3டி அனுபவத்தின் சிலிர்ப்பு: அவதார் 2 விமர்சனம்!

சினிமா

ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரமாண்டமான படம் என்ற பெயரில் ஒரு படைப்பு வெளிவரும். அது எவ்வளவு வேகத்தில் மக்களின் கவனத்தை கவர்கிறதோ, அதே வேகத்தில் நினைவில் இருந்து மங்கிப் போகும்.

சந்திரலேகா, மொகல் இ ஆசாம், ஷோலே, ஷான், எந்திரன் 2.0, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என்று அந்த வரிசை மிகப்பெரியது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும்கூட பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ், கிளியோபாட்ரா, டெர்மினேட்டர், டைட்டானிக் உட்பட பல படங்கள் பிரமாண்டத்திற்குப் பெயர் பெற்றவை.

அந்த வரிசையில் இடம்பெற்ற ஒரு திரைப்படம் ‘அவதார்’; 2009இல் வெளியாகி அவதார் சுமார் 2.93 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தது. அப்படியொரு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானால், அது எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்?
இந்த கேள்விக்கு விடை தேடித்தான் உலகம் முழுக்க சினிமா ரசிகர்கள் ஆவலாய் பறந்தனர்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் சில நகரங்களில் நள்ளிரவு 12 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. விடியற்காலை 4 மணி காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அடேங்கப்பா, என்ன வரவேற்பு.. அரங்கில் 80%க்கும் மேலான இருக்கைகள் நிரம்பியிருந்தன.

இத்தனை ரசிகர்களும் படத்தை எப்படிப் பார்த்தார்கள்? இந்த கேள்விதான் மிக முக்கியமானது. ஏனென்றால், பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து காட்சிகளையும் வரவேற்றனர் ரசிகர்கள்.

அதுவும் எப்படி? கத்தினார்கள், கூச்சலிட்டார்கள், சிரித்தார்கள், ரசித்தார்கள், பரவசமானார்கள், குதூகலமானார்கள், ஆனந்தக் கூத்தாடினார்கள் என்பதோடு கண்ணீர் கடலில் நனைந்தார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆமாம், ‘டைட்டானிக்’ பாணியில் ‘அவதார் 2’விலும் சென்டிமென்டை பிழிந்து சாறாக்கிவிட்டார் ஜேம்ஸ் கேமரூன்.

avatar part two movie review

எளிமையோ எளிமை!

சின்ஷான் எனும் அனிமேஷன் பாத்திரம் சொல்லும் தமிழாக்க வசனங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று ‘அமைதியோ அமைதி’. அதேபோல, என்னதான் பிரமாண்டமாகப் படமெடுத்தாலும் அடிப்படைக் கதையம்சத்தில் ‘எளிமையோ எளிமை’ என்ற பார்முலாவை பின்பற்றுகிறது ‘அவதார் 2’.

ஏற்கனவே நாம் பார்த்த கதைக்கருதான். ஆனாலும், கொஞ்சமும் எதிர்பார்க்காத காட்சியாக்கத்தில் அசத்திவிடுவார் ஜேம்ஸ் கேமரூன். இதிலும் அப்படியே..
’அவதார்’ படத்தில் பாண்டோரா எனும் வேற்றுக் கிரகத்தில் வாழ்பவர்கள் மீது மனித குலம் தாக்குதல் நடத்தும். அவர்களது வளங்களை கொள்ளையடிக்க முயலும். அதற்காக, கர்னல் மைல்ஸ் குவாட்ரிச் என்பவர் கேப்டன் ஜேக் சல்லியை அனுப்புவார்.

பாண்டோரா வாழ் மக்கள் போலவே, அவரது உருவத்தை மாற்றுவார். ஆனாலும், இறுதியில் பாண்டோரா மக்களின் தலைவனாகிவிடுவார் ஜேக். அங்கு வசிக்கும் நெய்த்ரியை காதலிப்பதே அதற்கான விதையாக அமையும்.

பாண்டோராவில் இருந்து மனிதப் படைகள் திரும்பி வருவதாக ‘அவதார்’ படம் முடிவடையும். அதன் இன்னொரு அத்தியாயமாக விரிகிறது ‘அவதார் 2’. மைல்ஸ் குவாட்ரிச் இறந்துபோனாலும், அவரது குளோன் ஒருவர் பாண்டோராவுக்கு வருகிறார் பெரும்படையுடன். அவர்களது முயற்சிகளை முறியடிக்கும் ஜேக், தன் குடும்பத்தை காப்பாற்றும்பொருட்டு வனப்பகுதிகளில் இருந்து கடல் பகுதிக்கு இடம்பெயர்கிறார். அங்கிருக்கும் தலைவனிடம் தஞ்சம் கேட்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக கடல் பகுதி வாழ்வுக்கு ஜேக்கின் குடும்பம் தயாராகும்போது, அந்த இடத்தைக் கண்டறிந்து வருகிறது மனிதப்படை. அவர்களின் தாக்குதலை ஜேக்கும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் முறியடித்தார்களா என்பதுதான் ‘அவதார் 2’. நிச்சயம் முறியடித்துவிடுவார்கள் என்பதை தொடர்ச்சியாக ஹாலிவுட் படம் பார்க்கும் பொடிப்பயல்கூட சொல்லிவிடுவான். அதையும் மீறி மூன்றேகால் மணி நேரம் ஓடும் படத்தை பார்க்கச் செய்வதுதான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் குழுவினரின் வித்தை.

avatar part two movie review

3டி அனுபவத்தின் சிலிர்ப்பு!

அவதார் முதல் பாகத்தில் பாண்டோராவின் வனம் காட்டப்படும்; ஒருவகையில், அது அமேசான் வனத்தின் புகைப்படங்களை நம் நினைவில் நிறுத்தும். அதேபோல, இதில் ஆழ்கடல் அற்புதங்கள் வேறோரு பார்வையில் விரிகிறது. ‘அவதார்’ மனிதர்கள் நீல நிறம் என்றால், இப்பாகத்தில் வருபவர்கள் பச்சை நிறம். அவ்வளவுதான் வித்தியாசம்.

மற்றபடி, இரண்டு படங்களுமே பாரம்பரியமான வாழ்வு முறைக்கு ‘ஜே’ போடுகின்றன.
அறிவியல் வளர்ச்சியில் மேலோங்கிய மனித சமூகத்திடம் வேட்டையாடும் வேட்கை அதிகமிருப்பதும், பூமிப்பந்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்புவரை நிலைத்திருந்த ஆப்பிரிக்க பழங்குடிகளின் வாழ்க்கைமுறையை சார்ந்த ‘பாண்டோரா’ கிரகவாசிகளின் செயல்பாடுகள் சக உயிர்களை நேசிப்பதாக காட்டியிருப்பதும் ஆகப்பெரிய முரண்கள்.

இது போன்ற கேள்விகளை மீறி, சாதாரண ரசிகன் பிரமிக்கத்தக்க வகையில் அற்புதமான ‘3டி’ அனுபவம் தருகிறது ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம். வழக்கமாக, 3டி படங்களில் பிரமாண்டத்தினால் பிரமிப்புதான் உருவாகும்; இதில் கண்களில் இருக்கும் 3டி கண்ணாடியை மீறி நீர் தாரைதாரையாக கொட்டுகிறது. அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக சில காட்சிகள் அமைந்திருக்கின்றன. நிச்சயமாக, உலகம் முழுக்கவிருக்கும் மக்களை ஒன்றாக சேர்க்கும் பிணைப்பாகவும் அதுவே இருக்கும்.

நிச்சயம் பார்க்கலாம்!

உங்களுடைய குழந்தைளை ‘தீம் பார்க்’, ‘கடற்கரை’ பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது போன்று நிச்சயமாக ’அவதார் 2’வுக்கும் அழைத்துச் செல்லலாம். அதற்கேற்ற வகையில, படம் நிச்சயம் ‘அருமையாக’ இருக்கும்.

avatar part two movie review

இதுவரை வந்த படங்களை பார்த்தாலே, இனிமேல் எவரும் புதிதாக கதை சொல்லிவிட முடியாது என்பது புரியும். ‘அவதார் 2’ எடுப்பதற்கு முன்னதாகவே, அதில் உறுதியாக நின்றவர் ஜேம்ஸ் கேமரூன். எப்படி ‘டைட்டானிக்’கை நாம் கொண்டாடினோமோ, அதேபோல ‘அவதார் 2’வையும் கொண்டாடுவோம்.

சரி, படத்தில் குறைகள் இருக்கிறதா? நிச்சயம் உண்டு. பழமைவாதத்தை தாங்கிப் பிடிப்பதாக, இப்படம் விமர்சிக்கப்படலாம். ‘அவதார் 2’வை ஒருவகையில் ஹாலிவுட்டின் ‘காந்தாரா’ என்றும் சொல்ல முடியும். இரண்டுமே நம் மரபில் இருக்கும் பெருமையை ஆரவாரத்துடன் வரவேற்கின்றன.

இங்கு மரபு என்று சொல்லப்படுவது ஆதி மனிதனின் அடிச்சுவடுகளை மட்டுமே. அதன் மீது பிடிப்பு இல்லாதவர்களுக்கு இப்படம் பிடிக்காது. அதேபோல, முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் மீண்டும் மீண்டும் கதாபாத்திரங்களை சிறை பிடிப்பதும் மீண்டும் விடுவிப்பதுமாக காட்சிகள் அமைந்திருக்கின்றன. முடிவும் கூட அப்படித்தான் இருக்கிறது. அவை கண்டிப்பாக போரடிக்கும். அதையும் மீறி, ‘வாவ்’ சொல்ல பல கட்டங்கள் படத்தில் உண்டு.

சில 3டி படங்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் மட்டுமே முப்பரிமாணத்தில் நம்மை கவர்ந்திழுக்கும். நடுவிலுள்ள காட்சிகளை கண்ணாடியை கழற்றிவைத்துவிட்டுப் பார்க்க முடியும். இதில் அப்படியில்லை. 3டி வேண்டாம் என்று நினைத்தால் கூட பாதகமில்லை; சாதாரணமாகப் பார்த்தால் கூட, இதன் காட்சியமைப்பு நம்மை பிரமிக்க வைக்கும்.

உதய் பாடகலிங்கம்

சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் நாளை இயங்கும்!

கலைஞர் பேனா சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *