அன்வேஷிப்பின் கண்டதும் – திரைப்பட விமர்சனம்!
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம், சுரேஷ்கோபிக்கு அடுத்தபடியாக குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, இந்திரஜித், பிருத்விராஜ், ஆசிஃப் அலி, பகத் பாசில், நிவின்பாலி என்றொரு தலைமுறையும் துல்கர் சல்மான், பிரணவ் மோகன்லால் போன்ற வாரிசுகளும் பிரபலங்களாகத் திகழ்கின்றனர்.
இவர்களுக்கு மத்தியில் புதுப்புனலெனப் பிரவாகமெடுத்து ரசிகர்களை ஆட்கொண்டவர் டொவினோ தாமஸ். முற்றிலும் வேறுபட்ட வகைமையில் அமைந்த படங்களைச் சீரான இடைவெளியில் தந்து வருவது இவரது சிறப்பு.
அந்த வரிசையில் மேலுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘அன்வேஷிப்பின் கண்டதும்’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், புதுமுகமான டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், சித்திக், ஷாதிக், பாபுராஜ், இந்திரன்ஸ், வி.ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது?
பரிதவிப்பு
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும் ஆனந்த் நாராயணனைப் (டொவினோ தாமஸ்) பார்த்ததும், ‘லவ்லி மாதன் கொலை வழக்கை விசாரித்த எஸ்ஐ இவர்தான்’ என்று இரு நபர்கள் கிசுகிசுப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
கோட்டயம் வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன். அவருக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் லவ்லி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். தேர்வு வருவதையொட்டி ‘ஹால் டிக்கெட்’ வாங்கி வருவதாகச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
அதற்கடுத்த நாள், அது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் மாதன். சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் விசாரணையைத் தொடங்கியதுமே, லவ்லி ஊர் திரும்பியது தெரிந்து போகிறது. வீடு செல்லும் வழியில் சென்றவர், எங்கு சென்றார் என்பதே முக்கியக் கேள்வியாக மாறுகிறது.
அதன் தொடர்ச்சியாக, பாதிரியாரை விசாரிக்க முனைகிறார் ஆனந்த். அதற்கு அவ்வூரில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனை மீறிச் செல்ல முற்படும்போது தகராறு உண்டாகிறது.
அதையடுத்து, அந்த வழக்கு வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபரைக் கைது செய்கிறது காவல் துறை.
ஒருகாலத்தில் ரவுடியாக இருந்த அவர், தற்போது மனம் திருந்தி அமைதியான வாழ்வை மேற்கொண்டு வருபவர். வழக்கு திசைமாறுவதாக உணரும் ஆனந்த், குறுக்கு வழியொன்றைப் பயன்படுத்தி பாதிரியாரின் வீட்டுக்குள் நுழைகிறார்.
அங்கிருக்கும் தடயங்களைப் பதிவு செய்கிறார். அதன் முடிவில், லவ்லி அந்த வீட்டில்தான் இறந்தார் என்பது உறுதியாகிறது. அந்த வழக்கில் குற்றவாளி யார் என்பதைக் கண்டறிந்து, அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது.
அது, ஆனந்தையும் அவரைச் சார்ந்தவர்களையும் காவல்துறை பணியில் இருந்து தள்ளி வைத்துவிடுகிறது. எட்டு மாதங்கள் கழித்து, ஆனந்தும் அவருடன் இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்களும் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பைத் தருகிறார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதேவி எனும் இளம்பெண் கொலையானது குறித்து விசாரித்து அறிக்கை தரும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. தடயங்களோ, சாட்சிகளோ இல்லாத அவ்வழக்கில் உண்மையான குற்றவாளியை ஆனந்தும், இதர காவலர்களும் கண்டறிந்தார்களா? என்று சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
முன்பாதியில் லவ்லி என்ற பெண்ணையும், பின்பாதியில் ஸ்ரீதேவி என்ற பெண்ணையும் இழந்து பரிதவிக்கின்றனர் அப்பெண்களின் குடும்பத்தினர். அந்த உணர்வுதான் இக்கதைகளின் அடிநாதம். அதனையொட்டி, சாதிய வேறுபாடுகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இறுக்கம்
இந்த படத்தில் முகம் முழுக்க இறுக்கம் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார் டொவினோ தாமஸ். ஏற்கனவே ‘கல்கி’ என்ற படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆனால், இவ்விரு படங்களுமே அடிப்படையில் வெவ்வேறானவை என்பதால், நம் மனதுள் பழைய நினைவுகள் எழுவதில்லை. படம் முழுக்க அவரே நிறைந்திருக்கிறார்.
முன்பாதியில் பிரகாஷ், அஜீஸ் நெடுமங்காடு, நந்து, சித்திக் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். பின்பாதியில் ஷம்மி திலகன், பாபுராஜ், சாதிக், இந்திரன்ஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் முகம் காட்டுகின்றனர். இவர்கள் அனைவருமே மூத்த மலையாள நடிகர்கள்.
டொவினோ உடன் காவலர்களாக வினீத் தட்டில் டேவிட், பிரமோத், ராகுல் ராஜகோபால் நடித்துள்ளனர். அவர்களில் பிரமோத் பேச்சு ஆங்காங்கே நம்மை சிரிக்க வைக்கிறது. அர்த்தனா பினு, ரம்யா சுவி உட்பட நான்கைந்து பெண் முகங்களே இதில் உண்டு.
முழுக்கத் தொண்ணூறுகளில் நடப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருப்பதும், காவல் துறை விசாரணை நடைமுறைகளைச் சொல்லும் காட்சியமைப்புகளும் அதனை நியாயப்படுத்துகின்றன. கௌதம் சங்கர் ஒளிப்பதிவு, படத்திற்கு யதார்த்த முலாமைப் பூசுகிறது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் திலீப் நாத்தின் குழுவினர், இக்கதை தொண்ணூறுகளில் நடைபெறும் உணர்வை உறுதிப்படுத்தியுள்ளனர். படத்தொகுப்பாளர் சைஜு ஸ்ரீதரன், திரையில் கதை சீராகப் பரவ வழி வகுத்திருக்கிறார்.
முக்கியமாக, சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை உருவாக்கும் பரபரப்பு, நம்மைச் பின்னே சாயவிடாமல் இருக்கை நுனியில் அமர்த்துகிறது. ஒலி வடிவமைப்பு, டிஐ உட்படப் பல தொழில்நுட்பப் பணிகளும் கூட மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டிருப்பதால், ஒரு கிளாசிக் படம் பார்க்கும் உணர்வு வெகுசீக்கிரமே உருவாகிறது.
இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் எழுத்தாக்கம் செய்துள்ளார். அவருடன் இணைந்து இதன் திரைக்கதையைக் கையாண்டுள்ளார் இயக்குனர் டார்வின் குரியகோஸ்.
முன்பாதி ஒரு கதையாகவும், பின்பாதி இன்னொரு கதையாகவும் இதில் விரிகிறது. இரண்டிலும் பாதிக்கப்பட்ட தரப்பு எதிர்கொள்ளும் ஒடுக்குதலையும் பரிதவிப்பையும் சரியாகக் கடத்தியிருக்கிறார் இயக்குனர்.
புதிதாகப் பொறுப்பேற்றவர்கள் எதிர்கொள்ளும் துறைரீதியான அரசியல், மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல், சாதியத்தினால் உருவாகும் ஆதிக்க மனநிலை என்று பல விஷயங்கள் இக்கதையில் பொதிந்துள்ளன. அரைகுறையாகப் பார்க்கையில், அது சரியாகப் பிடிபடாமல் போக வாய்ப்புண்டு.
தெளிவு
காவல் துறையில் குற்றவாளி யார் என்றே தெரியாமல் பாதியில் கைவிடப்பட்ட வழக்குகள் தனியாகக் கணக்கு வைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட வழக்குகளைத் தனியே எடுத்து, ஒரு கதையாக அமைத்திருக்கிறார் ஜினு ஆபிரகாம்.
அந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தும் அவர்களைப் பிடிக்க முடியாத சூழல் நிலவுவதாகச் சொல்கிறது ‘அன்வேஷிப்பின் கண்டதும்’. அதில் இரு தரப்பின் உணர்வுகளையும் பதிவு செய்த வகையில் வித்தியாசப்படுகிறது. ஆனால், எதிர்தரப்பை விலாவாரியாக இப்படம் காட்டவில்லை.
இந்த திரைக்கதையில் மிகுந்த ‘தெளிவு’ மிக்கவராக டொவினோவின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான கமர்ஷியல் படங்களில் ஹீரோயிசம் காட்டப் பயன்படத்தக்கது. இப்படத்தின் முடிவு, அதனை மையப்படுத்தி அதன் இன்னொரு பாகம் வெளிவரும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாத காரணத்தால், மெதுவாகச் சூடேறும் பாத்திரம் போன்று மெல்லப் பரபரப்பைத் தொடுகிறது திரைக்கதை. அதனுடன் இணைகோடாகப் பயணிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, இந்த ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ நிச்சயம் பிடிக்கும்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் : ஜாக்டோ ஜியோ
இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
மாநிலங்களவை தேர்தல்: சோனியா காந்தி வேட்புமனுத் தாக்கல்!