அயலான் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அயலான் படத்தின் பாடல்கள், டீசர், டிரெய்லர் ஆகிய அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. பொங்கல் ஸ்பெஷலாக அயலான் ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அயலான் படத்திற்காக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒரு திரைப்பட விளம்பர நிறுவனத்துடன் தொழில் ரீதியான ஒப்பந்தங்களை போடட்டது.
கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் விளம்பர நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி ரூபாய் தரவேண்டிய நிலையில் 50 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ.1 கோடியை படம் வெளியாவதற்கு முன்னர் கொடுப்பதாக கூறியுள்ளது.
ஆனால் விளம்பர நிறுவனத்திற்கு பணத்தை கொடுக்காமல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது. இதனால் விளம்பர நிறுவனம் அயலான் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அயலான் படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இன்று காலை இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் விளம்பர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை திருப்பி செலுத்தினால் மட்டுமே இடைக்காலத் தடையை நீக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
இதனையடுத்து தயாரிப்பு நிறுவனம் ரூ.50 லட்சத்தை செலுத்தியுள்ளது. மேலும் மீதமிருக்கும் ரூ.50 லட்சத்தை 3 மாதத்திற்குள் செலுத்தி விடுவதாக இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது உத்தரவாதம் கொடுத்துள்ளது. இதனால் அயலான் படத்தை வெளியிடுவதற்கு விதித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி அயலான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வாய்ப்பிருந்தால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பேன் : எடப்பாடி பழனிசாமி
பொங்கல் விடுமுறை : கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் அலைக்கழிக்கப்படும் மக்கள்… தப்பிக்க என்ன வழி?