உதயசங்கரன் பாடகலிங்கம்
ஒளிப்பதிவை கைவிட்டு கேமிரா முன் வெற்றி பெற்ற அருள்தாஸ்!
அருள்தாஸ். தமிழ் திரையுலகில் வில்லத்தனமான பாத்திரங்கள் தொடங்கி நாயகன், நாயகியின் சித்தப்பா, மாமா, பெரியப்பா, தாத்தா என்று விதவிதமான உறவுகளில் விறைப்பாகவும் சிறப்பாகவும் தென்படக்கூடிய நடிகர்.
சுருள் கேசம், பரந்து விரிந்த நெற்றி, முகத்திலும் உடம்பிலும் மிளிரும் பெருமிதம், ஆரோக்கியத்தை தேக்கிய உடல்வாகு, அனைத்துக்கும் மேலாக முரட்டுத்தனத்தை வெளிக்காட்டும் உடல்மொழி. இவற்றோடு முகம் நிறையத் தெரியும் சாந்தம் என்று நம் கண்ணில் எதிர்ப்படுகிற எத்தனையோ சாதாரண மனிதர்களின் ஒற்றை உருவமாகத் தெரிகிறவர் அருள்தாஸ்.
அ ஆ இ ஈ, பதினாறு என்று இரண்டு ‘கலர்ஃபுல்’ படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது பலர் அறியாத தகவல்.

ஒளிப்பதிவாளராக கேமிராவின் பின்னே நின்றிருந்த அருள்தாஸ், கேமிரா முன்னே வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக உருமாறியது எப்படி?
மதுரை வட்டாரத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனது பிழைப்பு தேடி வெவ்வேறு துறைகளை அலசி ஆராய்ந்தவர். கிராமியம் சூழ் பால்ய காலத்தைப் பெற்றவர், இருபதுகளுக்குப் பிறகு சென்னை நோக்கி இடம்பெயர்ந்தார்.
புகைப்படக் கலைஞராகத் தனது திரை வாழ்வைத் தொடங்கியவர், திருமண ஆல்பங்கள் தயாரிப்பில் ஈடுபட்டார். பிறகு வீடியோ ஒளிப்பதிவாளராக மாறியவர், வெவ்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினார். பயணங்கள் வழியே தனது படைப்புகளுக்கான ஊக்கத்தைத் திரட்டிக் கொண்டார்.
தொண்ணூறுகளின் பிற்பாதியில், அருள்தாஸ் மெல்ல சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக நுழைந்தார். அருணாச்சலம் உட்படப் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
உதவி ஒளிப்பதிவாளராக இருந்த காலகட்டத்தில் சினிமா, சீரியல் என்று வித்தியாசம் பார்க்காது உழைத்திருக்கிறார் அருள்தாஸ். தொலைக்காட்சி உலகிலும் தனிப்பட்டதாகச் சில அனுபவங்களை அள்ளியிருக்கிறார்.
அதனால், ஒளிப்பதிவாளராகத் தனது அறிமுகம் அனைவரும் திரும்பிப் பார்க்கும்படியாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏதும் அவரிடத்தில் இல்லை. ஆனால், தொடர்ந்து வேலைகளில் தன்னை மூழ்கடித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மட்டும் அவரை விட்டு அகலவில்லை.

2000வது ஆண்டுக்குப் பிறகு, அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டு ஒளிப்பதிவாளராகக் களமிறங்கினார் அருள்தாஸ். இயக்குனர் எஸ்.டி.சபா அதற்கான வாய்ப்புகளைத் தந்தார். அந்த படங்கள் பெரிய வெற்றிகளை ஈட்டவில்லை.
அதனால், அடுத்து என்ன செய்வது என்று தயங்கி நின்ற அருள்தாஸை நடிப்பதற்கான வாய்ப்புகள் தாங்கிப் பிடித்தன.
ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக இருந்த காலகட்டத்தில் ஷாஜகான், நைனா, ராம் படங்களில் தலைகாட்டியிருக்கிறார் அருள்தாஸ். ஆனால், சுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ படத்தில் ஏற்ற குட்டி நடேசன் பாத்திரம் மட்டுமே, அவரைப் பட்டிதொட்டியெங்கும் அறிமுகப்படுத்தியது. அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாகப் பல படங்களில் இடம்பெறுகிற வாய்ப்பினையும் பெற்றுத் தந்தது.
ஆனால், அப்படம் நடிக்கும் காலகட்டத்திலேயே ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நாயகியின் சகோதரனாக நடித்தார் அருள்தாஸ். அந்தப் படத்தின் வெற்றியும் அவர் மீது மாபெரும் புகழ் வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
ஆனாலும் அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, தடையறத் தாக்க, நீர்பறவை என்று மிகச்சில படங்களை மட்டுமே தேர்வு செய்தார். அப்படிப்பட்ட அருள்தாஸை மிக வித்தியாசமாகக் காட்டியது ‘சூது கவ்வும்’. அதில் வந்த ரவுடி டாக்டர் பாத்திரம் திரையில் சீரியசாக தெரிந்தாலும், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

‘இந்த மூஞ்சியில ஏன் ரொமான்ஸ் வரமாட்டேங்குது’ என்று அவர் அலறியபோது, தியேட்டரே சிரிப்பலைகளால் நிறைந்தது.
பிறகு சலீம், திருடன் போலீஸ், பாபநாசம், தர்மதுரை, பண்டிகை, காலா, பேரன்பு, ராட்சசி என்று தனி பாதையில் பயணிக்கத் தொடங்கினார் அருள்தாஸ். ஆண்டுக்கு ஐந்தாறு படங்களாவது நடித்து விடுகிற அளவுக்கு, இன்றும் அவரைத் தேடி வருகின்றன வாய்ப்புகள்.
மகாராஜா, போகுமிடம் வெகுதூரமில்லை, சூது கவ்வும் 2, விடுதலை 2 என்று கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த சில படங்களில் இடம்பிடித்திருக்கிறார் அருள்தாஸ். ’நவம்பர் ஸ்டோரி’ எனும் வெப்சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார்.
நடிக்க வந்து பதினைந்து ஆண்டு காலம் ஆனபின்னும், திருப்புமுனை தந்த பாத்திரங்களை மிகக்குறைவாகவே பெற்றிருக்கிறார் அருள்தாஸ். ஆனாலும், சினிமா குறித்த தனது புரிதல் பெரிய வெற்றிகளைத் தேடி வரச் செய்யும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்.

இருபத்தைந்து ஆண்டுகளாகச் சினிமாவுலகை சுற்றி தனது சுவாசத்தை அமைத்துக்கொண்ட அருள்தாஸின் மனது, இதுவரை சுழன்ற வட்டத்தைத் தாண்டி இன்னொரு புள்ளிக்கு நகர இப்போது துடித்துக் கொண்டிருக்கிறது.
அவருக்கான வெற்றிகள் தொடும் தூரத்தில் இருக்கின்றன. இனி வரும் காலம் அதற்கான வாய்ப்புகளைக் கனியச் செய்யட்டும்.
இன்றும் ஒளிப்பதிவாளராகவும் நடிகராகவும் ஒரு சேரச் சாதிக்கிற துடிப்பு அருள்தாஸிடம் உண்டு. அவரது இரட்டை சவாரி விருப்பத்திற்கு உகந்த வாய்ப்புகளை இயற்கை அவருக்கு வாரி வழங்கட்டும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெரியார் குறித்து சர்ச்சை… சீமான் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
7 ஆயிரம் வழக்கு கூட போடுங்க… பெரியாரை மீண்டும் சீண்டும் சீமான்
அப்பாவி விவசாயியும் அடேங்கப்பா சூதாட்டமும் !
முதல்வருடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்