ஷங்கர் படங்களை ‘பாலோ’ செய்பவன்!
பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும். ’நோ லாஜிக் ஒன்லி மேஜிக்’ வகையறா காட்சிகள் மட்டுமே படத்தில் இருந்தாலும், தியேட்டருக்குள் அமர்ந்திருக்கும்போது அப்படியொரு நினைப்பே எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஷாரூக்கான் படமான ‘ஜவான்’ ட்ரெய்லர் கூட, நிச்சயம் அந்த வரிசையில் ஒன்று என்றே கட்டியம் கூறியது. சரி, படமும் அப்படித்தான் இருக்கிறதா?
மக்களைக் காக்க வந்தவன்!
ராபின்ஹுட் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தக் கேள்வியே தவறானது என்று தெரியும். என்ன செய்ய? அப்படித்தான் இந்த விமர்சனத்தைத் தொடங்க வேண்டியிருக்கிறது.
படுகாயத்துடன் ஒரு நபர் நதியில் விழுகிறார். அவரைச் சீன எல்லையோரக் கிராமமொன்றில் வாழும் மக்கள் மீட்டெடுக்கின்றனர். அம்மக்களை எதிரிகள் சூழும்போது, அந்த படுகாயமடைந்த நபர் படுக்கையில் இருந்து எழுந்துவந்து காப்பாற்றுகிறார்.
30 ஆண்டுகள் கழித்து, அதே தோற்றத்தோடு ஒரு நபர் மும்பை மெட்ரோ ரயிலில் ஏறுகிறார். அவருடன் சேர்ந்து ஆறு பெண்கள் அந்த ரயிலை கடத்துகின்றனர். நிலைமையைக் கையாள, சிறப்புப் படை அதிகாரி நர்மதா (நயன்தாரா) அனுப்பப்படுகிறார். கடத்தல்காரர்களின் ‘டிமாண்ட்’ என்னவென்று அவர் கேட்க, கடத்தல் கும்பலின் தலைவன் (ஷாரூக்கான்) ‘ஆலியா’ என்கிறார். அந்த ரயிலில் ஆலியா என்றொரு பதின்ம வயதுச் சிறுமியும் இருக்கிறார்.
அதையடுத்து, மீண்டும் ‘உங்களது டிமாண்ட் என்ன’ என்கிறார் நர்மதா. அப்போது, மாநில வேளாண் துறை அமைச்சரை கட்டுப்பாட்டு அறைக்கு வரச் சொல்கிறார். அமைச்சரிடம் ஒரு எண்ணைச் சொல்கிறார் அந்த நபர். அவருக்கு, அது என்னவென்று தெரியவில்லை. அது, அம்மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை. அதற்கான தண்டனையாக, சுமார் 40,000 கோடி ரூபாயைத் தங்களது கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி சொல்கிறார் அந்த நபர்.
அதனைத் தரப்போவது யார் என்று அமைச்சர் கேட்க, அவரோ தொழிலதிபர் காளீஸ் பெயரைக் குறிப்பிடுகிறார். அவரது மகள் ஆலியா அந்த மெட்ரோ ரயிலில் ஒரு பயணியாக இருப்பதே அதற்குக் காரணம். அந்த கடத்தல் நபர் சொன்னது போலவே, ரூ.40,000 கோடி சில நிமிடங்களில் கைமாறுகிறது. அடுத்த நிமிடமே அந்த ரயில் புறப்படுகிறது. ஆனால், அடுத்த ரயில்நிலையத்தில் அது நிற்கிறது; ரயிலில் இருந்து இறங்கி ஓடும் மக்களுக்கு நடுவே கடத்தல்காரர்களை போலீசால் பிடிக்க முடியவில்லை.
அந்த கடத்தலைச் செயல்படுத்தியவர் ஜெயிலர் ஆசாத் (ஷாரூக்கான்). அவருக்கு உதவியவர்கள் அவர் நிர்வாகிக்கும் பெண்கள் சிறைச்சாலையில் இருக்கும் ஆறு கைதிகள் (பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சஞ்சிதா, கிரிஜா ஓக், லெகர் கான், ஆலியா குரோஷி).
சரி, அந்த கடத்தல் கும்பல் ஏன் தொழிலதிபர் காளீஸை குறி வைக்க வேண்டும்? பணத்தை இழந்த அவர், பதிலுக்கு என்ன செய்தார்? இந்தக் கதையில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய எல்லையோரப் பகுதியில் காப்பாற்றப்பட்ட மனிதரின் பங்கு என்ன? அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் ஒவ்வொரு கதையாகச் சொல்லிச் செல்கிறது ‘ஜவான்’.
ஷங்கர் படங்களில் பெரும்பாலானவை ‘மக்களைக் காக்க வந்தவன்’ என்ற அடையாளத்தைத் தாங்கும் நாயகர்களை பிரதானப்படுத்துபவை. அவரது சீடர் என்பதால், அதே பார்முலாவை பட்டி டிங்கரிங் செய்து பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. என்ன, பழைய கதைக்குக் காட்சிகள் வழியே புதிதாக முலாம் பூசுவார் ஷங்கர். மாறாக, பழைய கதைக்கு பழைய முலாமையே பலமுறை பூசியிருக்கிறார் அட்லீ.
ஷாரூக் ‘ஹீரோயிசம்’!
அமீர்கான், சல்மான்கான், அக்ஷய் குமார் போன்றவர்கள் ‘ஹீரோயிசம்’ பாதைக்குத் திரும்பியபிறகும், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் ‘அதிரி புதிரி’ சண்டைக்காட்சிகளைக் கிண்டலடிக்கும் பாணியிலேயே ’சென்னை எக்ஸ்பிரஸ்’ போன்ற படங்களில் நடித்து வந்தார் ஷாருக். ’பதான்’ வெற்றிக்குப் பிறகு முழுக்க ‘மசாலாதனமான’ அதே பாணியை ‘ஜவான்’ படத்திலும் தொடர்ந்திருக்கிறார்.
வெவ்வேறு கெட்டப்களில் ஷாரூக்கான் வரும்போது தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ். ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் படத்தை பார்க்க மக்கள் முண்டியடிக்கக் காரணமே, அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதுதான். இதில் அது நிகழ்ந்திருக்கிறது.
ஷாரூக் மீசை வைத்தபோது இல்லாத உறுத்தல், க்ளீன்ஷேவ் செய்த முகத்தில் சுருக்கங்கள் நிறைந்து தோன்றும்போது உருவாகிறது. முகத்தைப் பொலிவாக வைத்திருப்பதற்கான பயிற்சிகளை மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களிடம் அவர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நயன்தாரா முதன்முறையாக இந்திப் படமொன்றில் நடித்துள்ளார். அவரது தோற்றமும் இருப்பும் நிச்சயம் அங்குள்ள ரசிகர்களைக் கவரும்.
தீபிகா படுகோனே கௌரவத் தோற்றம் என்று சொன்னாலும், அவரும் இன்னொரு நாயகியாகவே பின்பாதியில் வருகிறார். பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட ஆறு பேரும் திரையில் ஆக்ஷன் நாயகிகளாக தோன்றியிருக்கின்றனர். அவர்களுக்கான முக்கியத்துவம், ஷாரூக்கான் பாத்திரத்தின் திட்டமிடுதலைச் செயல்படுத்துவதோடு முடிந்துவிடுகிறது.
தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு கமர்ஷியல் படங்களைப் பார்ப்பவர்களுக்கு விஜய் சேதுபதியின் வில்லன் பாத்திரம் வித்தியாசமாகத் தெரியாது. வழக்கமாக, இது போன்ற பாத்திரங்களில் ஜெகபதி பாபுவை நடிக்க வைப்பார்கள். அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்குத் தற்போது கிடைத்திருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்காக, அவரது காட்சிகளை மட்டும் தமிழில் படம்பிடித்திருக்கின்றனர்.
சுகாதாரத் துறை அமைச்சரின் உதவியாளராக, இரண்டு காட்சிகளில் தலைகாட்டியிருக்கிறார் யோகிபாபு. தமிழ் பதிப்புக்காக மட்டும் அவரைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து ரித்தி டோக்ரா, இஷாஸ் கான், சுனில் குரோவர், ரவீந்திரா விஜய் உட்படப் பலர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
மெர்சல் முதல் அட்லீ உடன் தொடரும் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இதிலும் அவரோடு கைகோர்த்திருக்கிறார். காட்சியாக்கத்தில் மனிதர் மிரட்டியிருக்கிறார்.
ரூபன் படத்தொகுப்பில் கதை சீராக நகர்ந்து செல்கிறது. சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்களில் கண்களைத் திணறடிக்கிறது அவரது உழைப்பு.
டி.முத்துராஜின் தயாரிப்பு வடிவமைப்பு, ஒட்டுமொத்தப் படமும் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு பிரேமிலும் பறை சாற்றுகிறது. அந்த நோக்கம் பூர்த்தியாக வேண்டும் என்பதில் இயக்குனர் அட்லீயும் அக்கறை காட்டியிருக்கிறார்.
’ஜவான்’ மூலமாக அனிருத்தின் இசை முதன்முறையாக இந்தியில் நேரடியாக ஒலிக்கிறது. அதற்கேற்ப ஹிட் பாடல்கள் தந்து அசத்தியிருக்கிறார். தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகள் நம்மை இருக்கை நுனிக்குக் கொண்டுவருவதில், அவரது பின்னணி இசைக்குப் பெரும் பங்குண்டு. அதேநேரத்தில், சோகமான காட்சிகளில் ‘ஓ’வென்று பெருங்குரலை அலற விட்டிருப்பது எரிச்சலூட்டுகிறது.
இது அட்லீ படம்!
மௌனராகம், சத்ரியன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் மூன்று முகம், சக்தே இந்தியா படங்களின் அதிமசாலா வடிவமாக அமைந்திருந்தன அட்லீயின் முந்தைய நான்கு படங்கள். இந்த படங்களில் சில காட்சிகள் சில வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்தாளப்பட்டிருப்பதாக, யூடியூப் காணொளிகளில் சிலர் விளக்கம் தந்திருப்பதையும் காணலாம். அதையெல்லாம் தாண்டி, திரைக்கதைக்கான ‘ரிதம்’ என்னவென்று அறிந்து அதனைத் திரையில் கொண்டு வருவதில் அட்லீ ‘ஜித்தர்’ என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். அப்படிப் பார்த்தால், ஜவான் ஒரு அட்லீ படம்.
சத்யராஜ் நடித்த ‘தாய்நாடு’ படம் போன்று இது இருக்குமா என்ற சந்தேகம், ‘ஜவான்’ வெளியாகும் முன்னே எனக்கிருந்தது. கிட்டத்தட்ட அதே பாணியில்தான் இக்கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் வரும் பிளாஷ்பேக் பகுதி அப்படியே ‘ஆரம்பம்’ படத்தை நினைவூட்டியது. நெடுஞ்சாலையில் வரும் சண்டைக்காட்சி ‘வலிமை’ படத்தைப் பார்த்தாற் போலிருந்தது. முக்கியமாக, ஆறு பெண்களுடன் ஷாரூக்கான் பாத்திரம் வருவது போன்று வடிவமைக்கப்பட்டது ‘மனிஹெய்ஸ்ட்’ சீரிஸை பிரதி எடுத்தாற் போலிருந்தது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இவற்றோடு ஷங்கரின் ‘இந்தியன்’, ‘அந்நியன்’ பாணியில் எளிய மக்களின் பிரச்சனைகளுக்காகப் பொங்கியெழுந்து, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் புரட்சிகரமான காட்சிகளும் வசனங்களும் கூட இப்படத்தில் உண்டு. அதே சாயலில்தான், எளிதாகக் கவர ‘ஜவான்’ என்ற டைட்டிலையும் அட்லீ தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கூடவே, ‘யாதோன் கி பாராத்’ என்று பாட்டு பாடாத குறையாகப் பழைய இந்திப் பட பாணியில் விஜய் சேதுபதியை பழிக்குப் பழி வாங்கும் காட்சிகளும் உண்டு. இப்படிப் பல படங்களில் பார்த்து ரசித்த காட்சிகளை, சில அம்சங்களை ஒன்றாகச் சேர்த்திருக்கிறது ‘ஜவான்’.
இதில் லாஜிக் மீறல்கள் ஏராளம். அவற்றை எண்ணத் தொடங்கினால், சில நிமிடங்களிலேயே தியேட்டரை விட்டு வெளியேறியாக வேண்டும். ‘இல்லை, எனக்குத் தேவை பொழுதுபோக்கு மட்டுமே’ என்றெண்ணினால், டைட்டில் கிரெடிட்டில் இடம்பெற்ற ‘ராமையா வஸ்தாவய்யா’ பாடல் வரை ஜவானை ரசிக்கலாம். அட்லீ தனது அடுத்த படத்தில், நாம் மேலே குறிப்பிட்டவற்றை ஒரு ‘டிஸ்க்ளெய்மர்’ ஆகவே இடம்பெறச் செய்துவிடலாம். அப்போதுதான், ஒவ்வொரு முறையும் அவற்றை விமர்சனத்தில் குறிப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம்!
உதய் பாடகலிங்கம்
ஜி 20 மாநாடு… வரவேற்பு மேடையின் பின்னணியில் இருக்கும் சக்கரம் என்ன?
சந்திரபாபு நாயுடு கைது: ‘இந்தியா’ கூட்டணி கண்டனம்-ஆந்திராவில் போராட்டம்!