விமர்சனம்: ’பஹீரா’!

Published On:

| By Kavi

சில திரைப்படங்களைப் பார்க்க தியேட்டருக்குள் சென்று அமரும்போது, வடிவேலுவின் பாத்திர வார்ப்புகளாகவே நாம் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போவது, ஏதேனும் ஒரு அதிர்ச்சியைத் தாங்க ஏதுவாக இருக்கும். ஒருவேளை ஏற்கனவே பார்த்த படத்தின் கதையையோ, காட்சிகளையோ, பாத்திர வடிவமைப்பையோ பார்க்க நேர்ந்தால், ’ஏய்.. இது அதுல்ல..’ என்று மிரள வேண்டியிருக்காது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘பஹீரா’வைப் பார்க்கவும், அப்படியொரு மனநிலை அவசியம். ஏனென்றால், பகீர் கிளப்பும் தருணங்கள் படத்தில் நிறைய. அதற்காக இது ஒரு ‘ஹாரர்’ படம் என்று நினைத்துவிட வேண்டாம். பேய்களே பின்னங்கால்கள் பிடறியில் அடிக்கப் பயந்தோட வைக்கும் ‘சைக்கோ’ த்ரில்லர் படமிது.

‘சைக்கோ த்ரில்லர்னா..’ என்று அப்பாவி போல கேட்கக்கூடாது. ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. குத்துங்க எஜமான் குத்துங்க’ என்று ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ஒரு வசனம் வருமே. ‘ஆளவந்தான்’, ‘மன்மதன்’ எல்லாம் அதை வழிமொழிந்தனவே. அந்த வழியில்தான் ‘நல்ல பொண்ணுங்களை விட்டிருவோம், இந்த கெட்ட பொண்ணுங்க இருக்காளுங்களே’ என்ற ரேஞ்சில் கதை சொல்கிறது ‘பஹீரா’.

என்ன, இப்பவே அடிவயிற்றுக்குள் உருவமில்லா உருண்டை ஒன்று சுழலத் தொடங்கிவிட்டதா? தலை கிறுகிறுக்கிறதா? இதே மனநிலையில் ‘பஹீரா’வின் முன்பாதியைப் பார்த்தால் ‘ஆம்லெட்’ போடுவது நிச்சயம். ‘என்னது ஆம்லெட்டா’ என்று யோசிப்பவர்களுக்காகவே, ‘பாய்ஸ்’ படத்தில் மறைந்த நடிகர் விவேக் இடம்பெறும் ‘பார்’ காட்சி யூடியூப்பில் காத்திருக்கிறது.

என்னடாப்பா படம் இது?

இன்றைய பெண்கள் ஒரேநேரத்தில் பல ஆண்களுடன் ஊர் சுற்றுவதைப் பற்றி, எல்லை மீறிப் பழகுவது குறித்து பொதுவெளியில் எடுக்கப்பட்ட வீடியோக்களின் பின்னணியில் டைட்டில் காட்சி ஓடுகிறது. அதன் தொடர்ச்சியாக, எழுபதுகளை சேர்ந்த ஒரு பழைய வேனை பொம்மை முகமூடி அணிந்த ஒருவர் ஓட்டி வருகிறார்.

அதற்கடுத்த ஷாட்டில், இரவு நேரத்தில் தனக்குப் பரிசாக வந்த இடுப்புயர டெடி பியர் பொம்மையொன்றை ஆசையுடன் பார்க்கிறார் ஒரு பெண். அதுவோ, அப்பெண் இதுவரை காதலித்து ஏமாற்றிய பையன்களின் பட்டியலை ஒப்பிக்கிறது.

அடுத்த காட்சியில், சைக்கோ கொலைகாரர்களுக்கும் சீரியல் கில்லர்களுக்குமான வித்தியாசத்தைப் பாடம் எடுக்கிறார் ஒரு பேராசிரியர். அங்கிருக்கும் மாணவிகளுள் ஒருவராக நாயகியும் இருக்கிறார்.

Bagheera Movie Review

அதன்பிறகுதான் நாயகனின் அறிமுகம் காட்டப்படுகிறது. கண், வாய், காது, கைகள் என்று அவரது அங்க அசைவுகளே, அவருக்குள் மர்மம் நிரம்பியிருப்பதைச் சொல்லிவிடுகிறது. இரவு 9.30 மணிக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அடுத்த 15 நிமிடங்களில் அவரைத் தேனிலவுக்கு கூட்டிச் செல்வதாகச் சொல்கிறார். மனதில் நிறைந்த காதல் வடிந்துபோனபிறகு நடந்து முடிந்ததெல்லாம் அப்பெண்ணுக்குப் பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. அதைப் பற்றி பேச்செடுத்ததும், அந்த பெண்ணைக் கொடூரமாகக் கொல்கிறார்.

மேற்சொன்னவற்றில் இருந்து என்ன தெரிகிறது? அப்பாவி ஆண்களை ஏமாற்றும் பெண்களை டெடி பியர் அனுப்பிக் கொல்கிறார் ஒரு சைக்கோ கொலையாளி. அது மட்டுமல்லாமல், காதலிப்பதாக நடித்தும் சிலரைக் கொடூரமாகக் கொலை செய்கிறார். இதனை அறிந்ததும், ’அவர் ஏன் இப்படிச் செய்கிறார்’ என்ற கேள்வி மனதில் எழுமே? அதற்குத்தான், இரண்டாம் பாதியில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அப்படியானால், முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வரும் ஒண்ணேகால் மணி நேரப் படம் எதற்கு என்ற கேள்வி நிச்சயம் மனதில் தோன்றும். ஆனால், அதை வெளிப்படையாகக் கேட்பதற்கு முன்பாதியை முழுதாகப் பார்த்தாக வேண்டும். அதுவும் எப்படி? பற்களைக் கடித்துக்கொண்டு,  ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, உள்ளுக்குள் இருக்கும் சகிப்புத்தன்மையைத் திரட்டிக்கொண்டு, ’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ மனநிலை வாய்த்தால் மட்டுமே அது சாத்தியப்படும். அதற்குள், ‘என்னடாப்பா படம் இது’ என்று இருக்கையை விட்டு எழாமல் இருந்தால் ஆச்சர்யம்தான்!

பிரபுதேவாவின் ‘பிரபுதேவி’!

’பஹீரா’வின் சிறப்பம்சமே பல கெட்டப்களில் பிரபுதேவா வருவது தான். அதுவும் பெண் வேடமிட்டு ‘பிரபுதேவி’யாக தோன்றுமிடம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும். ஆனால், கன்னாபின்னாவென்று ‘கட்’ செய்த காரணத்தால் அந்த காட்சி கண்றாவியாக மாறியிருக்கிறது. இடைவேளை முழுக்கவே அதே கதிதான் என்பதைத் தாண்டி பிரபுதேவாவின் இருப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது.

‘பிரபுதேவா என்ன அவ்ளோ பெரிய ஆக்டரா’ என்பவர்கள், ’பஹீரா’வின் இரண்டாம் பாதியைப் பார்த்தால் தங்கள் கருத்தை ‘வாபஸ்’ வாங்கிவிடுவார்கள். அதுவும் ‘பட்டுக்கோட்டை அம்மாளு’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, அவர் போடும் ஆட்டம் இருக்கிறதே? ‘அடேங்கப்பா..’ ரகம்!

ரசிகர்களை ஈர்க்கும்வகையில் கவர்ச்சியாகத் தோன்றியிருக்கிறார் நாயகி அமைரா தஸ்தூர். ஆனாலும், அழகுப் பொம்மை வசனம் பேசுவது போன்ற அவரது நடிப்பு தான் கடுப்பேற்றுகிறது.

’சிகப்பு ரோஜாக்கள்’, ‘மன்மதன்’ படங்களில் மோசமான பெண்களை நாயகர்கள் தேடும்போது, அவர்கள் கைகளில் சிலர் அகப்படுவார்களே? அப்படித்தான், இதிலும் சஞ்சிதா, காயத்ரி, ஜனனி, ரம்யா நம்பீசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்றன. சோனியா அகர்வால் இடம்பெறும் காட்சியை மட்டும் நீக்கியிருக்கிறது படக்குழு. காரணம் என்னவோ?

சீரியசாகவும் இல்லாமல், சிரிப்பூட்டவும் முடியாமல் தவித்திருக்கிறார் போலீஸ் அதிகாரியாக வரும் சாய்குமார். பிளாஷ்பேக்கில் இடம்பெற்ற நாசர், பிரகதி, ஸ்ரீகாந்த், சாக்‌ஷி தொடர்பான காட்சிகள் முன்பாதியை அடியோடு மறக்கச் செய்கின்றன.

Bagheera Movie Review

சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று திரையில் பல வண்ண ஒளிக்கீற்றுகளை நிறைத்திருக்கிறது செல்வகுமார் – அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு. கலை இயக்குனர் சிவா யாதவ், ஆதிக் ரவிச்சந்திரனின் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

‘நம்ம கத்திரிக்கு வேலை வச்சா பர்ஸ்ட் ஹாஃப் காலி’ என்றெண்ணி இயக்குனர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன். அதற்காக, கார் பார்க்கிங்கில் வரும் சண்டைக்காட்சிக்கு முன்னதாக பிரபுதேவாவும் அடியாட்களும் பேசும் வசனங்களை அவ்வளவு விஸ்தாரமாக காட்டியிருக்க வேண்டுமா? அதைப் பார்த்தவுடன், ’என்ன ப்ரோ, இப்படியெல்லாமா எங்களைச் சோதிப்பீங்க’ என்று அழத் தோன்றுகிறது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘ஆளவந்தான்’ தாக்கத்தில் உழன்று, அதே போன்று பின்னணி இசையோடு வேண்டுமென்று அடம்பிடித்திருப்பார் போல; ’அப்படியே ஆகட்டும்’ என்று சேர்ந்து ‘பஹீரா’ என்று அலறுவதைப் பின்னணி இசையோடு சேர்த்து ஒலிக்கச் செய்திருக்கிறார் புதுமுக இசையமைப்பாளர் கணேசன். இந்த படத்தின் பின்னணி இசை, அவருக்குப் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று நம்புவோம்!

ஏன் இந்த அருவெருப்பு?

’பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா மாதர் சங்கம் வரும், பசங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா இந்த பஹீரா வருவான்’ என்ற வசனமே மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கப் போதுமானது. ‘பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று நிபந்தனைகள் விதிக்க நீங்கள் யார் என்ற பதிலடிகள் நிச்சயமாக வரும். அதனை உணர்ந்தே, கிளைமேக்ஸில் அமைரா தஸ்தூர் பேசும் வசனத்தை அமைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த பொறுப்புணர்வு படம் முழுக்க இல்லாமல்போனதுதான் பிரச்சனை.

பெண்களைத் தரக்குறைவாக விமர்சிக்கும் படங்கள் விடலைப் பருவத்து ஆண்களுக்குப் பிடிக்குமென்ற கருத்து திரையுலகில் உண்டு. ‘மன்மதன்’ படத்தில் சிம்பு பெற்ற வெற்றி அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது. ஆனால், அது போன்ற படங்களில் இருந்த அழகியல் உணர்வுக்குப் பதிலாக ‘பஹீரா’வில் அருவெருப்பே மேலோங்கியிருக்கிறது. முக்கியமாக, இதில் வரும் கொலைக்காட்சிகளை உங்கள் வீட்டு தொலைக்காட்சியில் தனியாக அமர்ந்து கூட பார்க்க முடியாது.

ஒரு மூன்றாவது ஆள் நிலையில் நின்று இத்திரைக்கதையை ஆராய்ந்திருந்தால் முதல் பாதியை முற்றிலுமாகத் தவிர்த்திருக்கலாம் அல்லது அப்பகுதியைச் சுருக்கி அமைரா தஸ்தூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் விட்டதனால் பக்ரூ, நாசர் சம்பந்தப்பட்ட முன்பாதிக் காட்சிகள் தேவையற்ற ஆணிகளாகவே உள்ளன.

ஒரு சாதாரண ரசிகன் கலவரப்பட்டு சைக்காலஜிஸ்டைத் தேடிச் செல்லும் வகையிலான படத்தைத் தந்திருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘நியூ’ பட கிளைமேக்ஸுக்கு பட்டி டிங்கரிங் செய்து அப்படியே இதில் இடம்பெறச் செய்திருக்கிறார். ‘காப்பி.. காப்பி..’ என்று கத்துவதையும் மீறி, அக்காட்சி சுவாரஸ்யமாக இருப்பதுதான் விசேஷம்.

மிஸ்டர் ஆதிக், அந்த சீனை மனசுல வச்சுக்கிட்டே மொத்த ஸ்கீரின்ப்ளேவும் எழுதியிருக்கப்பிடாதா.. ஏன் ரசிகர்கள் பொறுமைக்கு டெஸ்ட் வைக்கறீங்க?

உதய் பாடகலிங்கம்

முழு காமெடி ஜானரில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’!

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share