உதவி இயக்குநர் சிகப்பிக்கு முன்ஜாமீன்!
இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சிகப்பிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 10) முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான விடுதலை சிகப்பி கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் பிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது ராமர், சீதா, அனுமன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் சிகப்பி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், அபிராமபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கலகத்தைத் தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிகப்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடவுளை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. பழிவாங்கும் நோக்கில் என் மீது புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று (மே 10) நீதிபதி திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு, சிகப்பிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
பிரியா
10.5% இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!
மன்னை டு சென்னை அல்ல… சென்னை டு மன்னை: யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?