அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழா நேற்று (ஜனவரி 22) கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமர் சிலை கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
புதிய ராமர் கோவிலை தரிசிக்க நேற்று பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், திறப்பு விழாவில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மட்டும் தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே ராமர் கோவில் திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது சமூகவலைதளங்களில் பேசு பொருளானது.
நான் ஆன்மீகமாகத்தான் பார்க்கிறேன்!
மேலும் அயோத்தி செல்வதற்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமார் 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. இந்த நாள் வரலாற்றிலேயே மறக்க முடியாத முக்கியமான நாள்” எனத் தெரிவித்ததும் சர்ச்சையானது.
இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் சூழ்ந்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அதற்கு அவர், ”அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை நான் ஆன்மீகமாகத்தான் பார்க்கிறேன். இது அரசியல் நிகழ்வு அல்ல. ஒவ்வொருவருக்கும் கருத்து தெரிவிக்க கூடிய உரிமை இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களது சொந்த கருத்தை சொல்கின்றனர். அனைவரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ரஜினிகாந்த் கூறினார்.
’அன்றே சொல்லிவிட்டேன்’ – கமல்
அதே வேளையில் ராமர் கோவில் திறப்பு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‛‛நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி பேசிவிட்டேன். அதே கருத்து தான். இப்போதும் அதில் மாற்றம் இல்லை” என்று கூறினார்.
KamalHaasan stands with the same opinion after all these years.
— Alpha Thug !!! (@khalphathug) January 22, 2024
அதனைத்தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு குறித்து கமல் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ”ஒரு நடிகராக இதைப் பற்றி பேச கூடாது என சொல்கிறார்கள். ஆனால் நானும் இந்த நாட்டில் தான் இருக்கிறேன், அதனால் கண்டிப்பாக பேசுவேன்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் அரசியல்வாதிகள் செய்யக்கூடிய சூழ்ச்சி தான். மக்களுடைய மதத்தை வைத்து அரசியல் பண்ணக்கூடாது. மக்கள் நம்புகிற மதத்தை விட்டு அரசியல்வாதிகள் விலகி நிற்க வேண்டும்.
ஆனால் அதை அவர்கள் செய்ய தவறியது தான், எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. யாரையுமே மதத்தை வைத்து தவறாக சித்தரிக்காதீர்கள்” என்று கமல் பேசியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடித்த சமயத்தில் டெல்லியில் படப்பிடிப்பில் இருந்த கமல், உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்துக்கு முன் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு கண்டன போராட்டத்திலும் அப்போது அவர் கலந்துகொண்டார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் ஆரம்பம் முதலே எதிரெதிர் திசையில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஐசிசி 2023 அணியில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!