2020 ஆம் ஆண்டு வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2” படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குப் பின்பு இயக்குனராக இருந்த மிஷ்கின் முழு நேர நடிகராக மாறிவிட்டார். பேச்சுலர், மாவீரன் என தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்திலும் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் சவரக்கத்தி படத்தை இயக்கிய இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யாவின் “டெவில்” படத்திற்கு இசையமைத்து, இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் மிஷ்கின்.
மேலும் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க ‘நடிகர்’ மிஷ்கின் முடிவு எடுத்திருப்பதாக சில தகவல்கள் பல மாதங்களுக்கு முன் வெளியானது.
மிஷ்கின் இயக்கப் போகும் இந்த புதிய படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஒரு சின்ன கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மிஷ்கின் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுவரை மிஷ்கின் படங்களுக்கு இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் கே, இசையமைப்பாளர் அரோல் கரோலி, இசையமைப்பாளர் சுந்தர்.சி பாபு ஆகிய 4 இசையமைப்பாளர்கள் மட்டுமே இசையமைத்துள்ளார்கள். அந்த வகையில் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் மிஷ்கின் கூட்டணியில் உருவாக உள்ள விஜய் சேதுபதியின் படத்தில் இசை வடிவமைப்புகள் மிக வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
“தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது” – எ.வ.வேலு
காவிரி விவகாரம்: பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!