ஒரு ரசிகனின் பார்வையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் எப்போதுமே பிரமிப்புக்கு உரியவர்கள். அந்த பார்வையைத் தக்க வைப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனம் வார்த்தைகளில் அடங்காது.
புதிய முயற்சிகள், அவற்றுக்கு கிடைக்கும் வரவேற்பு, தற்கால பாணி, வெற்றி பெறுவதற்கான சூழல் என்று பலவற்றை உற்றுநோக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு.
அவற்றுக்கு நடுவே, ஏற்கனவே பெற்ற வெற்றிகளைப் பிரதியெடுக்க வேண்டிய அழுத்தமும் சூழும். அவற்றையெல்லாம் மீறித்தான், வித்தியாசமான படைப்புகளில் பொருத்திக் கொண்டாக வேண்டும். அது ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக மாறும்போது கொண்டாட்டத்திற்குரியவராக மாறுவதும் நிகழும். அப்படியொரு கலைஞராகக் கொண்டாடப்படுபவர் நடிகர் அருள்நிதி.
பிரமாண்டமான அறிமுகம்!
தமிழ் திரையுலகைச் சேர்ந்த அல்லது பிரபலமானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் திரையில் அறிமுகமாகும்போது குறிப்பிட்ட கதைகளையே தேர்ந்தெடுப்பார்கள். திகட்டத் திகட்ட காதலைச் சொல்லும் படமாகவோ அல்லது முழுமையான ஆக்ஷன் படமாகவோ அல்லது நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கலந்து கட்டியதாகவோ அவை இருந்திருக்கின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வேண்டுமென்ற ஆசையே அதன் பின்னணி.

கலைஞர் குடும்பத்து வாரிசு என்ற அடையாளத்தோடு அறிமுகமான அருள்நிதியின் முதல் படமான ‘வம்சம்’, அந்த வழக்கத்தை மீறிய காட்சியனுபவத்தைத் தந்தது. தாய் தந்தை பாசம், காதல், நகைச்சுவை போன்றவை திரைக்கதையின் ஒரு பகுதியாக இருந்தாலும், வறட்டு கவுரவத்தின் காரணமாக உருவாகும் மோதலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள கலாசாரம், வாழ்க்கைமுறை மற்றும் மனிதர்களின் எண்ண முரண்கள் ‘வம்சம்’ படத்தில் நிறைந்திருந்தது.
தனிப்பட்ட முறையில் குழந்தைகளை, பெண்களை, இளைய தலைமுறையைக் குறிவைத்து அப்படத்தில் காட்சிகள் அமைக்கப்படவில்லை. இயக்குனர் பாண்டிராஜ் முதல் அப்படத்தைத் தயாரித்த அருள்நிதியின் தந்தை தமிழரசு வரை, இந்த உண்மையை உணர்ந்தே களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதேநேரத்தில், இந்த படத்தைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் இவர்கள் தான் என்று அவர்கள் கணித்ததும் பொய்யாகவில்லை.
வெற்றிப் படைப்பிற்கான கணக்குகளை ஒதுக்கிவிட்டு ‘வம்சம்’ படத்தைப் பார்த்தால், திரையுலகில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு நட்சத்திரம் இடம்பெற வேண்டிய படைப்பு அது என்பது புரிய வரும். அப்படிப் பார்த்தால், அருள்நிதியின் அறிமுகமே பிரமாண்டமானதுதான். ஆனால், அப்படம் தந்த வித்தியாசமான காட்சியனுபவத்தின் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்த படங்கள் அமைந்தன. ‘அருள்நிதி படம்னா வித்தியாசமா இருக்கும்’ என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் உண்டானது.

வித்தியாசமான படங்கள்!
அருள்நிதி நடித்த படங்களை வரிசையாகப் பார்த்தால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையில் இருப்பது தெரியும். இரண்டாவது நடித்த ’உதயன்’ படத்தில் அவருக்கு இரட்டை வேடம். ஆனால், அதன் கதை ரசிகர்களுக்குப் புத்துணர்வைத் தரவில்லை. அந்த வரவேற்பைப் பார்த்ததும், அருள்நிதியின் திரைப்பயணம் வேறொரு திசையில் அமைந்தது.

‘மௌனகுரு’ திரைப்படத்தில் அருள்நிதி ஏற்ற பாத்திரம் அதீதமான ஹீரோயிசத்தை கொண்டது. ஆனால், படம் பார்க்கும்போது சில மனிதர்களின் வாழ்வை நேரில் பார்ப்பது போன்றிருக்கும். அடிக்கோடிடாத தடித்த, எவ்விதச் சிறப்புச் சேர்க்கையும் இல்லாத எழுத்துகளில் ஒரு அற்புதமான நாவலை படித்த அனுபவத்தைத் தரும்.

2000க்கு பிறகு, மதுரையைக் களமாகக் கொண்ட பல படங்கள் தமிழில் வெளியாகின. ‘பருத்தி வீரன்’, ‘ஆடுகளம்’ போன்ற படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற, ‘திமிரு’ போன்றவை உடனடி வரவேற்பைத் தரும் கமர்ஷியல் படங்களாக அமைந்தன. அது தொடர்கதையாக மாறவே, மதுரை என்றாலே குதிரை வேகத்தில் தெறித்து ஓடும் நிலைக்கு ஆளாயினர் ரசிகர்கள்.அந்த காலகட்டத்தில், அதே பின்னணியில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஆக அமைந்தது ‘தகராறு’.

சிம்புதேவன் இயக்கிய ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, ‘ரன் லோலா ரன்’ படத்தை வேறொரு வடிவில் பார்த்த அனுபவத்தை உண்டாக்கியது. பேய்ப்படம் என்றாலே காமெடியாக இருக்கும் என்ற எண்ணத்தை ‘காஞ்சனா’ உண்டாக்கிய நிலையில், திரையைப் பார்த்து மூச்சுத் திணற வைக்கும் அனுபவத்தைத் தந்தது ‘டிமாண்டி காலனி’. ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ முழுக்க நகைச்சுவையில் திளைக்க வைக்கும் முயற்சியாக அமைந்தது.

மலையாளத்தில் வெற்றிகரமான நாயகராக வலம் வரும் பிருத்விராஜின் ‘மெமரீஸ்’ படம் தமிழில் ‘ஆறாது சினம்’ ஆக மாறியது. மொழி, அபியும் நானும் போன்ற ‘பீல்குட்’ படங்கள் வரிசையில் ராதாமோகனின் ‘பிருந்தாவனம்’ அமைந்தது. மாறனின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ இருக்கை நுனியில் ரசிகர்ளை இருக்க வைக்கும் ‘த்ரில்’ அனுபவமாக இருந்தது. அதன் பிறகு அருள்நிதி நடிப்பில் வெளியான கே-13 முதல் டைரி வரை அனைத்தும் த்ரில்லர் வகைமையில் அடங்குபவை தான்.

மிக முக்கியமாக ‘சின்னத்தம்பி பெரியதம்பி’, ‘குரு சிஷ்யன்’, ‘வெற்றி விழா’, ‘இணைந்த கைகள்’ பாணியில் இரண்டு நாயகர்கள் நடித்த படமாக ஜீவா உடன் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ இருந்தது.
இது போன்ற ‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்’டை பார்த்து வெகுநாளாயிற்று என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது. அருள்நிதியின் திரை வாழ்வில் முழுமையான கமர்ஷியல் படமும் அதுவே. பார்க்கச் சாதாரண மசாலா படமாகத் தெரிந்தாலும், திரைக்கதையை உற்றுக் கவனித்தால் சாதி மறுப்பு, கைம்பெண் மறுவாழ்வு உள்ளிட்ட பல விஷயங்கள் கலந்திருப்பது தெரிய வரும்.
த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட்!
ஒரு த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ தொடங்கி ‘டைரி’ வரை விதவிதமான அனுபவத்தைத் தந்துள்ளன அருள்நிதியின் படங்கள். உண்மையைச் சொன்னால், ‘மௌனகுரு’விலேயே அது தொடங்கிவிட்டது. தற்போது வெளிவரவிருக்கும் ‘திருவின் குரல்’, ‘டிமாண்டி காலனி 2’வும் அந்த எதிர்பார்ப்பினை இன்னும் பெரிதாக்கியிருக்கின்றன.

கடந்த ஆண்டில் வெளியான அருள்நிதியின் படங்களான ‘டி பிளாக்’, ‘தேஜாவூ’, ‘டைரி’ மூன்றுமே த்ரில்லர் வகைமையில் அடங்குபவை; ஆனால், மூன்று படங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம் என்று தெரிய வரும். டி பிளாக் திரைக்கதை ‘ஹாரர்’ போன்று நகரும்; தேஜாவூ கதை ஒரு புதிரை விடுவிக்கும் நோக்கில் அமைந்திருக்கும்; டைரி கதை அமானுஷ்யமானது என்பதை படத்தின் முடிவில்தான் உணர முடியும்.

இப்படங்களில் அருள்நிதி ஏற்ற பாத்திரங்களும் கூட ஒன்றுக்கொன்று வேறுபட்டவை; டி பிளாக்கில் கல்லூரி மாணவராகத் தன் இளமையை மெருகூட்ட முயன்றார் என்றால், மற்ற இரண்டிலும் முப்பதைத் தொட்ட மனிதராகத் தோன்றியிருப்பார்.

முதல் படமான வம்சம் முதல் டைரி வரை அனைத்து படங்களிலும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் பாத்திரங்களிலேயே நடித்துள்ளார் அருள்நிதி. அதுவும், நட்சத்திர அந்தஸ்து கொண்ட நாயகர்களின் படங்களில் எப்படி சண்டைக்காட்சிகள் இருக்குமோ அதேவிதத்தில் திரையில் அக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அருள்நிதி ஏற்ற பாத்திரம் ஆக்ரோஷமானது என்பதை உணர்த்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருந்தாலும், நாயக பாத்திரத்திற்கான ‘பில்ட் அப்’ காட்சிகள் துளி கூட இருக்காது. அதனாலேயே எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்புக்குரியதாக இருக்கின்றன அருள்நிதியின் படங்கள்.

இந்த வரிசையில் ‘திருவின் குரல்’ படமும் சேரும் என நம்பலாம். ஏனென்றால், அந்த படத்தின் ட்ரெய்லரே ஆக்ஷன் காட்சிகள் அதிகமிருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதேநேரத்தில், குடும்பத்தோடு ரசிக்கத்தக்க ஜனரஞ்சகமான படம் இல்லை என்ற எண்ணத்தையும் வலுப்படுத்துகிறது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையை இந்த வகையறா எளிதில் ஈர்க்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
என்னதான் வித்தியாசமான பார்வையை முன்வைக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்தாலும், அவை தோல்வியுறும் வாய்ப்புகளும் அதிகம்; திரைக்கதையில் இருக்கும் நேர்த்தி குறைவே அதற்கான காரணம் என்பது தெரியவரும்; மேற்சொன்ன வரிசையில் தோல்வியுற்ற படங்களைத் தனியே பிரித்தால், அதனை உணர முடியும். அந்த அபாயத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோடு தொடர்ந்து வெவ்வேறுபட்ட கதைகளைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் அருள்நிதியின் முனைப்பு தொடர வேண்டும். விதவிதமான படங்களை ரசிக்க விரும்புபவருக்கு அது மகிழ்ச்சி தரும் சேதிதான்.
உதய் பாடகலிங்கம்
Comments are closed.