ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ஈடு செய்ய முடியாத இழப்பு: வெற்றி மாறன்

சினிமா

ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என இயக்குநர் வெற்றி மாறன் இன்று (ஜூலை 7) கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நேற்று இரவு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

சிறிது நேரம் வீட்டில் வைக்கப்பட்ட பின்னர் பொது மக்களின் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் சாலையில் இருக்கும் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வெற்றி மாறன், “ஆம்ஸ்ட்ராங் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நல்வழிப்படுத்திய ஒரு பெரிய ஆளுமை.. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரால் உத்வேகம் பெற்று இன்று வெவ்வேறு இடங்களில் படித்த இளைஞர்களுக்கும், படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கும் அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவரது உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அவர்கள் விருப்பம் எதுவோ அதைச் செய்வது சரி என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்த படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கட்சியின் மாநில தலைவரின் மரணம் இப்படி நடந்திருக்கக் கூடாது. இந்த கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் கொலையாளிகள் யார் என்பது தெரியவரும்” என்று வெற்றி மாறன் கூறினார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை… உண்மையான குற்றவாளிகள் எங்கே? : தமிழக அரசுக்கு மாயாவதி கேள்வி!

HBD Dhoni: சீரியஸாக கேக் வெட்டிய ‘தல’ தோனி… சட்டென சிரிப்பூட்டிய சாக்‌ஷி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *