கொண்டாடத்தக்க புனைவுலகம்!
ஒரு படத்தில் பணியாற்றும் அனைவரும் சிரத்தையைக் காட்டுவதென்பது எப்போதும் நிகழாது. கதை சார்ந்து, அதில் பணியாற்றும் கலைஞர்கள் சார்ந்து, இயக்குனரின் தீர்க்கமான பார்வை சார்ந்து, அப்படியொரு சிரத்தை அனைவரிடமிருந்தும் கிடைக்கும். அப்படி வாய்க்கும்போது, அது சிறப்பான படைப்பாக மாறும். மிகச்சில நிமிடங்களில் திரையில் அதனை உணர முடியும்.
சமீபத்தில் அப்படியொரு சிரத்தைமிக்க படைப்பு எனும் எண்ணத்தை ஊட்டிய படம் ‘ஆகஸ்ட் 16 1947’. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பான நாட்களில் நிகழ்வது போன்ற கதையமைப்பைக் கொண்டது.
என்னதான் நேர்த்தியான காட்சியமைப்பைக் கொண்டிருந்தாலும், வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் சில காட்சிகளும் இதிலுண்டு. அதுவே, இப்படம் சுதந்திரப் போராட்டத்தைக் கேலிக்குரியதாகக் காட்டிவிடுமோ என்ற கேள்வியையும் எழுப்பியது.
சுதந்திரம் எப்போது?
புளியங்குடி அருகே உள்ள செங்காடு எனும் பகுதி. அங்குள்ள மக்கள் பஞ்சு ஆலை ஒன்றில் வேலை செய்கின்றனர். ராபர்ட் கிளைவ் எனும் ஆங்கிலேய அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது இயங்குகிறது.
ஆங்கிலேயர்கள் வகுத்த சட்ட திட்டங்களை மீறிய கொடுங்கோலாட்சி செங்காட்டில் நிலவுகிறது. 16 மணி நேர வேலை, தாகமெடுத்தாலோ இயற்கை உபாதை வந்தாலோ இருக்குமிடத்தைவிட்டு அகல முடியாத கொடுமை, மீறினால் சவுக்கடி உள்ளிட்ட கொடிய தண்டனைகள் என்றிருக்கிறது அந்த செங்காட்டின் நிலைமை.
ராபர்ட்டின் ஒரே மகன் ஜஸ்டின் காட்டுக்குள் சென்று வேட்டையாடுவதையும் செங்காட்டில் இருக்கும் சிறு பெண்களை காம வேட்கையோடு அணுகுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பயந்து, பல ஆண்கள் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளைக் கொன்றுவிடுகின்றனர். ராபர்ட்டின் வலது கரமாக விளங்கும் ஜமீன்தார் மகள் தேன்மொழியும், அவ்வாறு சிறு வயதிலேயே இறந்துவிட்டதாக ஒரு கதை நிலவுகிறது. உண்மையில், ஜமீன் வீட்டில் அந்த பெண் ரகசியமாக வளர்கிறார். சிறு வயதில் இருந்து தேன்மொழியோடு பழகும் பரமனுக்கும் அவரது நண்பருக்கும் அந்த ரகசியம் தெரியும்.
ஒருநாள் தேன்மொழி உயிரோடிருக்கும் உண்மை ஜஸ்டினுக்குத் தெரிய வருகிறது. அப்பெண்ணின் அழகு அவரை ஈர்க்கிறது. விஷயம் ராபர்ட்டின் காதுக்கும் போகிறது. உடனே, தன் பெண்ணை விட்டுவிடுமாறு அவரிடம் கெஞ்சுகிறார் ஜமீன். அவரோ, ஜஸ்டின் விரும்பியவாறு தேன்மொழியை அனுப்பிவை என்று உத்தரவிடுகிறார்.
மானம் போய்விடக் கூடாது என்று மருகும் ஜமீன் குடும்பத்தினர் தேன்மொழியை உயிரோடு சமாதி செய்ய முடிவெடுக்கின்றனர். தரையில் குழி தோண்டிப் புதைக்கின்றனர். அதை அறியும் பரமனோ, சுரங்கம் தோண்டி அவரைக் காப்பாற்றுகிறார். அதோடு நில்லாமல், ஜஸ்டின் வீட்டிலேயே தேன்மொழியை அடைத்து வைக்கிறார். அந்த நேரத்தில், காட்டில் புலி வேட்டையாடச் சென்றிருக்கிறார் ஜஸ்டின்.
பரமனின் கணிப்பை மீறி ஜஸ்டின் உடனடியாகச் செங்காடு திரும்புகிறார். அவரது படுக்கையறையில் தான் தேன்மொழி மறைந்திருக்கிறார்.
அதேநேரத்தில், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த அன்று புளியங்குடியில் நடைபெறும் ஆட்சிமன்றக் கூட்டத்தில் ராபர்ட் பங்கேற்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கிறது மேலிடம். அதனால், ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று இரவு அவரது வீட்டுக்குச் செல்கிறார் புளியங்குடி இன்ஸ்பெக்டர் கரிகாலன்.
அப்போது, தன் மகன் ஜஸ்டின் விருப்பம் நிறைவேறும் வரை இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த தகவலைச் செங்காட்டு ஜமீனிடமும் ஊர் மக்களிடமும் சொல்லாமல் தள்ளிப் போடலாம் என்கிறார் ராபர்ட். வேறு வழியில்லாமல், இன்ஸ்பெக்டரும் அதற்குச் சம்மதிக்கிறார்.
இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் நடுவே, இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது எனும் தகவல் செங்காட்டைச் சேர்ந்த இரண்டு மனிதர்களுக்குத் தெரிய வருகிறது. ஒருவர், புளியங்குடியில் இருந்து ஊர் திரும்பும் வழியில் ஆங்கிலேயப் படையிடம் மாட்டிக் கொள்கிறார். இன்னொரு நபரோ, ராபர்ட்டின் வாளுக்கு தன் நாக்கைப் பறி கொடுக்கிறார்.
ஒருபுறம், ராபர்ட் மற்றும் ஜஸ்டின் அடக்குமுறைகளை எதிர்க்கத் துணியும் பரமன். இன்னொரு புறம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பெற்ற மகளையே பலி கொடுக்கத் துணியும் ஜமீன் குடும்பம். இவர்களுக்கு நடுவே, சுதந்திரம் கிடைத்துவிட்டதை அறியாமல் அடிமைத்தளைகளோடு அடங்கி கிடக்கும் மக்கள் கூட்டம். ஆகஸ்ட் 16, 1947 அன்று இவர்கள் அனைவரும் என்னவானார்கள் என்று சொல்கிறது இத்திரைப்படம்.
எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொடங்கும் திரைக்கதை, அது நிகழ்ந்துவிட்டது என்பதை அம்மக்கள் உணர்ந்தார்களா என்பதுடன் முடிவடைகிறது. அதற்கிடையே பல மனிதர்கள், அவர்களின் உள்ளக்கிடக்கை, அதனால் விளையும் முரண்கள், அவற்றுக்கான தீர்வுகள் என்று நகர்கிறது திரைக்கதை.
பெயர் சொல்லும் படம்!
கௌதம் கார்த்திக்கைப் பொறுத்தவரை, இது அவரது பெயர் சொல்லும் படம். ஆனால், எந்த பாத்திரமாக இருந்தாலும் தனது ‘ட்ரேட்மார்க்’ ஹேர்ஸ்டைலை மட்டும் அவர் ஏன் மாற்றிக்கொள்ளத் தயங்குகிறார் என்றுதான் புரியவில்லை. அதுவே, அவரது நடிப்பின் இயல்பை வெகுவாகச் சிதைக்கிறது என்று யாராவது சொன்னால் சரி.
நாயகி ரேவதிக்கு இது முதல் படம். ஆனால், பருக்கள் பூத்த அவரது முகம் அந்த பக்குவமின்மையை மறைத்து விடுகிறது. அந்த இளம்பெண் எனும் அடையாளமே அப்பாத்திரத்தின் இருப்பை இயல்பானதாகக் காட்டுகிறது.
வில்லன்களாக வரும் ஜேசன் ஷா, ரிச்சர்ட் ஆஸ்டன், ஜமீனாக வரும் மதுசூதன் ராவ், அவரது மனைவி மற்றும் மகன்களாக நடித்தவர்கள், கௌதமின் நண்பராக வரும் புகழ், மகளைப் பலிகொடுத்த பெற்றோராக வரும் தாத்தா – பாட்டி மற்றும் செங்காட்டு மக்களாக வருபவர்கள், புளியங்குடி இன்ஸ்பெக்டர் மற்றும் ஆங்கிலேய அரசில் பொறுப்பு வகிப்பவர்கள் என்று படம் முழுக்கப் பாத்திரங்கள் நிறைந்து கிடக்கின்றன. போஸ் வெங்கட்டும் அவர்களில் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார்.
ஓரிரு ஷாட்களை கொண்ட காட்சிகள் தொடங்கி சில நிமிடங்கள் வரை தொடரும் காட்சிக்கோர்வைகள் என்று பெரியதும் சிறியதுமாக விரியும் பாதை போன்று திரைக்கதையை அமைக்க உதவியிருக்கிறது ஆர்.சுதர்சனின் படத்தொகுப்பு. செல்வகுமார் எஸ்.கே.வின் ஒளிப்பதிவு படத்தைப் பிரமாண்டமானதாகவும் உழைப்பு மிக்கதாகவும் காட்ட உதவியிருக்கிறது. அதிலும், ராபர்ட்டின் ஆளுகைக்குட்பட்ட ஆலையைக் காட்டும் தொடக்கக் காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோரை ஒரே பிரேமில் காட்டியிருக்கும் விதம் மேற்கத்தியப் படங்களை நினைவூட்டுகிறது. மிக முக்கியமாக, விஎஃப்எக்ஸ் இடம்பெறும் இடங்களைக் கண்டறியாவண்ணம் மிகநுட்பமாகப் பயன்படுத்த வகை செய்திருக்கிறது.
காட்சிக் கோணத்தை மட்டும் உத்தேசிக்காமல், முடிந்தவரை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை நினைவூட்ட உதவியிருக்கிறது டி.சந்தானத்தின் கலை வடிவமைப்பு. ஷான் ரோல்டன் இசையில் ’கோட்டிக்காரப் பயலே’ கிச்சுகிச்சு மூட்டுகிறது என்றால், ‘சீனிக்காரி’ பாடல் இதமாக மனதை வருடுகிறது. இடைவேளைக்கு முன்னதாக வரும் காட்சிகளில் பின்னணி இசை பரபரப்பூட்டுகிறது என்றால், கிளைமேக்ஸில் ‘ஜனகணமன’ ஒலிக்குமிடம் நம்மை நெகிழச் செய்கிறது. அந்த வகையில், தேசிய அளவில் ஷான் ரோல்டன் மீது வெளிச்சம் விழும் வாய்ப்பைத் தந்திருக்கிறது ஆகஸ்ட் 16 1947.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பு என்ற அடையாளம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான தொடக்கப்புள்ளி. அதனை இறுகப் பற்றிக்கொண்டு, தன்னை முன்னிறுத்தும் படைப்பொன்றைத் தந்திருக்கிறார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்.
ஏன் கொண்டாட வேண்டும்?
தமிழ் அடையாளங்களோடு இருந்தாலும் இக்கதை கன்னடம், மலையாளம், தெலுங்கு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடியது. யூடியூப்பில் வெளியாகும்போது, இந்திப் பதிப்பும் கவனம் பெறலாம். அதனாலேயே, அந்தந்த மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ எனும் முத்திரையையும் பெற முயன்றுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, ‘இதுதான் நாட்டுப்பற்று’ என்று சொல்லும் வகையில் உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் இப்படத்தில் உண்டு. ஆனால், அது உள்ளீடற்ற சோளக்கொல்லை பொம்மை போலல்லாமல் ரத்தமும் சதையும் மிக்க ஒரு மனித உயிராக அமைந்திருப்பதுதான் இப்படத்தின் வெற்றி.
சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் வாழும் மனிதர்கள், அவர்களது மனநிலை, அதற்கான காரணங்கள், அவற்றிற்கிடையேயான ஏற்ற இறக்கங்கள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், தீர்வுகள் என்று பல கோணத்தில் சிந்தித்து பாத்திரங்களைத் திரையில் நடமாட விட்டிருக்கிறார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார். அதனால், வெளித்தோற்றத்தில் வழக்கமான கமர்ஷியல் படமாகத் தோன்றினாலும், திரைக்கதையில் பல உள்ளடுக்குகள் இருப்பது மெலிதாகத் தெரிய வருகிறது.
இன்றைய காலகட்டத்தில், எந்தவித செயற்கைப்பூச்சும் இன்றி இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் கதையாக வடித்தால் ‘ஆவணப்படம்’ என்ற முத்திரையுடன் பெருவாரியான மக்களின் பார்வைக்கு முன்வைக்கப்படாமல் ஒதுக்கப்படும். அதேநேரத்தில், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதை என்பதற்கான எவ்வித நியாயங்களையும் முன்வைக்காத ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற படைப்புகள், அவற்றில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்களுக்காகவே கொண்டாடப்படுகின்றன. அப்படிப் பார்த்தால், பொன்குமார் காட்டும் ‘செங்காடு’ எனும் உலகம் நமக்குப் பிடித்தமான ஒரு ஜனரஞ்சகமான புனைவாகவே இருக்கும்.
க்ளிஷேக்கள் பல இருந்தாலும், ஒரு தரமான கமர்ஷியல் படம் என்று கொண்டாடத்தக்க வகையில் உள்ளது ‘ஆகஸ்ட் 16 1947’. மக்கள் பெரும் வரவேற்பைத் தரும் பட்சத்தில், எதிர்காலத்தில் ‘கிளாசிக்’ அந்தஸ்தையும் இப்படம் எட்டக்கூடும்!
உதய் பாடகலிங்கம்
மோடிக்குத் திரண்ட கூட்டம்: டெல்லிக்கு போன ரிப்போர்ட்!
தோனி தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் அப்டேட்!