அயலி அனுபவம் எப்படி இருந்தது?: நடிகை அனுமோள்

Published On:

| By Monisha

1990களின் காலகட்டத்தில், நடக்கும் சில மூட நம்பிக்கைகளை, குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடு, ஊர்க்கட்டுப்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட வெப் தொடர் அயலி. 8 பாகங்களாக வெளியாகி இளம் வயதினர் தொடங்கி அனைவரிடத்திலும் வரவேற்பட்ட பெற்றது.

இதில், அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுமோள், மலையாள சினிமாவின் இளம் நடிகை இவர், தேர்ந்தெடுத்த கதா பாத்திரங்களில் மட்டுமே நடிப்பதில் உறுதியாக இருப்பவர். இவர் சினிமாவில் நடித்த படங்களில் எண்ணிக்கை குறைவு என்றாலும் நிறைவான கதா பாத்திரங்களால் ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடம் பிடித்துள்ளார்.

கதாநாயகியாக மட்டுமே நடிக்க விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில் வலுவான கதாப்பாத்திரங்களை தயக்கமே இல்லாமல் செய்பவர். தமிழில் ‘ஓர் இரவினில்’ படத்திற்கு பிறகு தற்போது அயலியில் நடித்துள்ளார்.

எல்லா தரப்பினரின் பாராட்டை பெற்ற அயலி தொடரில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னையில் நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை பிரசாத் திடேட்டரில் கடந்த 20ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அனுமோள் பேசியதாவது,

அயலிக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

“உண்மையில் இந்த அளவு வரவேற்பு இருக்குமென நினைக்கவில்லை. எல்லோரும் பாராட்டுகிறார்கள். நினைக்காத இடத்திலிருந்தெல்லாம் பாராட்டு குவிந்து வருகிறது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ஓர் இரவினில்’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளை என்றாலும் ‘அயலி’ நல்ல பேரை வாங்கி தந்துள்ளது.”

அயலி அனுபவம் எப்படி இருந்தது?

“இந்தக் கதையைக் கேட்டவுடனேயே இதை மிஸ் பண்ணக் கூடாது என நினைத்தேன். ஏனென்றால் இது எனக்கு தெரிந்த வாழ்க்கை, என் அம்மாவுக்கு, எனக்கு நடந்தது. இது சொல்லப்பட வேண்டிய கதை. முத்துக்குமார் அதை அத்தனை அழகாக திரையில் கொண்டு வந்தார். இப்போது எங்களுக்கு கிடைத்து வரும் பாராட்டு எல்லோருக்குமானது.

எல்லோரும் அத்தனை உழைத்திருக்கிறார்கள். ஒரு சில படங்களில்தான் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அயலிக்கு அது நடந்துள்ளது.”

மலையாள திரைப்படம் பொதுவாக கலைநயம் சார்ந்த திரைப்படங்கள் மீது கவனம் செலுத்தும், தமிழ் சினிமா வணிக பாதைக்கான சினிமாவை அதிகமாக உருவாக்கும்,

இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் எதை பார்க்கிறீர்கள்?

“அனைத்து சினிமாக்களிலும், வணிகமும் கலையும் இருக்கத்தான் செய்கிறது. பணம் இல்லாமல் இங்கு சினிமா உருவாவது இல்லை, அப்படியென்றால் எல்லா படங்களும் வணிகப் படங்கள்தான். நான் பணி புரியும் ஒரு சில சினிமாக்கள் நன்றாக வரும். சில படங்கள் நன்றாக வராது. இந்த இரண்டு வகைதான் இருக்கிறது. இப்போது வணிகப் படம், கலைப் படம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.

Ayali Tamil Web Series

அதிகமான தமிழ் படங்களில் நடிக்காதது ஏன்?

“சரியான கதைகள் எனக்கு வருவதில்லை. இப்போதுதான் நல்ல கதைகள் வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த அயலி. அடுத்து டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பான ஃபர்ஹானாவில் ஒரு நல்ல கேரக்டர் செய்துள்ளேன்.

நான் தமிழ் சினிமாவில்தான் எனது திரைப்பயணத்தை துவங்கினேன். எனது முதல் ஓடிடி வெப் சீரீஸும் தமிழில்தான் அமைந்திருக்கிறது. அதுபோக தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.”

தமிழில் சமீபத்தில் நீங்கள் பார்ந்து வியந்த படம்?

“ஜெய் பீம்’ திரைப்படம் என்னை மிகவும் ஈர்த்தது. அந்தப் படம் இந்தியாவில் ஒரு பெரிய அதிர்வை உண்டு பண்ணியது.”

எந்த மாதிரி கதாபாத்திரத்தை செய்வதற்கு ஆவலாய் இருக்கிறீர்கள்?

“எந்த ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காகவும் நான் காத்திருக்கவில்லை. எனக்கு வரும் கதாபாத்திரங்களை நன்றாக செய்ய வேண்டும். அனைவரும் இதை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கிறது. ஒரு கதாப்பாத்திரம் முதலில் எனக்கு பிடிக்க வேண்டும் என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தால் அதை செய்து விடுவேன். அவ்வளவுதான்.”

இது உங்களது முதல் ஓடிடி சீரிஸ், சினிமாவிற்கும், வெப் சீரிஸ்க்கும் உள்ள வேறுபாடு என்ன?

“எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. சினிமாவை தொடர்ந்து பார்க்கலாம். ஆனால் வெப் சீரிஸ்க்கு நாம் இடைவெளி எடுத்து கொள்கிறோம். இதுதான் எனக்கு வித்தியாசமாக தெரிகிறது. மற்றபடி சினிமாவுக்கான அத்தனை உழைப்பும் இதில் இருக்கிறது.”

சினிமா இல்லாமல் டான்ஸராகாவும் இருக்கிறீர்கள் ஆனால் முன்பு போல இப்போது அதிகமாக நடன நிகழ்ச்சிகள் செய்வது இல்லையே?

“ஆம்., கொரோனாவிற்கு பிறகு நடன நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டது. மீண்டும் அந்த பாதையில் பயணிக்க வேண்டும். திரைப்படங்கள் நேரத்தை அதிகமாக எடுத்து கொள்கிறது. அனைவரும் கேட்கிறார்கள். மீண்டும் பயிற்சி செய்து அதை தொடர வேண்டும்.”

மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா?

“முதலில் எனக்கு மொழி பற்றிய பயம் இருந்தது. ஆனால் நான் சமீபத்தில் ஒரு பெங்காலி படமும், சமஸ்கிருத படமும் நடித்து இருக்கிறேன். அதை செய்த பிறகுதான் கொஞ்சம் முயற்சி எடுத்தால், அனைத்து மொழிகளிலும் நடிக்கலாம் என்ற உத்வேகம் எனக்கு வந்தது. அயலி தெலுங்கிலும் வெளியாகி இருக்கிறது. அதனால் இனிமேல் தெலுங்கிலும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்” என்று பதிலளித்திருந்தார்.

இராமானுஜம்

திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு: தொடங்கியது வாக்குப்பதிவு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel