“முன்பே வா என் அன்பே வா” பாடல்: ரஹ்மான் சொன்ன சீக்ரெட்!

சினிமா

“முன்பே வா என் அன்பே வா” பாடலுக்கு இசையமைத்து விட்டு சோகமான பாடலாக வந்துள்ளது என்று இயக்குனர் ஓபிலி கிருஷ்ணாவிடம் கூறினேன் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல‘ திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்  18.03.2023 அன்று மாலை நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் சிலம்பரசன் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.  மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, 

“‘பத்து தல’ படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. 

என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘முன்பே வா என் அன்பே வா’ பாடலை குறிப்பிடுவேன். இப்பொழுது வரைக்கும் பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்தும்  அது பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது. 

முதலில் அந்த பாடலுக்கு இசையமைத்துவிட்டு, இது மிகவும் சோகமாக இருக்கிறது என்று இயக்குநரிடம் சொன்னேன். ஆனால், அது நிச்சயம் வெற்றியடையும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார். அப்படியே நடந்தது. 

அதை சரியாக கணித்து அவர் என்னிடம் சொன்னார். அவருடைய பொறுமை,  இசைமேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என இது எல்லாமும் நான் இந்த படம் ஒத்துக் கொள்ள காரணங்கள். படத்தின் அனைத்து பாடல்களும் மாஸாக இருக்கும். 

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அக்கரையில..’ பாடல் சிம்பு பாட வேண்டியது. ஆனால் அவர் அந்த சமயத்தில் தாய்லாந்துக்கு சென்று விட்டதால் இந்த பாடலை நான் பாடினேன். 

டி.ஆர். சார் இங்கு இருக்கிறார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ‘சேவ் லைட்மேன் ஃபண்ட்’ என லைட்மேன்களுக்காக இணையதளம் ஒன்று ஆரம்பித்துள்ளோம். 

AR Rahman Speech in Pathu Thala Audio Launch
AR Rahman

படத்திற்கு ஒளிபாய்ச்சுவது அவர்கள்தான். அவர்களுக்கு சரியான இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது. இந்த இணையதளத்தை சிம்பு லான்ச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்’ என ரஹ்மான் வேண்டுகோளுக்கு இணங்க சிலம்பரசன் இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். 

அடுத்து மேடை ஏறியவர் இயக்குநர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட டி. ராஜேந்தர் அவர் பேசியதாவது, ” இப்படி மேடை ஏறி உங்கள் அனைவரையும் நான் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. 

உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை. 

நான் அமெரிக்கா சென்று என் உடல் ஆரோக்கியத்திற்காக சிகிச்சை எடுத்து வந்த பிறகு கூட்டம் இருக்கும் இடங்களுக்கு பெரிதாக நான் செல்வதில்லை. ஆனால் இங்கு இருப்பதும் திரளான கூட்டம். 

இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று என் மகனுக்கு ஒரு நாட்டம். நான் வரவில்லை என்றால் என் மகனுக்கு வந்து விடும்  வாட்டம். 

என்னை பார்த்ததும் எஸ் டி ஆர் ரசிகர்களுக்கு ஆனந்த நீரோட்டம். அதற்கு காரணம் இந்த ‘பத்து தல‘ என்ற தேரோட்டம். 

என் மகனும் என்னை போல் தமிழில் பேசட்டும், இறைவன் அருளால் பல காலம் வாழட்டும். இப்படி நான் பேச ஆரம்பித்தால் விடியும் வரை பேசிக் கொண்டிருப்பேன். 

ஆனால் அதிகம் நான் பேசக்கூடாது என்று என் மனைவி உஷா அன்பு கட்டளை விதித்துள்ளார். 

சிம்பு என்னை மேலே ஏறக்கூடாது என்று சொல்வார். அப்படியே ஏறினாலும் அவரது ரசிகர்களை நான் திருப்தி படுத்தாமல் கீழே வரக்கூடாது என்று சொல்வார்.

 கலைஞனாக அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வார். அமெரிக்கா போய் விட்டு நான் இங்கு வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகனின் அன்பு. 

அந்த அன்புக்காகவே இந்த இசை  வெளியீட்டு விழாவுக்கு வந்தேன்’ என படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

AR Rahman Speech in Pathu Thala Audio Launch

அடுத்து இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது,

“இந்த படத்தின் வாய்ப்பைக் கொடுத்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலையில் இருந்தோம்.  

கௌதம் கார்த்திக் உடைய போர்ஷன் அனைத்தையும் முடித்து விட்டோம். சிம்பு அடுத்த ஷெட்யூலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் நியாயமான காரணங்களால் படத்தை கைவிட வேண்டிய நிலையில் யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருந்தோம். 

ஏற்கனவே என்னுடைய இரண்டு படங்கள் கைவிடப்பட்டு விட்டது. அதேபோலவே இந்த படமும் கைவிட்டால் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான். சினிமாவில் அதிகம் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பிறகு ஞானவேல் ராஜாவிடம் நான் பேசினேன். ஒரு முடிவை எடுத்தால் அதை மாற்றாதவர் ஞானவேல் ராஜா. ஆனால் நான் பேசிய  பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் மனதை மாற்றியது எது என தெரியவில்லை. 

இது அனைத்தும் கடவுளின் அருள்தான். நேற்று கூட டிரைய்லரை முடித்து விட்டு ரஹ்மான் சாரிடம் இசை கேட்டேன். அவர் செய்துவிடலாம் என பாசிட்டிவாக பேசி செய்து கொடுத்திருக்கிறார். 

எஸ் டி ஆர்- ஐ பற்றி பேச வேண்டும் என்றால் அவருடைய நண்பராக நான் சொல்கிறேன். எனக்கும் அவருக்கும் 20 வருட பழக்கம். அவருடைய ‘தம்’ படத்திற்கு பிறகு நான் படம் இயக்க வேண்டியது.

அது தள்ளி போய் இப்போது தான் நடந்திருக்கிறது. படப்பிடிப்பில் மிகவும் தயாராக இருப்பார். வசனங்களை முந்தின நாள் இரவே வாங்கி படித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வருவார். என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். 

அந்த விஷயம்தான் இந்தப் படத்தை நான் நினைத்ததுபோல எடுக்க வைத்தது. கெளதம் கார்த்திக்கை நான் நிறைய படுத்தி இருக்கிறேன். ஆனாலும் அவ்வளவு பொறுமையாக இருப்பார்.

 ரஹ்மான் சார் பற்றி நான் பேச வேண்டும் என்றால் நிறைய கதைகள் இருக்கிறது. அவரைப் பார்த்து நிறைய விஷயங்களில் நான் மாறி இருக்கிறேன் என்றார்”

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது,

” எனக்கும் சிம்புவுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அவரிடத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவருக்கு இணையான எதிரி அவரை தவிர வேறு யாருமில்லை என்று நினைக்கும் பாசிட்டிவான எண்ணம் தான். 

நான் சிம்புவை முதல்முறை சந்தித்தபோது எத்தனை எளிமையாக இருந்தாரோ இத்தனை வருடங்கள் கழித்தும் அதேபோலத்தான் இருக்கிறார். அவருடைய நல்ல குணத்திற்காகவே இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை கடந்து இப்பொழுது நாங்கள் நிற்கிறோம். 

இந்த படத்திற்கு பிறகு அவருக்கு வேறொரு பெரிய இடம் காத்திருக்கிறது. அடுத்து கௌதம் கார்த்திக் என்னுடைய மகனாகவே அவரைப் பார்க்கிறேன். என்னுடைய அடுத்த சினிமா வாரிசு அவர்தான்.

அவருடைய கடின உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் இன்னும் ஒன்று இரண்டு வருடங்களில் தவிர்க்க முடியாத ஒரு கதாநாயகனாக நிச்சயம் வருவார். அடுத்து கிருஷ்ணாஎன்னுடைய சிறந்த நண்பர். இடையில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட என்னிடம் கதை சொல்கிறேன், படம் இயக்குகிறேன் என்று வாய்ப்பு கேட்டதே இல்லை. 

நானே தான் அவரிடம் எனக்கு படம் இயக்க வேண்டும் என்று கேட்டேன். இந்த படம் ஜெயித்து, தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறுவதற்கான இடம் அவருக்கு இருக்கிறது என்பது எனக்கு பெருமையான ஒரு விஷயம் என்றார் 

படத்தின் கதாநாயகி ப்ரியா பவானி ஷங்கர் பேசியதாவது,

” விழா பிரம்மாண்டமாக நடக்கும் என்று தெரியும். ஆனால், இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இயக்குநர் கிருஷ்ணா மிகவும் பொறுமையான உறுதியான மனிதர். சிலம்பரசனில் இருந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை எல்லாரையும் ஒன்று போலவே மதித்து மரியாதையாக நடத்தினார். அதற்கு எப்பொழுதுமே அவருக்கு நன்றி சொல்கிறேன்.

அடுத்து கௌதம் மேனன் சார். அவர் நடித்து வெளியாகும் படங்களை பார்க்கும் பொழுது பயமாக இருக்கும். அவர் இயக்கத்தை கைவிட்டு விடுவாரோ என்று. கெளதம் சார் தயவு செய்து நிறைய படங்களை எங்களுக்காக இயக்குங்கள். மனுஷ்யபுத்திரன் சார் கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன்.

அவரது முதல் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் மிகப் பெரிய ரஹ்மான் சார் ரசிகை. கடவுள் எங்களுக்காகவே உங்களை ஸ்பெஷலாக படைத்து அனுப்பி இருக்கிறார் என்று தான் சொல்வேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் இசையில் என்னுடைய முகம் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அடுத்து கௌதம் கார்த்திக்என்னுடைய தோழியின் கணவர். உங்கள் இரண்டு பேருக்குமே என்னுடைய அன்பு. அடுத்து சிலம்பரசன் சார், அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு அங்கு கிடைக்கவில்லை. இத்தனை பேருடைய அன்பு அவருக்கு கிடைத்திருக்கிறது என்பது அவருடைய ஆசீர்வாதம் என்றுதான் சொல்வேன். 

நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது,

‘பத்து தல’ என் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம். படத்தில் உழைத்த அனைவருக்காகவும் நிச்சயம் படம் வெற்றியடைய வேண்டும். என்னை நம்பி மிகப்பெரிய ஒரு கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா சாருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் காட்சிகள்தான். ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் சார் அதை அற்புதமாக செய்திருக்கிறார். அஜய், சாண்டி, பிருந்தா மாஸ்டருடன் வேலை பார்த்தது எனக்கு ‘கடல்’ படத்தின் நினைவுகளைக் கொண்டு வந்தது. கெளதம் மேனன் சாருடன் இந்தப் படத்தில் எனக்கு காட்சிகள் இல்லாதது வருத்தம்தான்.

அறிமுக நடிகராக எனக்கு முதல் படத்தில் ரஹ்மான் சாருடைய இசை மிகப்பெரிய கனவாக இருந்தது. இப்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறேன். 

படத்தின் பாடல்களை கேட்கும் பொழுது சில இடங்களில்  கண் கலங்கினேன். அடுத்து எஸ் டி ஆர் அண்ணன்முதன்முதலில் அவரை 2013 இல் லண்டனில் தான் சந்தித்தேன். 

என்னை அவருக்கு தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அவரே வந்து என்னிடம் பேசி லண்டனை முழுவதும் சுற்றிக்காட்டி பாதுகாப்பாக கூட்டிச் சென்றார்.  அப்போதே அவர் மீது மிகப்பெரிய மரியாதை வந்தது. 

அப்பொழுது அவர் என்னிடம் ஆன்மீக பயணம் குறித்து சொல்லியிருந்தார். அந்த சமயத்தில் எனக்கு அது சரியாக புரியவில்லை. இப்பொழுது அதை பின்பற்றி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி வந்திருக்கும் பொழுது அது மிகப்பெரிய பிரமிப்பை தருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் அவர் வந்து நின்றாலே அத்தனை தலையும் அவரை தான் திரும்பி பார்க்கும். கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டால் அவரது தலையில் இருந்து கால் வரை அத்தனையும் நடிக்கும். 

அவர் போல ஒரு நடிகராக மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஏ.ஜி.ஆரின் பவரை நீங்கள் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வந்து பார்த்து ரசியுங்கள்” என்றார்.

இராமானுஜம்

அ.இ.அ.தி.மு.க – பாஜக: பகையுறவு பரிதாபங்கள்!

அண்ணாநகர் டவர் பூங்கா: இன்று முதல் அனுமதி!

உக்ரைன் சென்ற ரஷ்ய அதிபர் புதின்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *