Tillu Square movie Review!

டில்லு ஸ்கொயர் : விமர்சனம்!

சினிமா

டிஜே டில்லு பார்த்தவர்களுக்கு பிடிக்கும்!

ட்ரெண்டுக்கு ஏற்ற சில அம்சங்களைக் கைக்கொள்வதன் மூலமாகச் சில திரைப்படங்கள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும். அவர்களை ஆச்சர்யப்படுத்தும், அதிர்ச்சிப்படுத்தும் விஷயங்களையும் அவை கொண்டிருக்கும்.

சில நேரங்களில் வித்தியாசமான பாத்திர வடிவமைப்பு, சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் மீதான புகழ் வெளிச்சம், இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் என்று ஏதோ ஒன்று அது போன்ற திரைப்படங்களை முன்வரிசையில் நிறுத்தும்.

சித்து ஜோனலகடா, அனுபமா பரமேஸ்வரன், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில், மல்லிக் ராம் இயக்கியுள்ள ‘டில்லு ஸ்கொயர்’ படமும் அப்படிப்பட்ட மாயாஜாலமொன்றை நிகழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 3 நாட்களில் சுமார் 50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது இந்த தெலுங்கு திரைப்படம்.

சரி, இந்த படத்தில் அப்படியென்ன இருக்கிறது?

பெண்களால் ஏமாற்றம்!

டிஜேவாக புகழ் பெற விரும்பும் டில்லு தற்செயலாக டிஸ்கோ பப்பில் சந்தித்த ராதிகா (நேஹா ஷெட்டி) மீது காதலில் விழுவதையும், அதன் தொடர்ச்சியாக நிகழும் களேபரங்களையும் காட்டியது 2022இல் வெளியான ‘டிஜே டில்லு’ திரைப்படம்.

அதில், ராதிகா தனது காதலரைக் கொன்றுவிட, விஷயம் தெரியாமல் அவருக்கு உதவப்போன டில்லு வம்புதும்புகளில் மாட்டி இறுதியில் ஒருவழியாகத் தப்பிப்பார். வில்லன் ஷேனோனிடம் (பிரின்ஸ் சிசில்) இருந்து திருடிய 2 கோடி ரூபாய் பணம் அவர் வசப்பட்டிருப்பதோடு அப்படம் முடிவடைந்திருக்கும்.

அந்த பணத்தைக் கொண்டு ‘டில்லு ஈவெண்ட்ஸ்’ என்ற பெயரில் திருமண சமையல் காண்ட்ராக்ட் மற்றும் டிஜே பணிகளுக்கான ‘ஆர்டர்’களை டில்லு பெறுவதாக இத்திரைப்படம் தொடங்குகிறது. அந்த வகையில், முதல் பாகத்தில் இடம்பெற்ற சில முக்கியப் பாத்திரங்கள் இதில் கௌரவமாகத் தலைகாட்டுகின்றன.

டிஜே வேலை, கை நிறையப் பணம், கேளிக்கை விடுதிகளில் உல்லாசம் என்று திரிகிறார் பாலகங்காதர திலக் எனும் டிஜே டில்லு (சித்து ஜோனலகடா). ஒருநாள் டிஸ்கோ பப்பில் லில்லி (அனுபமா பரமேஸ்வரன்) எனும் இளம்பெண்ணைச் சந்திக்கிறார். பார்த்தவுடன் அவர் மீது காதலில் விழுகிறார்.

முதல் சந்திப்பிலேயே இருவருக்குமான உறவு எல்லையைத் தாண்டுகிறது. அடுத்த நாள் காலையில் டில்லு எழுந்திரிக்கும்போது, லில்லி அங்கு இல்லை. ‘தன்னைத் தேட வேண்டாம்’ என்று குறிப்பொன்றை வைத்துவிட்டு அவர் காணாமல் போகிறார். அதன்பின் சுமார் ஒரு மாத காலம் அவரைத் தேடியலைகிறார் டில்லு.

ஒருநாள் மூல நோய் சிகிச்சைக்காகத் தனது தந்தையை (முரளிதர் கவுட்) மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் டில்லு. அங்கு மீண்டும் லில்லியைக் காண்கிறார். அப்போது, தான் கர்ப்பமாக இருப்பதாக டில்லு பெற்றோரிடம் சொல்கிறார் லில்லி. அவ்வளவுதான். அடுத்த நொடியே இருவருக்கும் திருமணம் என்று முடிவு செய்துவிடுகின்றனர் டில்லுவின் பெற்றோர்.

எல்லாமே சுமூகமாகச் செல்வதாக டில்லு நினைக்கும் வேளையில், ராதிகா இருந்த அபார்ட்மெண்டுக்கு அவரை வரவழைக்கிறார் லில்லி. அதனை உணர்ந்ததுமே ‘ஜெர்க்’ ஆகிறார் டில்லு. காரணம், அன்று அவரது பிறந்தநாள். ராதிகாவையும் கூட, கடந்த ஆண்டு அதே நாளில்தான் அவர் சந்தித்திருக்கிறார்.

அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்விதமாக, டில்லு மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. அப்போது, எதிரிகளைத் துவம்சம் செய்கிறார் லில்லி. அப்போதுதான், அவர் கர்ப்பமாக இல்லை என்பதும், இந்திய சிறப்புப் படையில் போலீஸ் அதிகாரியாக இருப்பதும் டில்லுவுக்குத் தெரிய வருகிறது.

சரி, அவர் ஏன் டில்லுவைக் காதலிப்பதாகவும் கர்ப்பமுற்றதாகவும் சொல்லி ஏமாற்ற வேண்டும்?

அதற்குப் பதில் சொல்லும் வகையில், இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஷெய்க் மெகபூப்பை (முரளி சர்மா) டில்லு கொல்ல வேண்டும் என்கிறார் லில்லி. அதனைச் செய்யாவிட்டால், ராதிகாவுக்கு உதவி செய்யும்விதமாக அவரது காதலரின் பிணத்தைப் புதைத்த வீடியோவை வெளியிடுவேன் என்று டில்லுவை மிரட்டுகிறார்.

அடிதடி என்றாலே ஒளிந்து ஓரமாய் ஒதுங்கியோடும் டில்லு அதற்குச் சம்மதித்தாரா? லில்லி, ஷெய்க் மெகபூப் என்ற இரண்டு முதலைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட அவர் தப்பிக்க ஏதும் வழி கிடைத்ததா என்று சொல்கிறது ‘டில்லு ஸ்கொயர்’ படத்தின் மீதி.

டிஜே டில்லு பார்த்தவர்களுக்கு இந்தப் படம் ரொம்பவும் பிடிக்கும். காரணம், டில்லு என்ற நாயக பாத்திரத்தை மிக வித்தியாசமாக வடிவமைத்த வகையில் மட்டுமே அப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த பாத்திர வார்ப்பில் இன்னொரு எல்லையைத் தொட்டிருக்கிறது இந்த இரண்டாம் பாகம்.

மிக முக்கியமாக, முதல் பாகத்தில் இருந்த சில விஷயங்கள் இதில் வேறுவிதமாக இடம்பெற்றுள்ளன. ’சீன்’ காட்டும் டில்லு தன்னை ஏமாற்ற முனையும் பெண்களிடம் வழியச் சென்று மாட்டுவதும் அதிலொன்றாக உள்ளது.

அனுபமாவின் கவர்ச்சி!

உண்மையைச் சொன்னால், தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இதில் கவர்ச்சியை அள்ளியி இறைத்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

‘பிரேமம்’ படத்தில் ஒருபக்கமாய் தனது சுருளான மயிர்க்கற்றைகளைப் புரளவிட்டுப் பார்வையாலும் புன்னகையாலும் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவரா இப்படி நடித்திருக்கிறார்? ஹோம்லி லுக்கில் பாந்தமாக இருந்தவர் ஏன் இப்படித் திடீரென்று கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என்று பல கேள்விகளை அனுபமாவின் தோற்றம் எழுப்பியிருப்பதே ‘டில்லு ஸ்கொயர்’ படத்தின் முதன்மையான யுஎஸ்பி.

அதற்கேற்ப ஆபாச எல்லையைத் தொட்டுவிடாதவாறு கனகச்சிதமாகத் திரையில் தோன்றியிருக்கிறார் அனுபமா. இனி, அவரைத் தெலுங்கு, இந்திப் படங்களில் மட்டுமே காண முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்.

சித்து ஜோனலகடா இப்படத்தின் நாயகன். முந்தைய பாகம் போலவே, இப்படத்தின் எழுத்தாக்கத்திலும் அவர் பங்கேற்றிருக்கிறார். தமிழில் ‘வல்லினம்’ படத்தில் அறிமுகமான சித்து, தெலுங்கில் ‘குண்டூர் காரம்’, ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ போன்ற படங்களில் எழுத்தாக்கம் செய்து நடித்திருக்கிறார்.

இரட்டை அர்த்த வசனங்கள், நாயகியோடு நெருக்கமான காட்சிகள், அப்பாவித்தனமும் வசீகரமும் மிக்க நாயக பாத்திர வார்ப்பு போன்றவற்றுக்காக அப்படங்கள் குறிப்பிட்ட ரசிகர்களை ஈர்த்தன. இதிலும் அவர் அந்த பார்முலாவை கைக்கொண்டிருக்கிறார்.

டில்லு என்ற பாத்திரமானது ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதனை உணர்ந்து, விதவிதமான கதைகளை அதன் வழியே சொல்ல முனைந்திருக்கும் காரணத்திற்காகவே அவரைப் பாராட்டலாம்.

சில காலமாகத் தெலுங்கில் வில்லத்தனத்தோடு காமெடியிலும் கலக்கி வரும் முரளி சர்மா, இதில் வில்லனாகத் தோன்றியிருக்கிறார்.

நாயகனின் தந்தையாக வரும் முரளிதர் கவுட், உதவியாளராக வரும் பிரனீத் ரெட்டி ஆகியோர் ஆங்காங்கே வெடிச்சிரிப்பை விதைக்கும்விதமாக வசனங்களை உதிர்க்கின்றனர். இவர்கள் தவிர்த்து முந்தைய பாகத்தில் இடம்பெற்ற நேகா, பிரம்மாஜி உட்பட சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.

ராம் மரியாலா, அச்சு ராஜாமணி இசையமைப்பில் இடம்பெற்ற பாடல்கள் துள்ளலை விதைக்கின்றன.
பீம்ஸ் சிசிரோலியோவின் பின்னணி இசை நகைச்சுவையையும் திகைப்பையும் சரிவிகிதத்தில் கலந்து தந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சாய் பிரகாஷ் உம்மடிசிங்கு, கலை இயக்குனர் ஏ.எஸ்.பிரகாஷ் உடன் சேர்ந்து ஒவ்வொரு பிரேமிலும் வண்ணங்களை வாரியிறைத்திருக்கிறார். அத்தனை ‘கலர்ஃபுல்’ ஆக உள்ளது இத்திரைப்படம். ஆடை வடிவமைப்பாளரின் பங்கும் இதில் கணிசமாக உள்ளது.

திரையில் சீராகக் கதை விரிய உதவியதோடு, முந்தைய பாகத்தின் காட்சிகளைத் தேவையான அளவுக்குக் கண்ணில் காட்டிய வகையில் ‘கெத்து’ காட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி.

ரவி ஆண்டனியுடன் இணைந்து இப்படத்தின் எழுத்தாக்கத்தினைக் கையாண்டிருக்கிறார் சித்து ஜோனலகடா.
பெண் எப்படியிருக்கிறார் என்று புகைப்படம் காட்டும் உறவினர்களிடம், ‘யூ பீபுள் ஆர் ரேஸிஸ்ட்’ என்று நாயகன் சொல்வதில் தொடங்கிப் பல இடங்களில் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன வசனங்கள்.

முந்தைய பாகத்தில் இருந்து விலகி நின்றாலும், திரையில் விறுவிறுப்பாகக் காட்சிகள் நகரும் வகையில் திரைக்கதை ஆக்கியுள்ளார் இயக்குனர் மல்லிக் ராம். பெரிதாகப் புதுமைகள் இல்லாத இக்கதையை, நாயக பாத்திரத்தின் வார்ப்பைச் சரியாகப் பிரதிபலித்தாலே வெற்றி வசப்படும் என்று நம்பிய வகையில் அவரது உழைப்பு ஆச்சர்யத்தைத் தருகிறது.

யாரெல்லாம் பார்க்கலாம்!

’டில்லு ஸ்கொயர்’ படத்தை அனைத்து ரசிகர்களுக்குமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமாக இருக்கும்.

ஏனென்றால் இதில் நிறைந்துள்ள நகைச்சுவையைக் குழந்தைகளோடு சேர்ந்து ஒரு பெற்றோரால் ரசிக்க முடியாது. முதியவர்கள் இந்த படத்தைப் பார்த்தால், ‘கலாசாரத்தைக் கூறு போடுற இந்தக் கதையை எல்லாம் ஏன் படமா எடுக்குறாங்க’ என்று கேட்பது உறுதி.

ஆதலால், இவ்விரண்டுக்கும் நடுவாந்திரமான வயதில் இருப்பவர்கள் இப்படத்தைப் பார்த்து ரசிப்பதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, இதில் சித்து ஏற்ற டில்லு பாத்திரம் அவர்களுக்குப் பிடித்தால் மட்டுமே இப்படத்தைக் கொண்டாட முடியும்.

அதையும் தாண்டி, அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சிகரமாகத் தோன்றுவதைக் கண்டு அதிர்ச்சியுறாமல் இருக்க வேண்டும்.

மிக முக்கியமாக, ‘லாஜிக் என்பது துபாய், ஈரோடு பக்கம் இருக்குதுல்ல’ என்ற மைண்ட் வாய்ஸ் உடன் தியேட்டருக்குள் அமர வேண்டும்.

அனைத்துக்கும் தயார் என்றால், கேர்ள்ப்ரெண்ட் உடன் ஜாலியாக ஏரியாவை ஒரு ரவுண்ட் வருவது போன்ற அனுபவத்தைத் தரும் இந்த ‘டில்லு ஸ்கொயர்’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

”இயல்பை விட அதிக வெப்பநிலை”: வானிலை மையம் பகிரங்க எச்சரிக்கை!

MIvsRR : சொந்த மைதானத்திலும் அசிங்கப்பட்ட மும்பை அணி… முதலிடத்தில் ராஜஸ்தான்!

பியூட்டி டிப்ஸ்: உடல் முழுவதும் வியர்க்குரு… அதற்கான பவுடரை உபயோகிப்பது நல்லதா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *