சைஃப் அலிகான் மீது தாக்குதல்… பின்னணியில் வெளிநாட்டு சதி? நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

சைஃப் அலி கானைத் தாக்கிய ஷரிபுலை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் இன்று (ஜனவரி 19) உத்தரவிட்டது.

பிரபல பாலிவுட் நடிகரான சைஃப் அலிகான் கடந்த 16ஆம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா வெஸ்டில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மநபரால் கழுத்து மற்றும் தோள்பட்டை உட்பட ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டார்.

சிகிச்சைக்காக அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடைபெற்ற ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து 2.5 அங்குல கத்தித்துண்டு அகற்றப்பட்டது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தானே நகரின் தொழிலாளர் முகாம் பகுதியில் பதுங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்பவரை மும்பை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷரிபுல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர் என்றும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அவர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஷரிபுலை மும்பை பாந்த்ரா விடுமுறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீசார் தரப்பில், ஷரிபுலை 14 நாள் காவலில் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் ஒரு வங்கதேச நாட்டவர் என்றும், இந்தக் கொடூரமான குற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும், இந்த வழக்கில் சர்வதேச சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் போலீசார் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ”மும்பை காவல்துறையின் கோரிக்கையில் நாங்கள் திருப்தி அடைகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பிரபலத்தின் வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளார். அன்று அவர் அணிந்திருந்த ஆடைகளை போலீசார் மீட்டெடுக்க வேண்டும். எனவே, காவலில் விசாரிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் பயன்படுத்திய கத்தியையும் போலீசார் மீட்டெடுக்க வேண்டும். சர்வதேச சதித்திட்டம் என அரசு தரப்பு கூறியது சாத்தியமற்றது என்று கூற முடியாது. இது விசாரணையின் ஆரம்ப கட்டம் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவரின் போலீஸ் காவலுக்கான கோரிக்கை நியாயமானது” என்று தெரிவித்தது.

மேலும் ஷரிபுலை வரும் ஜனவரி 24ஆம் தேதி வரை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share