அரசியல், சினிமா, சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் சம்பந்தமே இல்லாமல் கருத்து சொல்லி தன் மீதான கவன ஈர்ப்பை ஏற்படுத்திக்கொள்வது நடிகை கஸ்தூரியின் பழக்கம்.
தற்போது இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் மனைவி சாயிராவுக்கு தமிழ் தெரியாதா அவரது தாய் மொழி என்ன? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தனக்கே உரிய பாணியில் ரத்தின சுருக்கமாக நகைச்சுவையுடன் ‘காதலுக்கு மரியாதை’ எனக் கூறி சமூக வலைத்தளத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார் ரஹ்மான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மனைவி சாயிரா பானுவுடன் கலந்துகொண்டார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சாயிராவுக்கு தமிழ் தெரியாது.
திருமணத்திற்கு முன்பு ரஹ்மானுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியுமா என்பதை அவரிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்ததாக சாயிரா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
தன் மனைவிக்கு சரளமாகத் தமிழில் பேச வராது என்பது ரஹ்மானுக்கு தெரியும் இருந்தபோதும் விழாவில் கலகலப்பை ஏற்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் விழா மேடையில் இருந்தபோது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், அவரது மனைவி சாயிராவையும் மேடைக்கு வருமாறு அழைத்தனர்.
அவர் மேடைக்கு வந்து ’ஏ.ஆர்.ரஹ்மான்அருகில் நின்றதும் அவரிடம் ’ஏ.ஆர்.ரஹ்மான், ‘இந்தியில் வேண்டாம், தமிழில் பேசவும்’ என்று கூறுகிறார்.
உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரிக்க, சாயிரா புன்னகையுடன் ‘கடவுளே’ என்று சொல்லிவிட்டுப் பேச ஆரம்பிக்கிறார்.
“அனைவருக்கும் மாலை வணக்கம். மன்னிக்கவும். என்னால் தமிழில் சரளமாகப் பேச இயலாது. தயவுசெய்து பொறுத்துக் கொள்ளவும். நான் இன்று மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
காரணம் எனக்கு அவர் குரல் ரொம்பவே பிடிக்கும். நான் அவரது குரலைக் கேட்டே அதில் காதல் கொண்டேன். அதுமட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என்றார்.
இதனிடையே, நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கஸ்தூரிக்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான், “காதலுக்கு மரியாதை” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இராமானுஜம்
திமுக மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்!
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சாதகமான தீர்ப்பு!