‘ஒரு படத்தைப் பார்த்துட்டு கொலவெறியோடு ஆயுதம் தூக்குனேன்’னு சொல்பவர்களுக்காகவே, அவ்வப்போது மனிதநேயம் பேசும் திரைப்படங்கள் படைக்கப்படுவதுண்டு.
அது ரசிகர்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்த, படம் முழுக்க யதார்த்தமான மனிதர்கள் உலவ வேண்டும்; கதையில் வரும் திருப்பம் உண்மையிலேயே நடந்தால் இப்படித்தான் விளைவுகள் இருக்கும் என்பதைக் குறிப்பிட வேண்டும்;
சினிமாத்தனம் ஏதுமில்லாமல் யதார்த்தமாக நிகழும் விஷயங்கள் அற்புதங்களாகவும் இருக்குமென்பதைப் பார்வையாளர்கள் ஏற்கும்படியாகக் கதை சொல்ல வேண்டும். அப்படியொரு அனுபவத்தைத் தந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஆர்.மந்திரமூர்த்தி.
‘மனசு நெகிழுற மாதிரி கதை சொல்றது இருக்கட்டும், படம் பார்க்கும்படியா இருக்குமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
ஒரு மனிதனின் மாற்றம்!
காசியில் கங்கைக்கரையில் வழிபாட்டுக்கான பொருட்களை விற்பவர் பல்ராம் (யஷ்பால் சர்மா). காசு கொடுத்தால் மரியாதை கிடைக்கும் என்று வாழ்பவர். ‘வீட்டிலும் வெளியிலும் ஒரே மாதிரி’ என்பது போல, தன் குடும்பத்தினரிடமும் அதே குணத்தைக் காட்டுபவர்.
மனைவி ஜானகியிடம் (அஞ்சு அஸ்ரானி) சிரித்துப் பேசுவதே தவறு என்று எண்ணுபவர். கல்லூரிக் கட்டணத்திற்குப் பணம் கேட்கும் மகள் ஷிவானியிடம் (ப்ரீத்தி அஸ்ரானி), ‘நானா உன்னை காலேஜுக்கு போகச் சொன்னேன்’ என்று கேட்பவர். குமிழிகளை ஊதி விளையாடும் மகன் சோனு (அத்வைத்), தந்தை வருவதைக் கண்டவுடன் புத்தகத்தை எடுத்து வைத்துப் படிப்பது போல நடிக்கும் அளவுக்குப் பயத்தைத் தருபவர்.
இப்படிப்பட்ட பல்ராம், ஒரு தீபாவளியன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு புனித நீராட வேண்டுமென்று குடும்பத்துடன் ரயில் ஏறுகிறார். அவரது குடும்பத்தினரும், இனியாவது அவர் மனம் மாற வேண்டுமென்று அந்தப் பயணத்திற்குத் தயாராகின்றனர்.
நள்ளிரவில் மதுரையில் இறங்கி, அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து ராமேஸ்வரம் போவதாகத் திட்டம். அதேபோல, ஒரு டாக்ஸி டிரைவரும் (தமன் குமார்) பல்ராமிடம் அகப்படுகிறார். ’கடவுள் எங்கும் இருக்கிறார்’ என்று நம்பும் அந்த டிரைவர், பாக்கைக் குதப்பிக்கொண்டு ‘வேகமா போ’ என்று இந்தியில் கத்தும் பல்ராமினால் டென்ஷன் ஆகிறார். ஒருகட்டத்தில் தாயைப் பழிக்கும் வகையில் வசைகளை உதிர்க்க, பதிலுக்கு அவர் சண்டையிட, அப்போது விபத்து ஏற்படுகிறது.
அந்த விபத்தில் ஜானகி பலத்த காயமடைகிறார்; அடுத்த நாள் காலையில், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டாக்ஸி டிரைவரை பார்க்க வருகிறார் அவரது நண்பர் (சசிகுமார்). அந்த நேரத்தில், உடனடியாக ஜானகியை மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார் மருத்துவர். தீபாவளியன்று ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில், தன்னிடம் மன்றாடும் ஷிவானிக்காக உதவத் தயாராகிறார். ஆனால், செல்லும் வழியிலேயே ஜானகி இறந்துவிடுகிறார்.
அதன்பிறகு, ஜானகியின் சடலத்தை அயோத்தி கொண்டு செல்ல அக்குடும்பத்தினருக்கு அந்த நபர் எப்படி உதவுகிறார் என்பதே ‘அயோத்தி’யின் கதை. விடுமுறை நாளான தீபாவளியன்று அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதன் அடிப்படையில் மொத்தக் கதையும் நகர்கிறது.
மனைவியின் மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திகைக்கும் பலராம், மொழி தெரியாத நிலத்தில் தனக்குக் கிடைக்கும் உதவிகளால் எப்படி மனம் மாறுகிறார் என்பதுதான் ‘அயோத்தி’யின் சாராம்சம். மற்றவர்கள் மகிழ்ச்சியடையும்விதமாக அம்மனிதன் நடந்துகொண்டதே கிடையாது எனும் முன்கதையே, அம்மாற்றம் படிப்படியாக நிகழ்வதை ஒப்புக்கொள்ள வைக்கிறது.
ஆச்சர்யமூட்டும் ப்ரீத்தி!
‘அயோத்தி’யில் வெறுமனே கதையை நகர்த்திச் செல்வதற்கு மட்டுமே சசிகுமாரின் பாத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சர்யம். நாயகனாக அல்லாமல், ஒரு பாத்திரமாக மட்டுமே அவர் இடம்பெற்றிருக்கிறார். இந்த முடிவைப் பல நாயகர்கள் பின்பற்றினால், மலையாளத் திரைப்படங்கள் போல இங்கும் பல நாயகர்களைக் கதையில் திருப்பம் உருவாக்கும் குணசித்திர நடிகர்களாக, நகைச்சுவை நடிகர்களாக, வில்லன்களாகப் பார்க்கும் நிலை உருவாகும்.
ஒரு ஆணாதிக்கவாதியாக, மதவாதியாக, மனிதம் சிறிதுமில்லாத பாவியாகத் தோன்றியிருக்கிறார் யஷ்பால் சர்மா. இதுவரை நாம் பார்த்த வட இந்திய நடிகர்களைப் போல இல்லாத காரணத்தாலேயே, அவரை அப்பாத்திரத்தில் எளிதாகப் பொருத்திப் பார்க்க முடிகிறது.
’அயோத்தி’ தரும் மிகப்பெரிய ஆச்சர்யங்களுள் ஒன்று ப்ரீத்தி அஸ்ரானி. ரகுல்ப்ரீத் சிங்கை நினைவூட்டும் இவர், ஏற்கனவே ஓரிரு தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார். பல காட்சிகளில் குளோஸ்அப் ஷாட்களில் அவர் அழுது நடித்திருப்பது எளிதாக நம் மனதை ஊடுருவுகிறது. அவராலேயே, இப்படத்தின் கனமும் அதிகமாகிறது.
யஷ்பாலின் மனைவியாக வரும் அஞ்சு அஸ்ரானி, மகனாக நடித்த அத்வைத், சித்திரைப் பாண்டியனாக வரும் போஸ் வெங்கட், டாக்ஸி டிரைவராக வரும் தமன் குமார், சசிகுமாரின் நண்பராக வரும் புகழ், மருத்துவக் கல்லூரி டீனாக வரும் தட்ஷா பிள்ளை, மருத்துவமனை ஊழியராக சாய் ரமணி, விமான நிலைய அதிகாரியாக வரும் பாண்டி ரவி, இன்ஸ்பெக்டராக வருபவர், பிணவறை பணியாளர் என்று பலர் இதில் நடித்துள்ளனர். படம் முடிந்து வெளியே வந்தபிறகும் அவர்களது முகங்கள் நினைவிலிருப்பதுதான் ‘அயோத்தி’யின் சிறப்பம்சம்.
பெரும்பரப்பைக் காட்டும் நேரங்களிலெல்லாம், நாமே அதனை நேராகப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு. துரைராஜின் கலை வடிவமைப்பு, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு, என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசை உட்படத் தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து ’ஒரு நல்ல படம் பார்க்கிறோம்’ என்ற உணர்வை அதிகப்படுத்துகின்றன.
’ஓம் வெள்ளிமலை’க்குப் பிறகு மனதில் நிற்கும் பாடல்கள், காட்சிகளை அடுத்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும் பின்னணி இசை என்று அசத்தியிருக்கிறார் ரகுநந்தன். கடைசி பத்து நிமிடங்கள் ரகுநந்தன் இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கும் இசை ராஜ்ஜியத்திற்கு சான்று.
தான் என்ன கதையைச் சொல்ல வந்திருக்கிறோம் என்ற தெளிவோடு நேர்கோடு போன்ற ஒரு படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.மந்திரமூர்த்தி. அதிலிருந்து விலகிச் செல்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் தமிழ் சினிமா வழங்கியிருந்தும், அவற்றின் பக்கம் திரும்பவே இல்லை. அதுதான் சாதாரண கமர்ஷியல் படமாகத் தோற்றம் தரும் ‘அயோத்தி’யை கலைநேர்த்திமிக்க படமாக மாற்றியிருக்கிறது.
இல்லவே இல்லை..!
சசிகுமாருக்கு ஜோடி இல்லை என்பது தொடங்கி, வழக்கமாகத் தமிழ் சினிமாவில் இருக்கும் பல விஷயங்கள் இல்லவே இல்லை என்பதுதான் ‘அயோத்தி’யின் சிறப்பு.
இயக்குனர் நினைத்திருந்தால், ப்ரீத்தி அஸ்ரானியை சசிகுமாரை நோக்கி காதல் பார்வையை வீச வைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஒரு டூயட் பாடலைச் சேர்த்திருக்க முடியும்.
’சாலா மதராஸி’ என்று யஷ்பால் வசை பாடும்போது, வடஇந்தியர்கள் நம்மூருக்கு வந்தால் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று புகழ் மூலமாக அடுக்குமொழி வசனமொன்றை உதிர்த்து கைத்தட்டல்கள் வாங்கியிருக்கலாம். ‘வந்தாரை வாழ வைப்போம்’ என்பதே கதையின் அடிப்படை ஆதலால், அதையும் புறந்தள்ளியிருக்கிறார்.
தொடக்க காட்சியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனும் சத்தத்தோடு, யஷ்பாலை ஒரு சாமியார் கட்டியணைக்கிறார். அவரது தோற்றமும் சில அரசியல்வாதிகளை நினைவூட்டும்விதமாக உள்ளது. யஷ்பாலுக்குப் பணம் அனுப்பி உதவுவதாக வாக்குறுதி தருவதும் அதே நபர் தான். அவர் கடைசிவரை பணம் அனுப்பவே இல்லை என்பது திரைக்கதையில் இருந்து பார்வையாளர்கள் தாமாகப் புரிந்துகொள்ளும் ஒரு விஷயம். அந்த தகவலை வைத்துக்கொண்டு ‘இந்துத்துவ அரசியல்’ பேசியிருக்கலாம். அதையும் பேசவில்லை.
சுமார் 30% வசனங்கள் இந்தியில் உள்ளன; அவற்றின் மீது தமிழ் டப்பிங் வசனங்களை ஏற்றியிருக்கலாம் அல்லது பார்வையாளர்கள் வசதிக்காக இந்தி பேசும் பாத்திரங்கள் தமிழில் உரையாடுகின்றன என்று டிஸ்க்ளெய்மர் வைத்திருக்கலாம். இவ்வளவு ஏன், முக்கியமான மூன்று பாத்திரங்கள் இந்தியில் பேசுவதைக் கிண்டல் செய்திருக்கலாம். தியேட்டரில் சாதாரண ரசிகன் கத்தினாலும் பரவாயில்லை; படத்தின் நோக்கம் சிதைந்துவிடக் கூடாது என்று முடிந்தவரை எளிமையான இந்தி வசனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். மகேந்திரன் போன்ற ஓரிரு இயக்குனர்களே இதை தமிழ் சினிமாவில் கையாண்டுள்ளனர்.
கங்கைக் கரையில் தொடங்கி கடற்கரையோர பள்ளிவாசலில் படம் முடிவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். இதுவரையிலான தமிழ் சினிமா, இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் ரசிகர்களுக்குப் பாடம் நடத்தியுள்ளது; அதுவும் கூட ‘அயோத்தி’யில் இல்லை. மிக முக்கியமாக, ‘அயோத்தி’ என்று பெயர் வைத்துவிட்டு ‘ராமர் கோயில்’ அரசியலைப் பேசவே இல்லை. ஆனால், அந்த அரசியலை ஒரு பாமர ரசிகன் உணருமாறு செய்திருக்கிறார். அதுவே மந்திரமூர்த்தியின் தனித்துவம்.
மனிதம் சார்ந்த சம்பவமொன்றைக் கட்டுரை வடிவில் பத்திரிகையில் படிக்கும்போது, மனதுக்குள் மென்மையாக ஈரம் சுரக்கும். அந்த கட்டுரையின் முடிவில் வரும் ஒரு வரி மொத்த சாரத்தையும் அப்படியே நம்முள் இறக்கிவிடும். ’அயோத்தி’யின் கிளைமேக்ஸில், ‘உங்களோட பேர் என்ன’ என்ற யஷ்பாலின் கேள்விக்கு சசிகுமார் பதில் சொல்வது அப்படியொரு முத்தாய்ப்பான இடம்.
ஏற்கனவே இருந்த சில விஷயங்களை இல்லாமலாக்கி, இல்லாத விஷயங்கள் சிலவற்றைப் புகுத்தி, ஒரு நேர்த்தியான கமர்ஷியல் படமாக ‘அயோத்தி’யைப் படைத்திருக்கிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி. ’இதெல்லாம் நிஜத்துல சாத்தியமே இல்லை’ என்று யதார்த்த முலாம் பூசுவதற்குப் பதிலாக இப்படத்தைக் கொண்டாடுவது ’பீல்குட்’ திரைப்படங்களுக்கான இலக்கணங்களை தமிழ் சினிமா மாற்றிக்கொள்ள வழி செய்யும்!
உதய் பாடகலிங்கம்
தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!
தீயாய் பரவும் வைரஸ் காய்ச்சல்: தப்பிப்பது எப்படி?