உதயசங்கரன் பாடகலிங்கம்
மெதுவாகச் சூடேறும் திரைக்கதை!
செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் ஆன பாத்திரத்தில் நீர் ஊற்றிச் சுட வைத்தால், அதனை ஆற வைப்பதற்குப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். போலவே, அடுப்பு நிறைய நெருப்பு எரிந்தாலும் அப்பாத்திரம் சூடாவதற்குள் ‘போதும்.. போதும்..’ என்றாகிவிடும். அப்படித்தான் சில திரைப்படங்களைப் பார்க்கையில், முதலில் ‘என்னடா படம் இது..’ என்று தோன்றும். திரைக்கதை மெதுவாகச் சூடு பிடிக்கத் தொடங்கியதில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி முடியும் வரை, நம்முள் கொதிப்பு மெல்ல உயர்வது ஒரு வகை அனுபவம்.
அப்படிப்பட்ட அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது ஆசிஃப் அலி, விஜயராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சிலர் நடிப்பில், பாபுல் ரமேஷ் எழுத்தாக்கத்தில், டிஞ்சித் அய்யதன் இயக்கியுள்ள ‘கிஷ்கிந்தா காண்டம்’ மலையாளத் திரைப்படம்.
இப்படிப் புகழும் அளவுக்குப் படத்தில் என்ன இருக்கிறது?
கடுகளவு கதை!
வனத்துறையில் பணியாற்றும் அஜயசந்திரன் (ஆசிஃப் அலி), அபர்ணா (அபர்ணா பாலமுரளி) இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொள்கின்றனர். இத்திருமணத்தில் அஜயனின் தந்தை அப்பு பிள்ளை (விஜயராகவன்) கலந்துகொள்ளவில்லை. அந்த நேரத்தில், வீட்டில் தனது துப்பாக்கியை அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் நேரம் என்பதால், உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்திருப்பவர்கள் அதனைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் கடைசி நாளன்று தான், மேற்கண்ட இரு சம்பவங்களும் நிகழ்கின்றன.
அஜயசந்திரனுக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே பிரவீணா என்ற பெண்ணை மணந்து, அத்தம்பதிக்கு சாச்சி என்றொரு மகன் இருக்கிறார். திடீரென்று சாச்சி காணாமல் போக, புற்றுநோயால் அவதிப்படும் பிரவீணாவும் சில மாதங்களில் மரணமடைகிறார். அந்த துக்கத்தில் இருந்து அவரை விடுவிக்கும் எண்ணத்தோடு, பிரான்சில் வந்து தனது குடும்பத்தோடு வாழுமாறு அழைக்கிறார் அவரது சகோதரர். ஆனாலும், தந்தையை விட்டுத் தன்னால் வர முடியாது என்று மறுத்துவிடுகிறார் அஜயசந்திரன்.
இந்த உண்மைகள் தெரிந்தபிறகு, அபர்ணாவுக்கு அக்குடும்பத்தின் மீது பற்றுதல் அதிகமாகிறது. அதன் தொடர்ச்சியாக, காணாமல் போன சாச்சியைத் தேட வேண்டுமென்கிற எண்ணம் அவருக்குள் வலுப் பெறுகிறது.
அப்பு பிள்ளை ராணுவத்தில் பணியாற்றியவர். அதனால், குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை அவரது துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பித்ததாக, காவல் நிலைய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், துப்பாக்கி காணாமல் போனதாக போலீசாரிடம் சொல்கிறார் அஜயசந்திரன். அதனைத் தொடர்ந்து அப்பு பிள்ளையிடம் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
அதே நேரத்தில், காட்டின் ஒரு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்த தடம் கண்டறியப்படுகிறது. சில நாட்கள் கழித்து குரங்குகளின் கையில் துப்பாக்கி இருப்பதாகப் புகைப்படம் ஒன்று போலீசார் கையில் கிடைக்கிறது.
இதற்கிடையே, அப்பு பிள்ளையின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பதாக உணர்கிறார் அபர்ணா. தினசரிச் செயல்பாடுகள் அனைத்தையும் அவர் திட்டமிட்டுச் செய்வதாக அறிகிறார். அதன் பின்னணியில், அவருக்குப் பெரும் மறதி நோய் இருப்பதையும் தெரிந்துகொள்கிறார்.
அனைத்தையும் மீறி அப்பு பிள்ளையின் கனகச்சிதமான திட்டமிடல் ஏதோ ஒரு உண்மையை அவர் முற்றிலுமாக மறைப்பதாக எண்ண வைக்கிறது.
இந்த நிலையில், அவர் வீட்டின் அருகேயுள்ள நிலத்தில் ஒரு குரங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. உடற்கூறு நிபுணர்கள், அதன் எலும்புக்கூட்டில் துப்பாக்கி குண்டு துளைத்த தடம் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
அந்த நிலப்பகுதியை அப்பு பிள்ளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேறொருவருக்கு விற்றிருக்கிறார். ஆனால், அந்த எலும்புக்கூடோ மூன்றாண்டுகள் பழமையானது. அந்தப் பிரச்சனை வேறு, அவர் தலைக்கு மேலே கத்தியாய் தொங்குகிறது.
இந்த நிலையில், சாச்சி காணாமல் போனதற்கும் அந்த குரங்கின் எலும்புக்கூட்டுக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகப்படுகிறார் அபர்ணா. அதனைத் தனது கணவர் அஜயசந்திரனிடமும் தெரிவிக்கிறார்.
அதனைக் கேட்டு, அஜயசந்திரன் எவ்வாறு ‘ரியாக்ட்’ செய்தார்? அப்பு பிள்ளை மறைக்கும் உண்மை என்ன? சிறுவன் சாச்சி என்னவானார்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கிஷ்கிந்தா காண்ட’த்தின் மீதி.
உண்மையைச் சொன்னால், இப்படம் பார்த்து முடித்ததும் ‘கடுகளவு தானே கதை’ என்று தோன்றும். ஆனால், இதில் வரும் கதாபாத்திரங்களின் இயல்புகள், கதையில் வரும் நுண்ணிய விவரிப்புகள் துணையோடு திரைக்கதையைச் சிலந்தி வலையாகப் பின்னியிருக்கிறது பாபுல் ரமேஷ் – டிஞ்சித் அய்யதன் கூட்டணி. அந்த நுட்பமும் லாவகமும்தான் இப்படத்தைக் காணும்போது நம்முள் ‘ஆச்சர்யம்’ பிரவகிக்கக் காரணமாகிறது.
மெல்லப் பற்றும் தீ!
பிருத்விராஜ் அளவுக்கு கமர்ஷியல் படங்களில் ‘ஹிட்’ அடிக்காவிட்டாலும், வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் இடம்பிடித்து அவருக்குக் கடும் போட்டியைத் தந்து வருபவர் ஆசிஃப் அலி. இதிலும் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அபர்ணா பாலமுரளி, வழக்கம்போல ஒரு பெண் பாத்திரமாகத் திரையில் நடமாடியிருப்பது அழகு.
விஜயராகவன், கடந்த சில ஆண்டுகளாகச் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். இந்தப் படத்தில், அவருக்குப் பெரும் விருந்தை உண்ணும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. மனிதர் ‘அசால்டாக’ உண்டுவிட்டு, திருப்திகரமாகத் திரையில் ஏப்பம் வேறு விட்டிருக்கிறார். நிச்சயமாக, அவருக்குச் சில விருதுகள் காத்திருக்கின்றன.
இவர்கள் மூவர் தவிர்த்து ஜெகதீஷ், அசோகன், நிஷான், கோட்டயம் ரமேஷ் போன்றவர்களோடு நம்மூர் நிழல்கள் ரவியும் முக்கியமானதொரு பாத்திரத்தில் இதில் தோன்றியிருக்கிறார்.
பாபுல் ரமேஷ் இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். டென்னிஸ், பாட்மிண்டன் அல்லது ஸ்குவாஷில் இரு தரப்பும் மெதுவாக மட்டையை வீசி, மெல்ல வேகமெடுத்து, ஒருகட்டத்தில் மாறி மாறிக் கழுத்தைத் திருப்பும் அளவுக்கு விளையாடித் தீர்த்து பார்வையாளர்களை களைப்புற வைப்பார்களே, அது போன்று இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் வேகத்தைப் படர விட்டிருக்கிறார்.
மிஸ்டரி, த்ரில்லர், சைக்காலஜிகல் டிராமா என்று பல வகைமைகளுக்கு நடுவே புகுந்து, இறுதியாகப் பொங்கிப் பிரவகிக்கிறது இத்திரைக்கதை. இதில் லாஜிக் சார்ந்து கேள்விகள் எழுப்ப வாய்ப்பு இருந்தாலும், நம் மனம் அதனை விரும்புவதில்லை. அந்தளவுக்கு இதில் கதை சொல்லல் அமைந்திருக்கிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளரும் பாபுல் ரமேஷ் தான். ஓங்கி உயர்ந்த மலைகள், அதில் நிறைந்திருக்கும் வனம், அதற்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் வீடுகள், ஊர் என்று படம் முழுக்க நம்மைக் கடவுள் தேசத்தின் சொர்க்க வாசலில் பயணிக்க வைத்திருக்கிறது அவரது ஒளிப்பதிவு.
இயற்கைப் பின்னணியில் பல காட்சிகள் அமைந்தபோதும், மிகச்சில காட்சிகளில் கலை வடிவமைப்புக் குழுவுக்குப் பெரும் வேலைகள் உண்டு. அதனை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் கலை இயக்குனர் சஜீஷ் தாமரசேரி.
அடிக்கடி பிளாஷ்பேக் பயன்படுத்தப்பட்டபோதும், ஒவ்வொரு முறையும் புதிர்களுக்கான ஒரு பகுதி பதிலை அது விடுவிக்கிற வகையில் அமைந்தபோதும், கதையைப் புரிந்துகொள்வதில் எந்தக் குழப்பமும் நேரிடாதவாறு பார்த்துக் கொள்கிறது சூரஜ் இ.எஸ்ஸின் படத்தொகுப்பு.
தனியாகக் கேட்கையில் ’ரொம்பவே நுட்பமானது’ என்று உணர வைக்கக்கூடியது முஜீப் மஜீத்தின் பின்னணி இசை. பின்பாதியில் அவர் தந்திருக்கும் இசை, அக்காட்சிகளின் வீரியத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தியிருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குனர் டிஞ்சித் அய்யதன், பாபுல் ரமேஷின் எழுத்தாக்கத்திற்குத் திரையில் முழுமையான உருவம் தர முனைந்திருக்கிறார். அனைத்து காட்சிகளிலும் சீர்மை நிறைய, நூல் பிடித்தாற்போல ஒரு தொடர்பை மனம் உணர, தனது உழைப்பைக் கொட்டியிருக்கிறார். நிச்சயமாக, அது அசாதாரணமானது.
முன்பாதிக் காட்சிகளில் மெல்லப் பற்றும் தீ, பின்பாதியில் உக்கிரமாவதை நாம் உணர முடியும். அதன்பிறகு, அந்த ‘ஸ்லோ’ காட்சிகளே நம் மனதுக்குள் ‘படுவேகமாக’ ஓடி நிற்கும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
என்ன கதை சொன்னாலும், அதன் முடிவில் நீதி சொல்வது நம்மூர் வழக்கம். ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தில் அப்படி நேரடியாக எதையும் நம்மால் பெற முடிவதில்லை. ஆனால் தேர்தல் அரசியல் செயல்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முதியோர் நலன் உட்படச் சில விஷயங்களை இதில் நாம் உணர முடியும்.
அனைத்தையும் மீறி, ‘உண்மை என்பது என்ன என்ற கேள்விக்குப் பதில் தெரிந்தே பதில் தேடிக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர்’ என்கிறது இப்படம். தத்துவார்த்தமான அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்க வைப்பதே ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தின் சிறப்பு.
அதனை நீங்களும் உணர, கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். அதற்குத் தயார் என்றால், நல்லதொரு திரையனுபவத்தைத் தரும் இந்த ‘கிஷ்கிந்தா காண்டம்’!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜிஎஸ்டி பன் வேணுமா? ஜிஎஸ்டி இல்லாத பன் வேணுமா?: அப்டேட் குமாரு
மத்திய அரசையே அசைத்து பார்க்கும் அன்னபூர்ணா வளர்ந்த கதை!
அன்று ஏ.கே.வி. – இன்று நிர்மலா சீதாராமன்…-அன்னபூர்ணாவின் ஃபிளாஷ்பேக்!