ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை குறிவைத்து அதிக திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இந்திய நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும், படப்பிடிப்புகளை முடித்து படங்களை வெளியீட்டுக்கு கொண்டு வருவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டாததன் காரணமாகவும் இந்த ஆண்டு ஜுன் 15க்கு பின்னரே முன்னணி நடிகர்கள் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் வெளிவர உள்ள சூழலில் கடந்த மே மாதம் 19 நேரடி தமிழ் படங்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தர் சி நடிப்பில் ’அரண்மனை – 4’, கவினின் ’ஸ்டார்’, அமீரின் ’உயிர் தமிழுக்கு’, சந்தானம் நடிப்பில் வெளியான ’நான் தான் இங்கு கிங்கு’, உறியடி விஜயகுமார் நடிப்பில் வெளியான ’எலக்சன்’, ஹிப் ஆப் ஆதி நடிப்பில் வெளியான ’PT சார்’, சூரி நடிப்பில் வெளியான ’கருடன்’, இயக்குநர் விக்ரமன் மகன் நாயகனாக அறிமுகமாகியுள்ள ’ஹிட்லிஸ்ட்’ ஆகிய படங்கள் வணிக அடிப்படையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
இவற்றில் மே 3 அன்று வெளியான அரண்மனை – 4 திரைப்படம் மட்டும் நான்கு வாரங்களை கடந்து தமிழ்நாட்டில் குறிப்பிட்ட திரைகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
இதன் மூலம் இந்த வருடத்தில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த இரண்டாவது தமிழ்படமாக அரண்மனை – 4 உள்ளது. இந்த ஆண்டு வெளியான நேரடி தமிழ் படங்களில் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த முதல் படம் கேப்டன் மில்லர் ஆகும். ஆனால் அரண்மனை – 4 அளவிற்கு அதிவேகமாக 19 நாட்களில் கேப்டன் மில்லர் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மே – 2024 வெளியான படங்களின் பட்டியல் :
03.05.2024- அரண்மனை- 4
03.05.2024-நின்னு விளையாடு
03.05.2024- அக்கரன்
03.05.2024- குரங்கு பெடல்
03.05.20 24- சபரி
10.05.2024- ஸ்டார்
10.05.2024- ரசவாதி
10.05.2024- உயிர் தமிழுக்கு
17.05.2024- நான்தான் இங்கு கிங்கு
17.05.2024- எலக்சன்
17.05.2024- கன்னி
17.05.2024- படிக்காத பக்கங்கள்
24.05.2024- PT சார்
24.05.20 24- பகலறியான்
31.05.2024- கருடன்
31.05.2024- ஹிட் லிஸ்ட்
31.05.2024- குற்றப்பின்னணி
31.05.2024- புஜ்ஜி at அனுப்பட்டி
31.05.2024- அகாலி
ஸ்டார் எப்படி?
அரண்மணை – 4 தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட படம் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார். முதல் மூன்று நாட்கள் இந்த படத்தின் வசூல் அதிரிபுதிரியாகவே இருந்தது. முதல் நாள் தமிழ்நாட்டில் 2.85 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த ஸ்டார் திரைப்படம், முதல்வார முடிவில் சுமார் ரூ. 14.85 கோடியும், உலகம் முழுவதும் ஓடி முடியும் போது 26 கோடி ரூபாய் மொத்தவசூல் செய்துள்ளது. ஸ்டார் திரைப்படம் தயாரிக்க 12 கோடி ரூபாய் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரண்மனை – 4 போன்று குடும்பங்கள் கொண்டாடிய படமாக ஸ்டார் இல்லை என்றாலும் இளைஞர்கள் விரும்பி பார்த்த படமாக வெற்றி பெற்றுள்ளது.
சந்தானத்தின் மோசமான தோல்வி!
சந்தானம் நடிப்பில் வெளியான ’நான் தான் இங்கு கிங்கு’ படம் முதல் நாள் தமிழ்நாடு முழுவதும் 1 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிப் பிடிக்க போராடியது. படம் முதல் வார முடிவில் சுமார் 8.40 கோடி மொத்த வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைக்ககூடிய வருவாய் பங்கு தொகை சுமார் 5 கோடி ரூபாய் மட்டுமே. இந்தப் படத்தில் நடிக்க சந்தானம் வாங்கியுள்ள சம்பளம் 8 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மோசமான தோல்வி அடைந்த படமாக நான்தான் இங்கு கிங்கு இடம்பெற்றுள்ளது.
எலக்சன், பிடி சார் திரைப்படத்தின் வசூல்!
உறியடி விஜயகுமார் நடிப்பில் வெளியான எலக்சன் எதிர்பார்த்த வெற்றியை மக்கள் மத்தியில் பெறவில்லை என்பதுடன், முதல் நாள் தமிழ்நாட்டில் சுமார் 68 லட்சம் ரூபாய் மட்டுமே. இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் மோசமான சரிவை எதிர்கொண்டு வெற்றி பெற முடியவில்லை.
இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முக தன்மை கொண்ட ஹிப் ஆதி நாயகனாக நடித்து வெளியான PT ஸ்டார் படம் வெற்றி பெற்றதாக அப்படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் வசூல் தகவல்கள் அதனை உறுதிப்படுத்தகூடிய வகையில் இல்லை. தமிழகத்தில் முதல் நாள் இப்படம் 58 லட்ச ரூபாய் மட்டுமே மொத்த வசூல் செய்ததாக திரையரங்க வட்டார தகவல்கள் கூறுகிறது.
முதல்வார முடிவில் 6.72 கோடி ரூபாய் மொத்தவசூல் செய்துள்ள PT சார் படத்தின் நாயகன் ஹிப் ஆதியின் சம்பளம் 6 கோடிரூபாய் என்கின்றனர் தயாரிப்பு தரப்பில்.
கல்லா கட்டும் கருடன்
சூரி, சசிக்குமார் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் தயாரிக்கப்பட்டு மே 31 அன்று வெளியான கருடன் கடந்த மூன்று நாட்களில் சுமார் 13 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.
இப்படம் வெளியான அன்று இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ஹிட்லிஸ்ட் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் திரையரங்குகளில் மோசமான வசூலை எதிர்கொண்டுள்ளது.
மே மாதம் வெளியான 19 படங்களில் அரண்மனை – 4, ஸ்டார், கருடன் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பிறபடங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அடிப்படையில் வெற்றியை பெறவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமானுஜம்
எக்சிட் போல்: எகிறிய பங்குச் சந்தை… அதானியின் அசுர வளர்ச்சி!