உதயசங்கரன் பாடகலிங்கம்
மிரட்சியடைய வைக்கிறதா இந்த ‘ஹாரர்’ படம்?!
ஒரு வாக்கியத்தில் முற்றுப்புள்ளி என்பது அது முடிந்துவிட்டதைக் குறிக்கப் பயன்படுத்துவது. அந்தப் புள்ளியோடு கூடுதலாக இரண்டு புள்ளிகளைச் சேர்த்தால் ‘தொடரும்’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அவ்வாறு இரண்டு புள்ளிகளைச் சேர்ப்பதும், அடுத்த வாக்கியத்திற்கான தொடக்கத்தைத் தரும் வகையில் அவ்வாக்கியம் முடிவதும் சாதாரண காரியமல்ல. ’டிமான்டி காலனி’ என்ற படத்தின் கதையையும் மேலே சொல்லப்பட்டதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
அந்தப் படத்தின் கதை ஒரு ‘ஹாரர்’ படத்திற்கே உரித்தான வகையில் முடிந்திருந்தது. ஆனால், அதில் கூடுதலாகச் சில விஷயங்களை இணைத்ததன் மூலமாக இரண்டாம் பாகத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
அந்தச் சில விஷயங்களே ‘டிமான்டி காலனி 2’ படத்தின் சிறப்பாக விளங்குகின்றன.
சரி, முதல் பாகம் போன்றே இதுவும் ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்களை தருகிறதா?
இன்னொரு ‘பேய்’ இருக்கு..!
டிமான்டி காலனி 2 படத்தின் கதை இதுதான்.
முதல் பாகத்தில் சீனிவாசனும் (அருள்நிதி) அவரது நண்பர்களும் டிமான்டி காலனியிலுள்ள ஒரு வீட்டுக்குச் செல்வதும், அந்த நிகழ்வு முதல் ஒரு ஆங்கிலேயரின் ஆவி அவர்களைத் துரத்தி துரத்திக் கொடூரமாகக் கொல்வதும் காட்டப்பட்டிருந்தது.
அறையை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் சீனிவாசன் இறுதியாக ஜன்னலை உடைத்து வெளியே குதிப்பதாகவும், இரும்புக் கம்பியில் சிக்கி அவரது ஆவி தனியே நிற்பதாகவும் அப்படம் முடிவடைந்திருக்கும்.
அந்தக் கதையுடன் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்த சில நிகழ்வுகளைக் காட்டி ஒரு கதையாகத் திரட்டியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
சீனிவாசன் வறுமையில் வாழ்ந்தாலும், அவரது குடும்பத்தினர் ஹைதராபாதில் வசதியான நிலையில் இருக்கின்றனர். அவரைப் போலவே தோற்றம் கொண்ட இரட்டைச் சகோதரரான ரகுநந்தன் (அருள்நிதி) ஹைதராபாதில் ஒரு கட்டடக்கலை நிபுணராக இருக்கிறார்.
சிறு வயதிலேயே தந்தையை விட்டுப் பிரிந்து, அவர்களது தாய் சென்னைக்குச் சீனிவாசனுடன் வந்துவிடுகிறார்.
சீனிவாசன் தந்தைக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு (பிரியதர்ஷினி ராஜ்குமார்) ஒரு மகள் இருக்கிறார். அவரது பெயர் ஐஸ்வர்யா (அர்ச்சனா ரவிச்சந்திரன்).
தந்தையின் இறப்புக்குப் பிறகு, சரியாக அறுபதாம் நாளன்று அவர் எழுதிய உயில் வாசிக்கப்படுகிறது.
அவரது சொத்துகளில் 20 சதவீதம் ரகுநந்தனுக்கும், ஐந்து சதவீதம் ஐஸ்வர்யாவுக்கும், மீதமுள்ள 75 சதவீத சொத்துகள் சீனிவாசனுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உயிலை வாசிக்கும் ரகுநந்தனின் சித்தப்பாவே (முத்துகுமார்) இதனை எதிர்பார்க்கவில்லை.
உயிலில் இருப்பதைக் கேட்டதும் ஐஸ்வர்யா வெகுண்டெழுகிறார். நீதிமன்றத்திற்குச் சென்று நீதி பெற்றுக்கொள்வேன் என்று பொருமுகிறார்.
அன்றிரவு, ’சீனிவாசனுக்கு சொத்துகளைக் கொடுக்க முடியாது’ என்று குடி போதையில் சலம்புகிறார் ரகுநந்தன். போதை அதிகமாகி மாடியில் இருந்து கீழே விழுகிறார்.
சரியாக அதேநேரத்தில் தான் சீனிவாசனும் டிமான்டி காலனி பேயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக் கொள்கிறார்.
ஒரு கருவில் உருவான இரட்டைச் சகோதரர்கள் என்பதால், ரகுநந்தன் உயிர் பிழைப்பதையடுத்து சீனிவாசனின் இதயமும் துடிக்கத் தொடங்குகிறது. ஆனாலும், அவர் கோமா நிலையில் சிக்கிக் கொள்கிறார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு அவருக்கு மருத்துவச் சிகிச்சை தரப்படுகிறது.
ஆறு ஆண்டுகள் கழித்து, ரகுநந்தன் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது. அதில் சீனிவாசனுக்குக் கொடுக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றுவது குறித்து அவரது குடும்பத்தினரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
அதையடுத்து, சென்னையில் சீனிவாசனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைக்கு ரகுநந்தனும் சித்தப்பாவும் வருகின்றனர். அப்போது, அவர்களைச் சந்திக்கிறார் டெபி (பிரியா பவானிசங்கர்). ’சீனிவாசன் இறந்தால் நீயும் இறந்துவிடுவாய்’ என்று ரகுநந்தனை எச்சரிக்கிறார்.
டிமான்டி காலனிக்குச் சென்றதால் தனது கணவர் உயிரிழந்ததாகவும், அதே போலொரு சிக்கலில் சீனிவாசனின் உயிர் மாட்டிக் கொண்டிருப்பதாகவும், அந்தப் பேயின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் டெபி கூறுகிறார். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த பேய் சிலரது உயிரைப் பறிப்பதாகவும், இன்றைய தினம் சீனிவாசனின் உயிரைக் காப்பாற்றச் செய்யும் சில சடங்குகளுக்குத் துணை நின்றால் அவரது உயிரையும் காப்பாற்ற முடியும் என்றும் ரகுநந்தனிடம் சொல்கிறார்.
சீனிவாசனும் அவரது நண்பர்களும் மாட்டிக்கொண்ட தினத்தில் இருந்து சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து ரகுநந்தனிடம் இந்த உதவியைக் கேட்கிறார் டெபி. அன்றைய தினம் அந்த டிமான்டி காலனிக்குள் எவரும் நுழைந்துவிட முடியாதபடி பார்த்துக்கொண்டால் அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்.
வேறு வழியே இல்லாமல், டெபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணை நிற்க முடிவு செய்கிறார் ரகுநந்தன். அதன் ஒரு பகுதியாக, டிமான்டி காலனிக்கு அவர்கள் செல்கின்றனர். அப்பகுதியில் யாரும் நுழையாதபடி போலீஸ் காவல் போடப்படுகிறது. அதையும் மீறி, திடீரென்று அதனுள் இருந்து சில பெண்களின் அலறல் குரல் கேட்கிறது.
சீனிவாசன் உயிரைக் காக்கப் புத்த மத முறைப்படி பூஜைகள் செய்யும் துறவி, ‘உள்ளே போக வேண்டாம்’ என்று ரகுநந்தனையும் போலீசாரையும் தடுக்கிறார். ஆனால், அவர்கள் டிமான்டி காலனிக்குள் அடியெடுத்து வைக்கின்றனர்.
காவலை மீறி அந்தப் பெண்கள் அந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தார்கள்? டிமான்டி காலனிக்குள் நுழைந்தவர்கள் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற நியதியை ரகுநந்தனும் அவருடன் சென்றவர்களும் உடைத்தார்களா? சீனிவாசன் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா என்பது உட்படப் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இப்படத்தின் மீதி.
டெபியின் கணவர் எப்படி இறந்தார் என்பதைக் காட்டுவதில் இருந்து ’டிமான்டி காலனி 2′ திரைக்கதை தொடங்குகிறது. அந்தக் காட்சியே நம்மைக் கவர்ந்திழுத்து, இயக்குனர் காட்டும் உலகத்திற்குள் தள்ளுகிறது.
முதல் பாகத்தோடு இந்த படத்தின் கதையை இணைத்த விதம் நிச்சயமாகத் தனித்துவமானது. அது மட்டுமல்லாமல், ‘இன்னொரு பேய் இருக்கு’ என்று சொல்லி இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யம் ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.
‘பேய்ப்படம்னா அலர்ஜி’ என்பவர்களைப் பயமுறுத்தும் அளவுக்கு இதன் உள்ளடக்கம் இருக்கிறது. ‘ஐயோ, ஆனா அது எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க’ என்பவர்களுக்கு ‘டிமான்டி காலனி 2′ ஒரு விருந்தைத் தருகிறது.
லாஜிக் வேணும்..!
‘என்னதான் கமர்ஷியல் படம்னாலும் ஒரு லாஜிக் வேண்டாமா’ என்று சில படங்களைப் பார்த்து ரசிகர்கள் புலம்புவார்கள். ஹாரர் படங்கள் கேட்டால் அவர்கள் சொல்லும் குறைகளின் பட்டியல் ரொம்பவே நீளும். அப்படி எதையும் சொல்லவிடாமல் தடுத்து, திரைக்கதையில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் விளக்கம் தந்திருக்கிறது ‘டிமான்டி காலனி 2’. அதற்காகவே, இயக்குனர் அஜய் ஞானமுத்துவைப் பாராட்டலாம்.
இதன் கதை, திரைக்கதை, வசனத்தில் அவருடன் இணைந்து வெங்கி வேணுகோபால், ராஜவேல் இருவரும் பங்களித்திருக்கின்றனர்.
ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு, முந்தைய பாகத்தில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு திரையில் பிரமாண்டத்தை உணர வைக்கிறது. அதற்கேற்ப இதில் விஎஃப்எக்ஸ், டிஐ பணிகள் அட்டகாசமான தரத்தில் உள்ளன.
மூன்று காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றைச் சொல்லி, சுமார் அரை மணி நேரம் கழித்து ‘மெயின் பிக்சரை’ காட்டினாலும், கதையைப் புரிந்துகொள்வதில் கொஞ்சம் கூடக் குழப்பம் எட்டிப் பார்க்காத வகையில் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் ஹரீஷ் கண்ணன். எபெக்ட்களை அள்ளியிறைத்து நம் கண்களைக் கஷ்டப்படுத்தாதது நல்ல விஷயம்.
ரவி பாண்டியனின் தயாரிப்பு வடிவமைப்பு முந்தைய பாகத்திற்குச் சம்பந்தமில்லாததைத் திரையில் காட்டினாலும், நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
இன்னும் கணேஷின் சண்டை வடிவமைப்பு, ஸிங்க் சினிமாவின் ஒலி வடிவமைப்பு உட்பட இப்படத்தில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களைத் தனித்தனியாகப் பாராட்டலாம்.
அவர்களனைவரையும் தாண்டி ‘டிமான்டி காலனி 2’வை நாம் பார்த்து மிரளக் காரணமாக இருப்பது சாம் சிஎஸ். இந்த முறை தேசிய விருதை எதிர்பார்க்கலாம் எனும் அளவுக்கு மனிதர் அதகளம் செய்திருக்கிறார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கொஞ்சம் ஏமாற்றினார்; ‘கோப்ரா’வில் நம்மைக் கதறவிட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்து ‘டிமான்டி காலனி 2’யில் மீண்டும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.
ஒரு பிரேம் கூட கண்களைத் திரையில் இருந்து விலக்க முடியாது எனும் அளவுக்குச் செறிவானதொரு உள்ளடக்கத்தைக் காட்டியிருக்கிறார்.
கதைத் தேர்வில் தனக்கு சாமர்த்தியம் அதிகம் என்பதை இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார் அருள்நிதி. ரகுநந்தன் பாத்திரத்தில் அவர் தோன்றியிருக்கும் விதம் முந்தைய பாகத்தில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருப்பது அருமை.
பிரியா பவானிசங்கர் இதில் டெபியாக வந்து கலக்கியிருக்கிறார். எந்நேரமும் சோகத்தில் உழலும் ஒரு பெண்ணைக் கண்ணில் காட்டியிருக்கிறார். ஜான் டிமாண்டியாக வரும் ஆண்டி ஜாஸ்கெலைனன் இதிலும் மிகச்சில பிரேம்களில் தோன்றி நம்மை மிரட்டியிருக்கிறார்.
புத்தமதத் துறவியாக ஷெரிங் டோர்ஜி, சித்தப்பாவாக முத்துகுமார் மற்றும் அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், செந்திகுமாரி, சர்ஜனோ காலித், ரவி வெங்கட்ராமன், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட சிலர் இதில் வருகின்றனர். முந்தைய பாகத்தில் வந்த ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் ஒரு சில ஷாட்களுக்கு வந்து போயிருக்கின்றனர்.
இவர்களது பெர்பார்மன்ஸை மீறி, ஐஸ்வர்யாவாக வரும் அர்ச்சனா ரவிச்சந்திரன் ரசிகர்களைக் கவர்கிறார். மூன்று, நான்கு காட்சிகளில் வந்தாலும் அவரது இருப்பு கைத்தட்டல்களை அள்ளுகிறது.
அடுத்த பாகம் உண்டா?
‘இந்த பேய் கீய் இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காதுங்க’ என்பவர்களுக்கு ‘டிமான்டி காலனி 2’ நிச்சயம் ஒவ்வாமை தரும். சிலருக்கு இதில் காட்டப்படும் உலகம் தலைவலியையும் இன்னபிற உபாதைகளையும் உருவாக்கலாம். மற்றபடி, ‘ஹாரர்’ பட பிரியர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இப்படம் உள்ளது.
ஒரு ‘கிளாசிக்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குகையில், முதல் பாகத்தில் இருந்த சில விஷயங்களைப் போன்றே அதில் சில அம்சங்கள் இருக்க வேண்டும். அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாகப் புதியதொரு திரையனுபவத்தைத் தர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படமாக ‘டிமான்டி காலனி 2’ உள்ளது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
அதேநேரத்தில், முதல் பாகத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றி பார்க்கும்போது ஏற்பட்ட ’கூஸ்பம்ஸ் மொமண்ட்கள்’ இதில் கிடைக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். இதில் பயமுறுத்தல் குறைவு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முதல் பாகத்தின் வெற்றி நம்மிடம் உருவாக்கிய எதிர்பார்ப்பு அதற்கொரு காரணமாக இருக்கலாம்.
’எல்லாம் சரி, அடுத்த பாகம் உண்டா’ என்று தீவிர ஹாரர் பட ரசிகர்கள், அந்த வகைமையில் அமைந்த படங்களின் கிளைமேக்ஸ் காட்சியை உற்றுக் கவனிப்பார்கள். இதிலும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு முடிவினைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதேநேரத்தில், திரைக்கதையின் முதல் அரை மணிநேரத்தில் தான் இட்ட முடிச்சுகளையும் அவிழ்த்திருக்கிறார்.
எழுத்தாக்கத்திலும் காட்சியாக்கத்திலும் செறிவானதொரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘டிமான்டி காலனி 2’. சிறப்பானதொரு ஹாரர் பட காட்சியனுபவத்தைப் பெற வேறென்ன வேண்டும்?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ராயன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
வளரும் இசைக் கலைஞர்களுக்காக… ச.நா தொடங்கிய ‘ரகிடா’
கலைஞர் நாணயம் : சென்னை வரும் ராஜ்நாத் சிங்கின் முழு பயண விவரம்!
உலக – அமெரிக்க – ஒன்றிய முரணில் நமது பாதையும் தெரிவும் என்ன? பகுதி 5