னப்பன் அல்லவா’ தந்த உத்வேகம், பின்பாதியில் வரும் ‘காத்தம்மா’வினால் ‘சொய்ங்’ என்றாகிறது. அப்பாடலில் மன்சூர் அலிகானுடன் ரிஷா ஆடும் பாடல் கவர்ச்சிகரமாக இருப்பது, கதையின் அடிப்படையைச் சிதைக்கிறது.

பெண்களின், குழந்தைகளின் கையில் மொபைல் பயன்படுத்தப்படும் விதத்தைக் கண்காணிக்கச் சொல்கிறார் இயக்குனர். ஆனால், மொபைலோடு நின்றுவிடாமல் இந்த கெடுபிடிகள் மீண்டும் பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் அடைத்துவிடும் அபாயத்தை வலியுறுத்துபவர்களுக்கே உதவிகரமாக அமையும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
பெண்களை மிரட்டித் தவறான செய்கைகளுக்கு உட்படுத்துவதில் அவர்களது நிர்வாணமும் கற்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவை பகிரங்கப்படுத்தப் படும்போது, அதனை அப்பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்பதை இப்படம் சொல்லவே இல்லை.
சில்வா இயக்கிய ‘சித்திரைச் செவ்வானம்’ படமும் இதே தவறைக் கொண்டிருந்தது. ஆனால் ‘எதற்கும் துணிந்தவன்’, ‘அனல் மேலே பனித்துளி’ போன்றவை பாதிக்கப்பட்ட பெண்களின் எழுச்சியைக் காட்டியிருந்தன. இந்த வேறுபாடே மோகன் ஜியின் பார்வையைப் பொத்தலாக்கியிருக்கிறது.
சமூகத்திற்கான கருத்துகளைச் சொல்லும் படம் என்ற வகையில், முதல் பாதியும் இரண்டாம் பாதியும் ஒன்றோடொன்று பொருந்தாமல் நம்மைக் குழப்புகிறது. சரி, ஒரு கமர்ஷியல் படமாகத் திருப்தியடையலாம் என்று பார்த்தால், ’டபுள் ஹீரோ சப்ஜெக்ட்’ என்ற வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யவில்லை.
இரண்டு நாயகர்களும் எதிரெதிராக நின்று பின்னர் ஒன்று சேர வேண்டும் அல்லது கடைசிவரை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும். இரண்டுமே நிகழாமல், இதில் நட்டியும் செல்வாவும் கைகோர்க்கும் இடம் பலவீனமாக உள்ளது. அது மட்டுமல்ல, நட்டி எதற்காக செல்வாவைத் தேடி வந்தாரோ அது நிறைவேறியதா என்பதை இயக்குனர் சொல்லவேயில்லை.
படம் முடியும்போது, மொபைல் தான் பகாசுரன் என்றிருக்கிறார் இயக்குனர். அதற்கேற்றவாறு, கதையில் வரும் இரண்டு முக்கியப் பெண் பாத்திரங்கள் மொபைலை தவறாகப் பயன்படுத்தியதாகக் காட்டியிருக்க வேண்டும். கதையில் அப்படியொரு சம்பவம் நிகழவே இல்லை. யாரோ சிலர்தான் அச்செயலைச் செய்கின்றனர்.
அவர்களது பார்வையைத் திரைக்கதையில் கலக்காத காரணத்தால், பார்வையாளர்கள் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாக உணராமல் வேடிக்கை பார்ப்பவர்களாக மாறுகின்றனர். சமரசமில்லாமல் கதையைக் கையாண்டிருந்தால் இந்த நிலை நேர்ந்திருக்காது என்பதே ‘பகாசுரன்’ இயக்குனருக்குச் சொல்லும் சேதி!
உதய் பாடக லிங்கம்
Comments are closed.