சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மீது கதை திருட்டு குற்றம் சுமத்தப்பட்டிருப்பது இலக்கிய வட்டாரத்தில் மட்டுமல்ல, வெகுஜன தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சசிகுமார் கதைநாயகனாக நடித்திருக்கும் படம் அயோத்தி. மார்ச் 3 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார்.
இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களால், விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் கதை திருடப்பட்டது என்கிற குற்றசாட்டு தற்போது எழுந்துள்ளது.
அயோத்தி படத்தின் கதையை சினிமாவுக்காக தான் எழுதியதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.
ஆனால், “அது ஏற்கனவே தங்கள் தோழர்களுடைய சொந்த அனுபவம். இதற்காக எஸ்.ராமகிருஷ்ணன், அயோத்தி படத்தின் தயாரிப்பாளர் ரவிக்கு கண்டனங்கள்” என எழுத்தாளரும், தொழிற்சங்கவாதியுமான விருதுநகர் மாதவராஜ் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு
சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் (04.03.2023) சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்.
படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது.
நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் மாதவராஜ் முகநூல் பதிவு
“அயோத்தி படத்தின் விமர்சனத்தை இன்று இந்து தமிழ் பத்திரிகையில் படித்தேன். அப்போதுதான் அந்தக் கதையை அறிய முடிந்தது. தீராத பக்கங்கள் வலைப்பக்கத்தில் 2011 செப்டம்பர் 3 ம்தேதி நான் எழுதிய ‘அழக்கூட திராணியற்றவர்கள்’ என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது.
எங்கள் சங்கத் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் பெற்ற நேரடி அனுபவத்தை நான் பதிவு செய்திருந்தேன். ராமேஸ்வரம் வந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி தவித்துப் போய் நின்றபோது எங்கள் தோழர்கள் செய்த மனிதாபிமான உதவி அது.
2021ல் வெளி வந்த எனது ‘இரண்டாம் இதயம்’ புத்தகத்திலும் இந்த பதிவு இடம் பெற்றிருந்தது. அயோத்தி திரைப்படம் யாருடைய ‘கதை’யும் அல்ல. உண்மை நிகழ்வு. அதில் நேரடியாக பங்கு பெற்ற இரண்டு தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரோட்டமாய் முதன் முதலில் எழுத்தாக செப்டம்பர் 2011ல் ஆவணப்படுத்தியதும் ஒரு கதை போல எழுதியதும் நான்.
சம்பந்தப்பட்ட அந்த தோழர்களே என் பதிவைப் படித்து விட்டு கண் கலங்கினர். நான் எழுதியதன் மூலம் அந்த தோழர்களை எங்கள் சங்கமே கொண்டாடியது.
தீராத பக்கங்களில் படித்து விட்டு பலரும் பாராட்டினர். எல்லாவற்றையும் அப்படியே மறைத்து விட்டு அல்லது புதைத்து விட்டு என் கதை என்றும், என் அறிவுச் சொத்து எனவும் உண்மையை புரட்டுவது யோக்கியமும், அறமும் ஆகாது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், அயோத்தியா பட தயாரிப்பாளர், இயக்குனருக்கும் என் கண்டனங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “அயோத்தி படத்தில் ராமேஸ்வரம் வந்து கார் விபத்தில் பாதிக்கப்பட்ட வட நாட்டு குடும்பத்திற்கு உதவுவதாக சசிகுமாரும் அவரது நண்பரும் நடித்திருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தில் உதவியவர்கள் இந்த இரு தோழர்கள்தாம்” என அவர்களது படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், “இவர்கள் இருவரையும் , அதற்கு ஆதாரமாக இருந்த பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தையும் அயோத்தி படத்தின் முடிவில் குறிப்பிட்டு முடித்திருந்தால் எவ்வளவு சரியானதாய், அர்த்தமுள்ளதாய் இருந்திருக்கும். இருக்கட்டும். நாம் மக்களுக்கு கொண்டு செல்வோம்” என்று பதிவிட்டுள்ளார் மாதவராஜ்.
இராமானுஜம்
மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல்!
சென்னையில் தனியார் பேருந்துகளா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!