நடிகர் அர்ஜுன் மீண்டும் இயக்குநராக களமிறங்கும் திரைப்படத்திற்கு ‘சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்ரீ ராம் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரிப்பில் ‘சீதா பயணம்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர், நடிகைகள் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நடிகர் அர்ஜூன் 1992ஆம் ஆண்டு வெளியான ‘சேவகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதற்கு பிறகு ‘ஜெய் ஹிந்த்’, ‘ வேதம் ‘, ‘ ஏழுமலை’ உட்பட 12 படங்களை இயக்கியுள்ளார்.
இவரது இயக்கத்தில் தமிழில் கடைசியாக வெளியான படம் கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியான ‘சொல்லிவிடவா’. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்தில் களம் இறங்கியுள்ளார் அர்ஜூன்.
சமீபத்தில் இவரது உறவினரான கன்னட நடிகர் துருவ் சர்ஜா நடிப்பில் வெளியான ‘மார்டின் ’ படத்தின் கதையின் எழுத்தாளராக நடிகர் அர்ஜுன் பணிபுரிந்தார்.
தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது, ‘மங்காத்தா’ திரைப்படத்திற்குப் பிறகு அஜித்துடன் அர்ஜூன் இணையும் இரண்டாவது திரைப்படமாகும். அடுத்தடுத்து ‘தீயவர் குலைகள் நடுங்க’, ‘அகத்தியா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் அர்ஜுன்.
– ஷா
சென்னையில இந்த ரூட்ல போக வேண்டாம்… போலீஸ் எச்சரிக்கை!
அம்மா உணவகங்களில் 2 நாட்களுக்கு உணவு இலவசம் : ஸ்டாலின் உத்தரவு!