நாய்கள் ஜாக்கிரதை,மிருதன்,டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஆகியோர் நடித்த திரைப்படம் டெடி.
இந்த படத்தில் கருணாகரன், சாக்ஷி, சதீஷ், இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான ’டெடி’ திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனிடையே இந்த படத்தில் இடம்பெற்ற ’நண்பியே’ பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது யூடியூப் பக்கத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மதன் கார்க்கி வரியில் உருவான இந்த பாடலை அனிருத் பாடியிருந்தார்.
இந்நிலையில், ’நண்பியே’ பாடல் பத்து கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதை நடிகர் ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக தர்மதுரை திரைப்படத்தில் வெளியான ’’ஆண்டிப்பட்டி கணவா காத்து’’ பாடல் கடந்த மாதம் 10 கோடி பார்வையாளர்களை யூடியூப் பக்கத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்