உதயசங்கரன் பாடகலிங்கம்
’கும்பிடு’ போடும்படியாக இருக்கிறதா?
’நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இயக்குனர் பாலாவின் படம். இதுவே ‘வணங்கான்’ படத்தின் மீதான கவனக்குவியலுக்கான முதல் காரணம். சூர்யாவைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் பின்னர் அருண்விஜய் நாயகனாக நடித்ததெல்லாம் அப்புறம் தான் நம் நினைவுக்கு வரும். படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக்பீக் எல்லாம் பார்த்தாலும், ‘இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் பாலா’ என்ற எதிர்பார்ப்பே இதன் யுஎஸ்பி.
சரி, ‘வணங்கான்’ படத்தில் நமக்கு எப்படிப்பட்ட திரையனுபவத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் பாலா?
பாலா படங்களின் கதை!?
‘எனது படங்களில் கதையை விடக் கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் அதிகம்’ என்பது இயக்குனர் பாலாவே அடிக்கடி சொல்வது. சேதுவில் விக்ரம், நந்தாவில் சூர்யா, பிதாமகனில் விக்ரம் மற்றும் சூர்யா, நான் கடவுளில் ஆர்யா என்று நாயக பாத்திரங்கள் நம் மனதில் நிற்பதுபோலவே, அப்படங்களில் வரும் மிகச்சிறிய பாத்திரங்களும் கூட நம் ரசனைக்கு நெருக்கமானதாக இருக்கும். ஆனால், நம் வாழ்வில் இருந்து அவை வெகுதொலைவில் இருக்கும். அதுவே பாலா படங்களின் சிறப்பு.
‘வணங்கான்’னைப் பொறுத்தவரை, பாலாவின் இதர படங்களின் சாயலிலேயே இதன் கதையும் இருக்கிறது.

ஒரு இளைஞன். வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. அவருக்குக் கோபம் இமயமலை அளவுக்கு வரும். அவருக்கு ஒரு தங்கை. சில நேரங்களில் அப்பெண்ணின் வாழ்வு தன்னை நம்பித்தான் இருக்கிறது என்று யோசிக்க முடியாத அளவுக்குக் கோபத்தில் எதையாவது செய்துவிடுவது அந்த நபரின் குணம். அப்படிப் பலரிடம் வம்பு வளர்க்கிறார்.
அப்படிப்பட்ட நபர் ஒரு மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் பணியில் சேர்கிறார். அங்கு ஒரு அசம்பாவிதம் நேர்கிறது. அதன்பின் அவர் என்ன செய்தார் என்பதே ‘வணங்கான்’ படத்தின் இரண்டாம் பாதியாக விரிகிறது.
இந்த படத்தில் நாயகனின் பெயர் கோட்டி. அவரது தங்கை பாத்திரத்தின் பெயர் தேவி. நாயகனைக் காதலிக்கும் பெண்ணாக வருபவரின் பெயர் டீனா.
இன்னும் தேவாலயம் சம்பந்தப்பட்டவர்கள், பஜாரில் கடை வைத்திருக்கும் இஸ்லாமியர், காவல்நிலையம், நீதிமன்றத்தில் பணியாற்றுபவர்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் இருப்பவர்கள் என்று சுமார் ஐம்பது, அறுபது பேராவது திரையில் தோன்றியிருப்பார்கள்.
இப்பாத்திரங்களில் சுமார் நான்கைந்து பாத்திரங்களே நம் மனதில் பதிகின்றன. அவற்றின் பின்னணியை விவரிக்கவே திரைக்கதையில் காட்சிகள் இருக்கின்றன.
இந்தக் குறையைப் பாலாவின் முந்தைய படங்களில் நாம் காண முடியாது. ‘வணங்கான்’ படத்தின் பலவீனங்களில் முதலில் கண்ணில் படுவது இதுவே.

செறிவு குறைவு!
கோட்டியாக வரும் அருண் விஜய்யின் நடிப்பு எப்படியிருக்கிறது என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. பாலாவின் நாயகர்கள் எப்படியிருப்பார்களோ, அதன் சாயல் தெரியாதவாறு தன்னை வெளிப்படுத்த ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
டீனாவாக வரும் ரோஷினி பிரகாஷின் காட்சிகள், வழக்கமான கமர்ஷியல் படங்களைப் பிரதிபலிக்கின்றன. நாயகனை ஏன் இந்த நாயகி இவ்வளவு தீவிரமாகக் காதலிக்கிறார் என்பதற்கான விளக்கம் திரைக்கதையில் எங்கும் இல்லாத காரணத்தால், ‘இந்தப் பொண்ணுக்கு ஏன் இந்த வேலை’ என்றே நமக்குத் தோன்றுகிறது.
‘வணங்கான்’னின் பெரிய ப்ளஸ், நாயகனின் தங்கையாக வரும் ரிதா. பதின்ம வயதுப் பெண்ணாகத் திரையில் தெரியாவிட்டாலும், அவரது நடிப்பு அதனை ஏற்கச் செய்கிறது. அருண் விஜய்யோடு அவர் பேசுகிற காட்சிகள் ஆகச் சிறப்பு.
காவல் துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, நீதிபதியாக வரும் மிஷ்கின் இருவருமே தங்களது பிரபல்யத்தால் தாங்கள் வரும் காட்சிகளை பிரகாசப்படுத்தியிருக்கின்றனர்.

சண்முகராஜன், அவரது மனைவியாக வருபவர், பிருந்தா சாரதி, பாதிரியாராக வரும் பாலசிவாஜி, பாண்டி ரவி வருமிடங்கள் ‘சீரியசாக’ இருந்தாலும், அக்காட்சிகளில் சில சிரிப்பூட்டுவதாக இருக்கின்றன.
முதல் பாதியில் ‘சினிமாத்தனத்தை’ நிறைத்திருக்கிறது ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு. இரண்டாம் பாதியில் அந்த எண்ணமே மறைகிற அளவுக்கு உழைப்பைக் கொட்டியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, முன்பாதியில் பல விஷயங்களைச் சுருக்கமாகக் காட்ட முயன்றிருக்கிறார். அதேநேரத்தில், அது திருப்தி தரும் விதமாகவும் இல்லை. பின்பாதியில் முழுக்கக் கதை சொல்லலில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
இன்னும் ஆர்.பி.நாகுவின் கலை வடிவமைப்பு, ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் ‘வணங்கான்’னில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ஆனால், அவையனைத்தும் பாலாவின் முந்தைய படங்கள் போன்று மிகச்சிறப்பானதாக இல்லை.
அதனால், ‘வணங்கான்’ உள்ளடக்கம் செறிவு குறைவாக அமைந்துள்ளதோ என்ற எண்ணம் நம்முள் படர்கிறது. ‘நாச்சியார்’ படத்திலேயே பாலாவின் அவசரகதியிலான மேக்கிங் குறையாகத் தெரியும். இதிலும் அது நேர்ந்திருக்கிறது.
ஒரு காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறபோது, ‘இதைவிடச் சிறப்பாக இக்காட்சியை ஆக்க முடியாது’ என்ற நம்பிக்கையைத் தோன்றச் செய்தவர், ‘வணங்கான்’னில் ‘இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாமோ’ என்று எண்ண வைத்திருக்கிறார்.

திரைக்கதையைச் செப்பனிட்டிருக்கலாம்!
நாயகன், அவரது தங்கை, நாயகி பாத்திரங்கள் என்று ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்த, குணாதிசயங்களை விளக்க என்று பல காட்சிகளைக் கொண்டிருக்கிறது முன்பாதி. அந்தக் காட்சிகள் ரொம்பச் சாதாரணமாக இருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், கதை நிகழும் களம், கதாபாத்திரங்களின் பின்னணி, மையக்கதையின் வீரியத்தோடு சம்பந்தமே இல்லாமல் அவை அமைந்திருப்பது இப்படத்தின் பலவீனம்.
சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் இது போன்ற குறைகளை நாம் பார்க்க முடியாது. ‘நான் கடவுள்’ போன்ற படங்களில் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளை சுவாரஸ்யமானதாக வடிவமைத்து அக்குறையைத் தெரியாமல் செய்திருந்தார் பாலா.
‘வணங்கான்’னில் திரைக்கதையைச் செப்பனிட்டு அக்குறைகளைக் களைய பாலா முயற்சிக்கவில்லை.

‘நந்தா’, ‘பரதேசி’ படங்களைப் போலவே இதிலும் குறிப்பிட்ட சில குழுக்களை வம்பிழுத்திருக்கிறார் பாலா. அது மக்களைச் சிரிக்க வைக்கும் என்றும் நம்பியிருக்கிறார். அந்தக் காட்சிகள் சர்ச்சைகளை உருவாக்கலாம்.
போலவே, இதில் வரும் சில அரைநிர்வாணக் காட்சிகளும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவற்றைக் காட்சிப்படுத்துவதில் தனது மேதைமையை பாலா வெளிப்படுத்தியிருக்கலாம்.
ஏற்கனவே வந்த பாலாவின் படங்களிலும் சில ரசிகர்கள் குறை சொல்லச் சில விஷயங்கள் உண்டு. ஆனால், அவை அனைத்தும் அந்தந்த ரசிகர்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ‘வணங்கான்’னில் அது பாலாவின் கதை சொல்லல், காட்சியாக்கம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதுவே இப்படத்தின் பலவீனம்.
அடுத்த படத்திலாவது, தன் மீது படிந்திருக்கும் புகழ் வெளிச்சத்தை உதறிவிட்டு ‘சேது’ தந்த மனநிலையோடு இயக்குனர் பாலா களமிறங்க வேண்டும். அதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது ‘வணங்கான்’.
அந்த வகையில், இந்த படத்திற்கு ஒரு ‘கும்பிடு’ போடலாம். ரசிகர்களின் தனிப்பட்ட ரசனையைப் பொறுத்து அந்த ‘கும்பிடு’களின் தன்மை வேறுபடும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவம் வரல… சிரிப்புதான் வந்தது… : பேரவையில் அதிமுகவினரை கிண்டலடித்த ஸ்டாலின்
‘சம்சாரம் அது மின்சாரம்’ புகழ் கோதாவரி மரணம்!
கலைஞரின் ’பராசக்தி’ வசனம்… ஆளுநருக்கு எதிராக திருப்பிய ஸ்டாலின்
வேலைவாய்ப்பு : TNPGCL-நிறுவனத்தில் பணி!
டாப் 10 நியூஸ் : திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு முதல் ஆஸ்திரேலிய ஓபன் துவக்கம் வரை!