சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (ஜனவரி 22) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகர் அருள்தாஸ் பேசியதாவது, “சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ பட நிகழ்வில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதை பார்த்து மிக வருத்தமாக இருந்தது. அவரை பல மேடைகளில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல ஜாம்பவான்கள், தமிழ் ஆளுமைகள் பலரும் இந்த மேடைக்கு வந்து சென்றுள்ளனர். மிஷ்கின் மிக அநாகரிகமாக பேசியது மிக வருத்தமாக இருந்தது. மேடை நாகரிகம் என ஒன்று உள்ளது. அங்கு வந்து கொச்சையான வார்த்தைகளை உபயோகிப்பது ஏற்புடையதாக இல்லை.
பல உலக சினிமாக்களை பார்க்கிறேன் என கூறுகின்றார். உங்களுக்கு ஒரு மேடை நாகரிகம் தெரியாதா என்ன? பல புத்தகங்களை படிப்பதாக கூறும் நீங்கள் ஒரு போலி அறிவாளி. யார் இவர் எல்லோரையும் வாடா, போடா எனப் பேச?.
மேடையில் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித் என பலரும் உள்ளனர் அவர்கள் முன்னிலையில் அப்படி பேசியது அருவருப்பாக இருந்தது. நீங்கள் ஒன்றும் சுசீந்திரன் போல மண்சார்ந்த படங்களை எடுத்து வரவில்லை. குத்தாட்டம் பாடல்களை வைத்து வந்தவர் தான் நீங்கள். இயக்குநர் பாலா 25 ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கும் ’குடித்துவிட்டு படுத்து கிடந்தான் பாலா’ என்று பேசினார். அதேபோல ‘பாட்டல் ராதா’ நிகழ்ச்சி மேடையில் இளையராஜாவை’ அவன் இவன்’ என பேசியது அசிங்கமாக இருந்தது. அவர் குடிப்பார், இவர் குடிப்பார் என்று பேச , நீங்கள் என்ன ஊற்றியா குடுத்தீர்? யாரா நீ.. என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
இவரெல்லாம் ஒரு இயக்குனரே கிடையாது,அவர் கொச்சையாக பேச பேச மேடையில் அமர்ந்திருந்த எல்லோரும் கை தட்டி சிரிக்கின்றனர். இதற்கெல்லாம் நாம் வெட்கப்படவேண்டும். பல ஜாம்பவான்களை உருவாக்கிய தமிழ் சினிமாவில் மிஸ்கின் இந்த மாதிரி நடந்து கொள்வது மிகவும் அருவருப்பாக உள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.