எதையும் ரத்தினச்சுருக்கமாகச் சொல்லும் பழக்கம் நம் சமூகத்தில் தற்போது வேரூன்றியிருக்கிறது. பக்கம் பக்கமாக படித்த காலம் மலையேறி, வீடியோவில் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சைக் கேட்ட வழக்கமும் குன்றி, இன்று ‘ஷார்ட்ஸ்’, ‘ரீல்ஸ்’ என்று சில நொடிகளை மட்டுமே ரசித்தால் போதுமென்ற நிலை பரவலாயிருக்கிறது.
திரைத் துறையையும் அந்த போக்கு பாதித்திருக்கிறது. அதனால், இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகப் படம் எடுப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் யோசித்து திரைக்கதை அமைப்பதும் பெருகி வருகிறது. அதனால் கனகச்சிதமான படைப்பொன்று கிடைத்தால் பரவாயில்லை; தகவல்கள் விடுபட்ட, நேர்த்தி குறைவான படமொன்றைக் காண நேர்ந்தால் என்னாவது?
ஹரீஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, ஆத்மிகா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘திருவின் குரல்’ பார்க்கும்போது மேற்சொன்னதே தோன்றியது.

கதை என்ன?
சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பம். கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் காண்ட்ராக்டராக மாரிமுத்து (பாரதிராஜா) இருக்க, அவரது மகன் திரு (அருள்நிதி) என்ஜினியரிங் படித்துவிட்டு பணியில் உதவியாக இருக்கிறார். தாய் மறைந்துபோக, தந்தையும் பாட்டியுமே துணை என்றிருக்கிறார்.
திருவின் சகோதரி (சுபத்ரா) கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அவரையும் அவரது மகளையும் (மோனிகா சிவா) அந்த குடும்பமே கண்ணிமை போலக் காக்கிறது.
அத்தை மகள் பவானியோடு (ஆத்மிகா) திருவுக்குத் திருமணம் நிச்சயமாயிருக்கிறது. எல்லாமே சுமூகமாக இருக்கிறது எனும் நிலையில், திடீரென்று ஒருநாள் பணியிடத்தில் விபத்துக்கு ஆளாகிறார் மாரிமுத்து.
அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார் திரு. அங்கு பணியாற்றும் லிப்ட் ஆபரேட்டர் ஆறுமுகம் (அஷ்ரஃப்) திருவின் சகோதரி மீதும், பவானி மீதும் காமப்பார்வை வீசுகிறார்; இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார். அதனால் திரு ஆத்திரமடைகிறார். ஆனால், குடும்பத்தினர் அனைவருமே ‘கோபப்படாதே, நாம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருக்கிறோம்’ என்று அறிவுரை சொல்கின்றனர். காரணம், திரு எளிதில் கோபப்பட்டு கை ஓங்குபவர் என்பதே.
இந்தச் சூழலில், டீக்கடையில் ஏற்படும் தள்ளுமுள்ளுவில் ஆறுமுகத்தை ஓங்கி அறைந்துவிடுகிறார் திரு. மருத்துவமனையில் இருக்கும் வார்டுபாய், வாட்ச்மேன், பிணவறை ஊழியர் ஆகியோரோடு சேர்ந்து கூலிப்படை போலச் செயல்பட்டு வருபவர் ஆறுமுகம். திருவிடம் அடி வாங்கியது, அவரைப் பழி வாங்கும் உணர்வின் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
அதையடுத்து, மருத்துவமனையில் மாரிமுத்துவுக்குத் தரப்படும் சிகிச்சையில் குழப்பம் விளைவிக்கிறது ஆறுமுகம் கும்பல். அதனால், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அந்த இக்கட்டான நிலையில் இருந்து தனது தந்தையை திரு மீட்டாரா இல்லையா என்பதுதான் ‘திருவின் குரல்’.
திரு எனும் பாத்திரம் பேச்சுத்திறன் குறைபாடு உடையது என்பதுதான், இந்த கதையை வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. இப்படம் பார்த்த ரசிகர்களிடம் ‘கதை என்ன’ என்று கேட்டால், ’சண்டக்கோழி கதைதான் இதுவும்’ என்று பதிலளிப்பார்கள். ஆமாம், தன்னை அடித்த நாயகனைப் பழி வாங்க வில்லன் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் திரைக்கதையில் பெரும்பான்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.
மருத்துவமனை ‘பகீர்’!
அரசு மருத்துவமனை பின்னணியிலேயே முக்கால்வாசி படம் நகர்கிறது. அங்கிருக்கும் நடைமுறைகள், பிரச்சனைகள், சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, பணியாளர்களின் அலட்சியம் போன்றவை மேலோட்டமாகத் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வில்லன் கும்பல் தங்களின் மனவிகாரங்களுக்கேற்ப மருத்துவமனைப் பணியைப் பயன்படுத்திக் கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவை நிச்சயமாகப் பார்வையாளர்களுக்குப் பீதியூட்டும்.
‘மருத்துவமனை பகீர்’ என்ற தலைப்பில் நாளிதழ்களில், பத்திரிகைகளில் நாம் சில செய்திகளை எதிர்கொண்டிருப்போம். அவற்றை நினைவூட்டும்விதமாக, இதில் சில காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹரீஷ் பிரபு.
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ரமணா’ பார்த்து சில மருத்துவமனைகள், மருத்துவர்களைக் கண்டு பயம் பெருகியதோ, அதே போன்று மருத்துவமனை ஊழியர்களைக் கண்டு பீதிக்குள்ளாக்கும் வேலையைச் செய்கிறது இப்படம்.

ஆனால் கூலிப்படை, கொள்ளை, கொலை போன்றவற்றை அந்த கும்பல் ’ஜஸ்ட் லைக் தட்’ செய்வதாகக் காட்டும்போதுதான் யதார்த்தம் காணாமல் போய்விடுகிறது. மருத்துவமனையில் இருக்கும் கீழ்நிலைப் பணியாளர்களை இப்படிக் காட்டியிருப்பது நிச்சயம் சர்ச்சையாகும். அதேநேரத்தில், மருந்துக்குக் கூட காவல் துறைக்குத் திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்படவில்லை. திரைக்கதையில் அருள்நிதி – பாரதிராஜா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், அவர்களது குடும்பத்தினராக வருபவர்களுக்கு வழங்கப்படவில்லை. வில்லன்களது நிலையும் கூட அதுதான்.
ஹீரோவானாலும் வில்லன் ஆனாலும், அவர்களது குடும்பம், வாழுமிடம், சுற்றுப்புறத்திலுள்ள மனிதர்கள் போன்ற விஷயங்கள் திரையில் காட்டப்பட்டால் மட்டுமே திரைக்கதையில் ‘யதார்த்தம்’ இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். அவற்றைத் தவிர்த்திருப்பது, ஒட்டுமொத்தப் படத்தின் ஆதாரத்தையே சிதைத்திருக்கிறது.
வில்லன்களைக் கொடூரமாகக் காட்ட ஒரு வட இந்தியத் தொழிலதிபர் குடும்பத்தோடு கொலை செய்யப்படுவதாக ஒரு காட்சி உள்ளது; ஒரு டாக்டரிடம் அவரது கேர்ள்பிரெண்ட் தகராறில் ஈடுபடுவதாகவும் ஒரு காட்சி உண்டு. அதேபோல, கருப்புப் பணத்தைக் கடத்தும் ஒரு கும்பலும் திரைக்கதையில் இடம்பெறுகிறது. அந்த பாத்திரங்கள் குறித்த விவரங்களும் திரைக்கதையில் குறிப்பிடப்படவில்லை.
பாதி வெற்றி!
கண்களை உருட்டி ஆச்சர்யப்படுவது, கிண்டலடிப்பது என்று மிகச்சில பிரேம்களில் பேசாமலேயே நகைச்சுவையூட்டுகிறார் அருள்நிதி. ஆனால், சில நொடிகள் கூட அவை நீடிப்பதில்லை. மற்றபடி, ’ஆக்ஷனுக்கு தயார்’ என்பது போல படம் முழுக்க சீரியசான முகத்துடன் வலம் வந்திருக்கிறார்.
தொடக்க காட்சிகளில் கொஞ்சமாய் ‘ரொமான்ஸ்’ செய்வதோடு, ஆத்மிகாவின் பாத்திரம் ‘விஆர்எஸ்’ வாங்கிக் கொள்கிறது. சுபத்ரா, அவரது மகளாக வரும் மோனிகா ரவியின் பாத்திரங்களுக்கு இன்னும் கொஞ்சம் ‘ஸ்பேஸ்’ தந்திருக்கலாம்.
வில்லன்களாக வரும் அஷ்ரஃப், ஏ.ஆர்.ஜீவா, மகேந்திரன், ஹரீஷ் சோமசுந்தரம் நால்வரும் நம்மைப் பயமுறுத்துகின்றனர். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் அது நீடிக்கவில்லை; அதோடு, அவர்களது ஆத்திரத்தை, மன விகாரத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தும் காட்சிகள் படத்தில் வெட்டப்பட்டிருக்கின்றன. லிஃப்டில் இருக்கும் சிறுமியிடம் அஷ்ரஃப் கத்தியை நீட்டும் காட்சி அதற்கொரு உதாரணம்.

ஹீரோ அருள்நிதியின் பெயருக்கு முன்னால், டைட்டிலில் பாரதிராஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த முக்கியத்துவம் திரைக்கதையிலும் இருக்கிறது. அவரது முதுமை அப்பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்தாலும், அதுவே அவரது நடிப்புக்குத் தடைக்கல்லாகவும் அமைந்திருக்கிறது. அதனால், பாண்டிய நாடு படத்தில் வருவது போன்ற தந்தை – மகன் பாசத்தை இதில் காண முடியவில்லை.
சிண்டோ பொடுதாஸின் ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, தியாகராஜனின் கலை வடிவமைப்பு ஆகியன சேரும்போது, நாமே ஒரு நடுத்தர வர்க்கப் பிரதிநிதியாக அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த பிரமை எழுகிறது. சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை அக்காட்சிகளோடு சேரும்போது, அவற்றின் தாக்கம் பன்மடங்கு பெருகுகிறது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் அவ்வாறே இருக்கின்றன.
பொதுவாக, ஆக்ஷன் படங்கள் எப்போது ரசிகர்களின் மனதோடு நெருக்கமாகும்? அதில் நிரம்பியிருக்கும் உணர்வுகள் அவர்களது வாழ்வைத் தொட்டுச் செல்ல வேண்டும்; ஏதேனும் ஒருவிதத்தில் அப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் மட்டுமே யதார்த்தத்திற்குப் புறம்பான சண்டைக்காட்சிகள் கூட துருத்தலாகத் தெரியாது. தொடக்க காட்சியில் நிறைந்திருக்கும் ஆக்ஷன் பார்ப்பவர்களின் நாடி நரம்பைப் புடைக்கச் செய்வதாக இருந்தாலும், அடுத்தடுத்த சண்டைக்காட்சிகளில் அத்தகைய உணர்வெழுச்சி ஏற்படவில்லை.
தொழில்நுட்ப அம்சங்கள், நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு இருந்தபோதும், சரியான விவரணையுடன் கூடிய திரைக்கதை அமையாத காரணத்தால் நேர்த்தி குறைந்த படைப்பாக உள்ளது ‘திருவின் குரல்’. அரசு மருத்துவமனைகளின் மீது, அங்குள்ள பணியாளர்கள் குறித்து எதிர்மறை எண்ணம் படிந்துவிடுமோ என்ற யோசனை கூட, இயக்குனர் சுதந்திரமாகக் கதை சொல்லத் தடையாக இருந்திருக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அந்த குறைகளை இல்லாமலாக்கி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைத் தந்திருக்கலாம்.
உதய் பாடகலிங்கம்
பல் பிடுங்கிய பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு!
லஞ்ச ஒழிப்புத் துறையின் லட்சணம்: 6 ஆயிரம் ரூபாய்க்கு 17 ஆண்டுகளாக போராடும் விவசாயி!