இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகிக் கொண்டிருக்கும் Sci-Fi திரைப்படம் அயலான்.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் தான் நிறைவடைந்தது. ஆனால் படத்தின் சில காட்சிகள் படக் குழுவினருக்கு திருப்தி அளிக்காததால் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த படத்தில் 4500 VFX காட்சிகள் உள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைக்காக இத்தனை ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து, மாற்றிக் கொண்டே இருந்தனர் படக் குழுவினர். ஆனால் ஒரு வழியாக 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அயலான் படம் திரைக்கு வரும் என்று படக் குழுவினர் உறுதியாக அறிவித்திருக்கின்றனர். அதற்கான இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அயலான் படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.
With Ayalaan… For #Ayalaan 👽#AyalaanTeaser from Oct 6 😊👍#AyalaanFromPongal#AyalaanFromSankranti pic.twitter.com/Kmd50GJue7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 2, 2023
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பணிகளை மேற்கொள்ள, நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் ரவிக்குமாரும் அருகில் அமைதியாக நின்று கொண்டிருப்பது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பல தடைகளுக்குப் பிறகு பொங்கலுக்கு அயலான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதே பொங்கலுக்கு அரண்மனை 4, லால் சலாம் போன்ற படங்களும் வெளியாவதால் மீண்டும் அயலான் தள்ளி போகுமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் அக்டோபர் 6-ம் தேதி டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இனி படம் தள்ளிப் போக வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து இருக்கிறது அயலான் படக்குழு.
ஏலியனுடன் சிவகார்த்திகேயன் இணைந்து அடிக்க போகும் லூட்டியை காண பொங்கல் வரை காத்திருக்க வேண்டும். ஏலியன் பொங்கலுக்கு நீங்கள் ரெடியா?
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிய போட்டிகள் 2023: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது பரபரப்பு புகார்!