உதயசங்கரன் பாடகலிங்கம்
ரீமேக்குக்கே ரீமேக்கா?!
தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘கமர்ஷியல் மசாலா’ படங்களைக் கவனித்திருக்கிறீர்களா? அதில் வரும் நாயகர்கள் எவரானாலும், அவர்களது முகங்களில் அக்கதை மீதான நம்பிக்கை 100 சதவிகிதம் தென்படும். ஆனால், ’அதே படத்தை ரீமேக் செய்கிறேன் பேர்வழி’ என்று இந்தியில் அவை ஆக்கப்படுகையில், அங்குள்ள நாயகர்களிடம் அந்த நம்பிக்கை அதே அளவுக்குத் தென்படாது.
அதுவே, வெற்றியைச் சரிக்கப் போதுமான காரணமாக இருக்கும். அக்குறையைப் போக்கிய படங்களான கஜினி, போக்கிரி ஆகியன அமீர்கான், சல்மான்கானுக்குப் பெரிய வெற்றிகளாக அமைந்தன. அதனை உணர்ந்ததாலேயே, அட்லீயைக் கொண்டு ‘ஜவான்’ தந்தார் ஷாரூக்கான்.
மேற்சொன்னதை உள்வாங்கிக் கொண்டால், ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ இந்திப்படம் எப்படியிருக்கிறது என்ற கேள்விக்கான பதிலையும் அறியலாம்.
தமிழில் ‘கீ’ படம் தந்த இயக்குனர் காளீஸ் இதனை இயக்கியிருக்கிறார். வருண் தவன், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இந்தியில் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
சரி, ‘பேபி ஜான்’ படம் ரசிகர்களை ‘தெறி பேபி’ என்று சொல்ல வைக்கிறதா?
’தெறி’ கதை!
‘பாட்ஷா’ பாணியில் நாயகன் அமைதியாக கேரளாவின் ஒரு பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு 5 வயதில் ஒரு மகள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் அந்த மனிதர், அக்கம்பக்கத்தில் நிகழும் குற்றங்களைக் கண்டும் காணாமலும் இருக்கிறார்.
இந்த நிலையில், மகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளிக்கிறார். அக்குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள், தவறுதலாக நம் நாயகனைத் தாக்க வருகின்றனர். அப்போது, அவரது சுயரூபம் தெரிய வருகிறது. ’பயந்த சுபாவமாக இருப்பது வெறும் நடிப்பு’ என்பதை அறிய நேர்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கதிகலங்குகிற அளவுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த காவல் துறை அதிகாரியாக இருந்திருக்கிறார் அந்த மனிதர்.
அவரது வாழ்வில் ஒரே பெண்ணாக, தாய் மட்டுமே இருக்கிறார். பின்னர், ஒரு பெண் அவரது காதலியாக, மனைவியாக ஆகிறார். அதற்கிடையே, சமூகத்தில் செல்வாக்கோடு திகழும் ஒரு பெரிய மனிதரோடும் அவர் மோத நேர்கிறது. அதன் விளைவாக நிகழும் தொடர் சம்பவங்களால், அவர் தன் மகளோடு கேரளாவுக்கு இடம்பெயர நேர்கிறது என்று நீளும் அதே ‘தெறி’ கதைதான் இந்த ‘பேபி ஜான்’னிலும் இருக்கிறது.
அதே கேரளா. அதே பேக்கரி. ஆனால், பிளாஷ்பேக்கில் வரும் சென்னைக்குப் பதிலாக இதில் மும்பை இடம்பெறுகிறது. ‘தெறி’ இந்தி டப்பிங் பதிப்பினை யூடியூப்பில் பார்ப்பவர்களுக்கு, அந்த மாற்றமும் ஆச்சர்யம் தராது. அப்படியானால், இந்தக் கதையில் என்ன மாற்றங்கள் இருக்கின்றன?

அந்தக் கேள்விக்குப் பதிலாக, அந்தப் பெரிய மனிதரின் பின்னணியை, குணாதிசயங்களை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது இப்படம். அவர் என்னென்ன குற்றங்களில் ஈடுபடுகிறார் என்று கிளைக்கதையொன்றைச் சொல்கிறது.
கூடவே, நம் நாயகனின் உண்மையான பெயர் என்ன என்று அறிய முயலும் ஆசிரியை பாத்திரத்திற்கு ஒரு பின்னணி தந்திருக்கிறது. இந்த வித்தியாசங்கள் நம்மை முழுமையாகத் திருப்திப்படுத்துகின்றனவா என்றால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்த மாற்றங்களும் கூட ஏற்கனவே நாம் பார்த்த தமிழ், தெலுங்கு படங்களைப் பிரதியெடுத்தாற் போலவே இருக்கின்றன. அதுவே இப்படத்தின் பலவீனம்.
விஜய்யை தாண்டினாரா வருண்?
‘தெறி’ படத்தைப் பார்த்துவிட்டு ‘பேபி ஜான்’ காண வருபவர்களிடம், ‘விஜய்யைத் தாண்டினாரா இதன் நாயகன் வருண் தவன்’ என்கிற கேள்வியே முதன்மையாக இருக்கும். அதனை உணர்ந்து, அவரும் மிகச்சிரத்தையுடன் நடித்திருக்கிறார்.
ஆனாலும், விஜய்க்கு ஈடாகவில்லை என்கிற எண்ணமே நம்முள் ஏற்படுகிறது.
ஏனென்றால், தொடக்கத்தில் நாம் சொன்னது போல இக்கதை மீது விஜய் முகத்தில் தெரிந்த நம்பிக்கை அவரிடத்தில் குறைவாகவே தென்படுகிறது. அதையும் தாண்டி, நட்சத்திர அந்தஸ்தை கொண்ட நாயகர்களால் மட்டுமே கையாளக்கூடிய காட்சிகளில் வருண் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷைப் பொறுத்தவரை, அனைத்து காட்சிகளிலும் ‘பாந்தமான அழகோடு’ தோன்றியிருக்கிறார். நடிப்பும் கச்சிதம். ஆனால், பாடல்களில் தான் அவரது இருப்பு ‘திருஷ்டி பரிகாரமாக’ தெரிகிறது.

வாமிகா கபி நல்லதொரு நடிப்பைத் தந்திருக்கிறார். ராஜ்பால் யாதவ், கிட்டத்தட்ட ‘மொட்டை’ ராஜேந்திரனைப் பிரதிபலிக்கிற வகையில் வந்து போயிருக்கிறார். பின்பாதியில் ஒரு இடத்தில் ‘காமெடி இஸ் எ சீரியஸ் பிசினஸ்’ என்று அவர் கர்ஜிக்கும்போது ‘கூஸ்பம்ஸ்’ ஆகிறது.
’தெலுங்கு பட வில்லன்களே பரவாயில்லை’ என்பது போல, இதில் ஜாக்கி ஷெராஃப் வந்து போயிருக்கிறார். ’புஷ்பா’ பட ஹேங் ஓவரில் இருக்கும் வடமாநில ரசிகர்களைக் கவர இதுதான் வழி என்று இயக்குனர் காளிஸ் நினைத்திருக்கலாம்.
ஆனால், ‘தெறி’ படத்திற்கான யுஎஸ்பிகளில் வில்லனாக நடித்த இயக்குனர் மகேந்திரனின் இருப்பும் அப்பாத்திர வடிவமைப்பும் முக்கியமான ஒன்று என்பதை இப்படக்குழு மறந்திருப்பது துரதிர்ஷ்டமான விஷயம்.
குழந்தை ஸாரா ஜியன்னா நன்றாக நடித்திருக்கிறது. ஆனாலும், ‘தெறி’ நைனிகா அளவுக்கு இல்லை என்றே நமக்குத் தோன்றுகிறது. இன்னும் ஷீபா சத்தா, ராஜ்பால் யாதவ், ஜாகீர் ஹுசைன், பிரகாஷ் பெலவாடி என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
முக்கியமான பாத்திரங்களில் காளி வெங்கட், ‘விக்ரம்’ படப்புகழ் ஜாபர் சாதிக் வந்து போயிருக்கின்றனர்.
இது போக சல்மான் கானின் ‘கேமியோ’வும் இதிலுண்டு. திரையில் படம் ‘ரிச்’ ஆகத் தெரிய ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பு வடிவமைப்பாளர் டி.முத்துராஜ், ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியிருக்கின்றனர்.
இசையைப் பொறுத்தவரை, தமன் பெரிதாக மாயஜாலங்களை நிகழ்த்தவில்லை. பாடல்கள் வழக்கமான இந்திப்பட அனுபவத்தையே தருகின்றன.
பின்னணி இசையில் பல இடங்களில் பழைய தமிழ், தெலுங்கு படங்களின் சாயல் தெரிகிறது.
சிறப்பான கணக்கு!
திரைப்பட வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சிறப்பானதொரு கணக்கீட்டைக் கொண்டிருக்கிறது ‘பேபி ஜான்’.

பெரிய வெற்றி பெற்ற ஒரு தமிழ் பட ரீமேக் இது. ‘ஜவான்’ படம் வழியே பெருங்கவனம் பெற்ற இயக்குனர் அட்லீயின் முந்தைய படமான அதனை, அவரே இந்தியில் தயாரித்திருக்கிறார். பிரமாண்டமான கமர்ஷியல் பட உள்ளடக்கம் இடம்பெற்றிருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, ஆண்டிறுதியில் பண்டிகைக் காலக் கொண்டாட்டத்தை மனதில் வைத்து சிறப்பாக ‘மார்க்கெட்டிங்’ செய்யப்பட்டிருக்கிறது. இது எல்லாமே, தொடக்கத்தில் ரசிகர்களைக் கவனத்தைக் குவிப்பதற்குத்தான் உதவும். மிகப்பெரிய வணிக வெற்றியை ஈட்ட, ’படம் சூப்பர்’ என்று ரசிகர்கள் சொல்ல வேண்டும்.
‘தெறி’யில் இல்லாத சில விஷயங்கள் ‘பேபி ஜான்’ திரைக்கதையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை புதுமையானவை அல்ல என்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே நாம் பார்த்த படங்களைப் போலவே இருக்கின்றன.
தெறி படத்திலேயே சத்ரியன், விக்ரமார்குடு உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் சாயல் தெரியும். அவற்றோடு இன்னும் சிலவற்றைச் சேர்த்திருப்பதால், ‘ரீமேக்குக்கே ரீமேக்கா’ என்ற கேள்வி நம்முள் எழுகிறது.
போலவே, ‘தெறி’யில் ப்ளஸ் ஆன விஷயங்கள் என்று எவையெல்லாம் சொல்லப்பட்டதோ, அவை இதில் ‘மிஸ்’ ஆகியிருக்கின்றன அல்லது அடிக்கோடிட்டுக் காட்டப்படாமல் விடுபட்டிருக்கின்றன.
ஒரு வெற்றிப்படத்தில் என்னென்ன விஷயங்கள் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டன என்று அறிய முயன்றால், அதன் ரீமேக் பதிப்பை மிகச்சிறப்பானதாக ஆக்கலாம். ஆனால், நல்லதொரு வணிகக் கணக்கை மட்டுமே மனதில்கொண்டு அக்கடமையைச் செய்யத் தவறியிருக்கிறது ‘பேபி ஜான்’.
அந்த கணக்கினைத் திரையில் கண்டு ரசிப்பவர்களுக்கு இப்படம் பிடிக்கக்கூடும்.
ஜான் (jaan) என்றால் இந்தியில் உயிரே என்றொரு அர்த்தமும் உண்டு. இப்படத்தில் பேபியும் இருக்கிறார், ஜானும் இருக்கிறார். ஆனால், நம்மால்தான் ‘பேபி ஜான்’ என்று சொல்ல முடிவதில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…