AR rahman music concert is cancelled

இசை நிகழ்ச்சி ரத்து: ஏமாந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் ஆறுதல்!

சினிமா

ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி திடீரென ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 12) நடைபெறவிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான 100 சதவீத டிக்கெட்டுகளும் விற்பனையாகியிருந்தது. ரசிகர்களும் நிகழ்ச்சி தொடங்குவதற்குள் சென்றுவிட வேண்டும் என்று முன்னதாகவே இன்று பனையூருக்கு வருகை தந்திருந்தனர்.

ஆனால் மழை பெய்ததால் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த மைதானத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாய் மாறியுள்ளது. இதனால் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது அன்பான நண்பர்களே… மோசமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக, சட்டப்பூர்வ அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் இசை நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் பனையூரில் குவிந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் மேற்கண்ட பதிவிற்கு ரசிகர் ஒருவர், “நல்ல வேள வேளச்சேரி தாண்டல…. அப்படியே கிளம்பிட வேண்டியது தான்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான், “லவ் யூ” என்று உடைந்த இதய எமோஜியை பகிர்ந்து பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் ஒருவர், “மழை நின்றுவிட்டது. இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் பெங்களூருவில் இருந்து வந்துள்ளோம். இன்று எனது பிறந்தநாள். தயவு செய்து இவ்வாறு செய்யாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரண்யா… கடவுள் உங்களுக்கு ஆரோக்கியம், அன்பு மற்றும் செழிப்பை வழங்கட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.

ஹஜி ஹலி என்ற ரசிகர் ஒருவர், “இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் யார் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று யூகித்தால், அது ஏ.ஆர்.ரகுமான் தான். உங்கள் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு “லய் யூ… நல்ல மனிதர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

இவ்வாறு ரசிகர்கள் பலரும் இசை நிகழ்ச்சி குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, பனையூர் இசை நிகழ்ச்சி ரத்தானதால் மீண்டும் ரசிகர்கள் திரும்பி செல்கின்றனர். இதனால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மோனிஷா

நாங்குநேரி சம்பவம் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்காக முதல்வர் உத்தரவு!

அன்பில் மகேஷ்க்கு நெஞ்சு வலி… விமானத்தில் வர சொன்ன முதல்வர்… நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *