‘திரைப்படத்தை புரிந்துகொள்ள முயலுங்கள்’ என சென்னையில் நிறைவுபெற்ற 20வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் அர்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஹங்கேரி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
இதையடுத்து, சர்வதேச திரைப்பட விழா இன்றுடன் (டிசம்பர் 22) நிறைவு பெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற படங்களுக்கும், பல்வேறு திரைக்கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகராக ’மாமனிதன்’ திரைப்படத்துக்காக விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகையாக ’கார்கி’ படத்தில் நடித்த சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டார். இயக்குநர் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, “திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்து போய்விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.
வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன. எந்தவொரு திரைப்படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல.
இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்த அவர், விருதுக்கான பரிசுத்தொகையை விழாக் கமிட்டிக்கே நன்கொடையாக திருப்பி வழங்கினார்.
ஜெ.பிரகாஷ்
சசிகலா புஷ்பா வீடு: சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!