அநீதி விமர்சனம்: இயக்குனர் வசந்தபாலனின் வெம்மையான உலகம்!
வெயில், அங்காடித்தெரு படங்களில் நம்மை உணர்வெழுச்சிக்கு ஆளாக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். வாழ்வின் துன்பமான, அவலமான, திரும்பிப் பார்க்க விரும்பாத, மனதைப் பிறாண்டுகிற நிகழ்வுகளைக் காட்சிகளாகவும் கதைகளாகவும் உருமாற்றும் படைப்பாளிகளில் ஒருவர். அவரே தயாரிப்பாளர்களில் ஒருவராகி, இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களின் அபிமானத்தை அள்ளத் தவறிய வசந்தபாலன், இதில் அதனைச் சாதித்திருக்கிறாரா?
விரக்தியின் விளிம்பில்..!
ஒரு கால் செண்டரில் வேலை பார்த்த திருமேனி (அர்ஜுன் தாஸ்), அது பறி போனவுடன் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொள்கிறார். நிறுவனம் தரும் நெருக்கடி மேலிருந்து அழுத்த, வாடிக்கையாளர் என்ற பெயரில் சில மனிதர்கள் செய்யும் ‘அட்ராசிட்டி’கள் அவரது முகத்திலறைகின்றன. அனைத்தையும் கண்டு பொங்கியெழும் ஒருவர் ரௌத்திரம் அடைய வேண்டுமே? அதைத்தான் திருமேனியும் செய்கிறார்; ஆனால், தன் மனதுக்குள்ளாகவே. ஆம், தன்னை எரிச்சல்படுத்துபவர்களை, ஏமாற்றுபவர்களை, அவமானப்படுத்துபவர்களைக் கொலை செய்யும் எண்ணம் அவருக்குள் அசைந்தாடுகிறது. எங்கே அதனைச் செய்துவிடுவோமோ என்கிற பயத்தில் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கிறார். அவர் தரும் மருந்துகளைச் சாப்பிடுகிறார். அந்த நேரத்தில், மருந்துகளே தேவைப்படாத அளவுக்கு ஒரு நிலைமை உருவாகிறது. ஒருநாள் உணவு கொடுக்கப்போன இடத்தில், சுப்புலட்சுமி (துஷாரா விஜயன்) எனும் பெண்ணைச் சந்திக்கிறார்.
சுப்புலட்சுமி, அந்த பங்களாவில் தங்கி வேலை செய்துவரும் பெண். அவரது முதலாளியோ, அமிலத்தையொத்த வார்த்தைகளைக் கொட்டும் இயல்பு கொண்ட ஒரு மூதாட்டி. அந்த வீட்டு உரிமையாளரின் இருப்பையும் மீறி, தொடர்ந்தாற்போல சுப்புலட்சுமியைச் சந்திக்கிறார் திருமேனி. ஒருகட்டத்தில் இருவரும் பார்க், பீச் என்று சுற்றும் அளவுக்கு நெருக்கம் அதிகமாகிறது. இந்த நிலையில், இருவரும் தனது வீட்டில் சந்திப்பதை அந்த மூதாட்டி நேரில் பார்த்துவிடுகிறார். ’லபோதிபோ’வென்று கத்துகிறார்.
அன்றிரவே, ‘பாட்டி மயங்கிக் கிடக்கிறார்’ என்று சுப்புலட்சுமியிடம் இருந்து போன் வருகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். அந்த நேரத்தில், அந்த மூதாட்டியின் மகளுக்கும் மகனுக்கும் போன் செய்கிறார் சுப்புலட்சுமி. அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல், பாட்டியின் ஏடிஎம் கார்டை திருமேனியிடம் கொடுத்து பணம் எடுத்து வரச் சொல்கிறார் சுப்புலட்சுமி. அந்தப் பணத்தில் சடலங்களைக் பாதுகாக்கும் நிறுவனமொன்றில் பாட்டியின் பிணத்தை ஒப்படைத்துவிட்டு, இருவரும் அவரவர் வீட்டுக்குச் செல்கின்றனர்.
அதற்கடுத்த நாளே, இடியாய் ஒரு சேதி வந்திறங்குகிறது. அந்த ஏடிஎம் கார்டை திருடிச் சென்றுவிடுகிறார் சுப்புலட்சுமியின் சகோதரர். அவர் இரண்டு லட்ச ரூபாய் வரை எடுத்த காரணத்தால், பாட்டியின் பிள்ளைகளிடம் என்ன சொல்வதென்று தவிக்கிறார் சுப்புலட்சுமி. அந்த நேரத்தில் அவர்களிடம் இருந்து போன் வர, பதற்றத்தில் பாட்டி உயிரோடிருப்பதாகப் பொய் சொல்கிறார். அவர் சொல்லும் பொய், திருமேனியையும் பாதிக்கிறது. வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் அந்த மூதாட்டியின் மகனும் மகளும் தாய் இறந்து போனதை அறிகின்றனர். பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் நஞ்சிருப்பது தெரிய வருகிறது. அதனால், சுப்புலட்சுமியும் திருமேனியும் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாகப் பழி வந்து சேர்கிறது.
அதன்பிறகு என்ன நடந்தது? மனநலப் பாதிப்பில் இருக்கும் திருமேனி, அந்தச் சூழலை எவ்வாறு எதிர்கொண்டார் என்று சொல்கிறது ‘அநீதி’.
சுருக்கமாகச் சொன்னால், விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதனை, இந்தச் சமூகம் எப்படி கீழே தள்ளிவிடப் பார்க்கிறது என்கிறது ‘அநீதி’.திருமேனி கொலைவெறியோடு சுப்புலட்சுமியைத் தேடுவதில் இருந்தே திரைக்கதை தொடங்குவதால், படம் முடியுமிடம் நமக்கு முதலிலேயே தெரிந்துவிடுகிறது.
அபாரமான நடிப்பு!
ரகுவரனின் ‘க்ளோன்’ ஆக ரசிகர்களால் கருதப்படுகிறார் அர்ஜுன் தாஸ். அந்த எதிர்பார்ப்புக்கேற்ப, இதில் அவர் மிக அபாரமாக நடித்துள்ளார். ரகுவரன் ஆரம்பகாலத்தில் இதே போன்ற வேடங்களில் தொடர்ந்து நடித்தார்; அதனால், அந்த தவறை மட்டும் அர்ஜுன் தாஸ் செய்துவிடக் கூடாது.
கொஞ்சம் படித்த, வெளியுலகம் தெரிந்த ஒரு பணிப்பெண்ணாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். வருத்தம், விரக்தி, காதல், கோபம் என்று எந்தவொரு உணர்வையும் அளவோடு வெளிப்படுத்தும் திறமை அவரிடம் இருப்பது நல்ல விஷயம்.
இந்த படத்தில் வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம், சாந்தா தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே.சதீஷ்குமார், அறந்தாங்கி நிஷா, பாவா லட்சுமணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். நாயகனின் நண்பர்களாக பரணியும் ஷராவும் தோன்றியிருக்கின்றனர்.
பிளாஷ்பேக் காட்சிகளில் காளி வெங்கட் வந்து போயிருக்கிறார். ஒரு சுமாரான படத்தில் கூட அவரது இருப்பு வெகு இயல்பாக இருப்பதைப் பார்த்த அனுபவம், இந்த அழுத்தமான கதையில் எப்படி நடிக்கப் போகிறார் என்பதை முன்னுணர்த்திவிடுகிறது. அதனை வெகுசாதாரணமாக எதிர்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார் காளி வெங்கட். இந்த பலம், நிச்சயமாக அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கும்.
வறட்சி நிறைந்த கதையமைப்பு இருந்தாலும், திரைக்கதையில் ஜனரஞ்சகத்தன்மை நிறைந்திருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். எட்வின் சகாய் ஒளிப்பதிவு அதனைப் பூர்த்தி செய்திருக்கிறது. துஷாராவைக் காட்டும் காட்சிகளில் கவிதையாய் தென்படும் ஒளிப்பதிவு, கிளைமேக்ஸில் ரத்தச் சகதிக்குள் நாமே விழுந்த உணர்வை உருவாக்குகிறது. சுரேஷ் கல்லாரியின் கலை வடிவமைப்பு, இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
மனக்கற்பனையா, உண்மையான நிகழ்வா என்று யோசிக்கும் வகையில் அமைந்துள்ள காட்சிகளால் நாம் குழம்பிவிடக் கூடாதென்பதில் தன் தீவிர உழைப்பைக் கொட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரவிக்குமார். அதையும் மீறி சில ரசிகர்கள் குழம்பும் வாய்ப்பை வழங்குகின்றன் திரைக்கதையின் சில இடங்கள்.
’அநீதி’ என்ற டைட்டில் பெருமளவில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதற்குத் தடையாகவே இருக்கும். அதையும் மீறி அப்பெயரைச் சூட்டியிருப்பது இயக்குனரின் உறுதித்தன்மையைக் காட்டுகிறது. அவர் கொட்டியிருக்கும் உழைப்பும் அதற்கேற்ப அமைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா, முதலாளி மனப்பான்மை, தொழிலாளர் மீதான சுரண்டலை வெளிப்படுத்தும் வசனங்களில் கவனம் ஈர்க்கிறார் எஸ்.கே.ஜீவா. அதுவும் காளி வெங்கட் தென்காசி வட்டார வழக்குமொழியை வெகுவேகமாகப் பேசுமிடங்கள் மனதோடு ஒட்டிக்கொள்கின்றன.
ஒட்டுமொத்தமாக, இந்தக் குழு தந்த உழைப்புக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் நன்றாக இருக்கிறது என்பதைப் பின்னுக்குத் தள்ளும்விதமாக, அற்புதமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார். அதுவே முக்கால்வாசிப்படம் வரை நாம் இருக்கையை விட்டு எழாமல் இருக்கக் காரணமாக உள்ளது.
கொஞ்சம் கவனித்திருக்கலாம்!
‘அநீதி’யில் வெளிநாட்டில் இருந்து வந்த மகன், மகளிடம் அவரது தாய் இறந்துபோனதைத் தெரிவிப்பதாக ஒரு காட்சி உண்டு. உண்மையில், அதனை மிகநேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் வசந்தபாலன். அர்ஜுன் தாஸ், துஷாரா, சாந்தா மற்றும் காளி வெங்கட் ஆகியோரது பாத்திரங்களைத் தெளிவாகப் படைத்த அவர், மற்ற பாத்திரங்களுக்கு அதே முக்கியத்துவத்தைத் தரவில்லை.
ஒரு வீட்டில் தங்கி வேலை செய்யும் பெண் ஒருவர், எப்போதாவதுதான் வெளியில் இருந்து ‘ஆர்டர்’ செய்து சாப்பிட முடியும். வாங்கும் சம்பளத்தைக் குடும்பத்திற்கே செலவிடும் ஒருவரால் அப்படித்தான் இருக்க முடியும். ஆனால், திரைக்கதையில் அது சரியாக வெளிப்படவில்லை.
சாந்தாவின் வீட்டில் வேலை செய்யும் பாப்பம்மாள் என்ற பாத்திரத்தை ஒரு காட்சியில் மட்டுமே காட்டுகிறார் இயக்குனர். பிற்பாதியில் அது இடம்பெறவே இல்லை. அவர் மட்டுமல்ல, அர்ஜுன் தாஸின் நண்பராக வரும் பரணியையும் ‘பேக் அப்’ செய்து ஊருக்கு அனுப்பிவிடுகிறார். துஷாராவின் சகோதரரைக் காட்டவே தேவையில்லை என்று முடிவு செய்திருப்பார் போல. அந்த இடங்கள் எல்லாம் ரசிகர்களிடம் சந்தேகங்களைக் கிளப்பும் என்பதைக் கவனிக்கத் தவறியிருக்கிறார்.
அதனால், கிளைமேக்ஸை வார்த்தபிறகே இதர காட்சிகள் எழுதப்பட்டனவோ என்ற ச்ந்தேகம் எழுகிறது. போலவே, படைப்பாளி தன் மனதிலுள்ள கோபத்தைப் பார்வையாளர்களுக்கும் கடத்த முயற்சிக்கிறாரோ என்ற எண்ணமும் தானாக உருவாகிறது.
அது போன்ற குறைகளை மிறி, காளி வெங்கட்டின் பிளாஷ்பேக்கும் படத்தின் முடிவும் ‘அநீதி’யை ரசிக்கச் செய்கின்றன; ஒருமுறை பார்த்துவிட்டு நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட முடியும் என்பதே இதன் சிறப்பு. மொத்தத்தில், இது இயக்குனர் வசந்தபாலனின் வெம்மையான உலகம். அதில் ‘நீதி’யை எதிர்பார்ப்பவர்களை ‘அநீதி’ திருப்திப்படுத்தும்!
உதய் பாடகலிங்கம்
அம்பேத்கருக்கு விலக்கு அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
மணிப்பூரை வைத்து ஸ்டாலின் விளையாடுகிறார்: அண்ணாமலை புகார்!