மொழியை தாண்டி பலரை ஈர்த்த ’அயோத்தி’: சமுத்திரகனி

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களே முதல் வாரத்தை கடப்பது கடுமையான போராட்டமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மனிதமே முக்கியம் என்பதை அழுத்தமாக கூறிய அயோத்தி படம் மொழி எல்லைகளை கடந்து திரைக்கலைஞர்களால் பாராட்டப்பட்ட படம்.

எந்தவிதமான விளம்பரங்களும் தயாரிப்பாளரால் செய்ய முடியாத நிலையில் மார்ச் 3 அன்று வெளியான அயோத்தி படத்தை ஊடகங்கள் பாரபட்சம் இன்றி படைப்புரீதியாக உயர்த்திப் பிடித்தன. அதன் பின்னரே அயோத்தி என்கிற படம் திரையரங்குகளில் வெளியாகி இருப்பது பொதுவெளியில் தெரியவந்தது.

Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்த இந்தப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியிருக்கிறது.

இந்தவெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு 19.04.2023 மாலை சென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில் விழா நடத்தி பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இதில், திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.

இவ்விழாவில்  நடிகர் அஸ்வின் குமார் கூறுகையில், “நான் செம்பி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது தான் இந்தப்படமும் ஆரம்பித்தது. கதை கேட்டு நான் நடிக்கவா என்று ரவி சாரிடம் கேட்டேன். ஆனால் சசி சார் நடிக்க போகிறார், அவர் தான் இந்தக்கதைக்கு சரியாக இருப்பார் என்றார்.

இந்தக்கதைக்கு சசி சாரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. சசி சார் நிஜத்தில் அத்தனை சாந்தமானவர், எல்லோரையும் சமமாக நடத்துபவர். இந்தப்படத்தில் இறுதிக்காட்சியில் அழ வைத்து விட்டார். சசி சாருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்திக்கும் வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் சாந்தனு கூறுகையில், “இந்த விழாவிற்கு அப்பா சார்பில் வந்துள்ளேன். அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அப்பா இந்தப்படம் வந்தபோதே என்னை இந்தப்படத்தை பார் என்று சொன்னார். படம் பற்றி புகழ்ந்து வாழ்த்தினார். நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அத்தனை அற்புதமான படைப்பு. வெளியாகி மூன்று நாட்களில் வெற்றி விழா கொண்டாடும் காலத்தில் இது உண்மையான வெற்றி. சசிகுமார் உண்மையில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி விட்டார்” என்றார்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், “இந்த திரையரங்கு பழைய நினைவுகளை தருகிறது. அண்ணாமலை, பாட்ஷா 25ஆவது வாரம் கோலாகலமாக இங்கு ஓடின. இந்த காலத்தில் 50 நாட்களை கடப்பது அரிதாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது அயோத்தி.

இந்த கதையை நம்பி தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுக்கு ஹேட்ஸ் ஆஃப். இப்படி ஒரு கதையை புதுமுக இயக்குநரை நம்பி எடுப்பது மிகப்பெரிய விசயம். இது ஒரு அற்புதம். இந்தக்கதை ஓடும் என நம்பிய படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். சசிகுமார் பேசிக்கொண்டிருக்கும் போது கதை தான் ஹீரோயிசம் என்றார், அது முழுக்க உண்மை. அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்குவது போல் இயக்கியிருகிறார் மந்திரமூர்த்தி. யஷ்பால் ஆளவந்தானில் நடித்திருந்தார். இதில் பின்னியிருக்கிறார். அந்த சின்னப்பெண் மிரட்டிவிட்டார். மொழி ஒரு தடையாகவே இல்லை” என்றார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கூறுகையில், “தமிழில் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு முதல் படத்திலேயே கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். எனக்கு வாய்ப்பளித்த மூர்த்தி, ரவீந்திரன் சார், சசிகுமார் சாருக்கு நன்றி. அயோத்தி படம் மனித நேயத்திற்கு மொழி இல்லை என்பதை சொல்கிறது, அனைவரும் அதை பின்பற்றுவோம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Ayodhi that attracted many beyond language Samuthirakani

நடிகர் யஷ்பால் சர்மா கூறுகையில், “நீங்கள் காட்டும் அன்பும், பாராட்டுகளும் விருதை விட மிகப்பெரிது. என்னை இந்தப்படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு பெரிய நன்றி. சசிகுமார் நாங்கள் வெகு நட்போடு இருந்தோம், அவருக்கு என் நன்றி. கோவிட் காலத்தில் பல இடைஞ்சலுக்கு மத்தியில் இந்தப்படத்தை எடுத்தார்கள். நான் நடித்ததில் மிகச்சிறந்த படம்” என்றார்.

 

இயக்குநர் மந்திரமூர்த்தி, “இந்தப்படம் ரிலீஸான பிறகு எல்லோரும், இந்தப்படம் சரியான சமயத்தில் சரியான கருத்துடன் வந்திருக்கிறது என்றார்கள். அது என் மூலம் நடந்திருக்கிறது, அவ்வளவு தான். அதற்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி. என் அப்பா அம்மாவுக்கு நன்றி. வீட்டுக்கு இதுவரை 1 ரூபாய் தந்ததில்லை ஆனால் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் ஆதரித்த பெற்றோருக்கு நன்றி. என் குரு பாலாஜி அருள் சார், அவர் இப்போது உயிரோடில்லை. அவருக்கு நன்றி.

சசி சார் ஒத்துக்கொண்டிருக்காவிட்டால் இந்தப்படம் நடந்திருக்காது. தனக்கு காட்சிகள் இல்லை என்றாலும், ஒதுங்கி நின்று நடித்தார். வேறு எந்த நடிகரும் செய்திருக்க மாட்டார்கள். சசி அண்ணாவிற்கு நன்றி. யஷ்பால், பிரீத்தி அற்புதமாக நடித்தார்கள். இசையமைப்பாளர் ரகுநந்தனை படுத்தி எடுத்து விட்டேன். இப்படத்தில் அனைவரும் தங்கள் படமாக உழைத்தார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இறுதியாக இந்தப்படத்தை நான் எடுக்கிறேன் என்று எனக்கு ஊக்கமளித்த ரவீந்தரன் சாருக்கு நன்றி” என கூறினார்.

Ayodhi that attracted many beyond language Samuthirakani

இயக்குநர்-நடிகர் சமுத்திரகனி கூறுகையில், “சமீபமாக நானும் சசியும் அடிக்கடி சந்தித்துகொள்ள முடிவதில்லை. எப்படியும் பார்த்து விடுவோம், அப்போது நாங்கள் செய்யும் படங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்போதே இந்தப்படம் பற்றி மிக நம்பிக்கையோடு சொன்னார்.

ஒரு படம் 10 வருடம் 20 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப்படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும். இந்தப்படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள். இப்படி ஒரு படம் வந்திருக்கிறது நீங்கள் பாருங்கள் தெலுங்கில் நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம் என் சகோதரர் தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன்.

இந்தப்படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது அது தான் உண்மையான வெற்றி. இந்தப்படத்தை இந்தியில் அப்படியே வெளியிட வேண்டும். அங்கும் இது ஜெயிக்கும். மந்திரமூர்த்தி முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து விட்டார். சசி நிஜ வாழ்க்கையிலேயே எல்லோருக்கும் ஓடி உதவும் மனிதன்” என கூறுனார்.

Ayodhi that attracted many beyond language Samuthirakani

நடிகர்-இயக்குநர் சசிகுமார் கூறுகையில், “இந்தப்படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லை. ஆனால் ரவீந்திரன் சார் முடிந்த அளவு நிறைய தியேட்டர்கள் போடுகிறேன் என்று அவரால் முடிந்த அத்தனையும் செய்தார்.

படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப்படம் குறித்து மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது.

இந்தப்படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக்காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன். மகேந்திரன் சார் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாப்பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை.

Ayodhi that attracted many beyond language Samuthirakani

இந்தப்படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும். படம் பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் பாராட்டினார்கள். ரஜினி சார் போன் செய்து பாராட்டினார். சிம்பு பாராட்டினார். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள்” என குறிப்பிட்டார்.

இராமானுஜம்

நீதிமன்றம் படி ஏறி ஏறி கால்கள் அசந்துவிட்டன : பண்ருட்டி ராமச்சந்திரன்

சமூக பிரச்சனைகளை பேசும் தமிழ் சினிமா: நடிகர் கார்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share