ஊழல் எதிர்ப்பு : மலேசிய பிரதமருடன் கமல் சந்திப்பு!

Published On:

| By Kavi

இந்தியன் 2 புரோமோஷன் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்ற நடிகர் கமல்ஹாசன் அந்நாட்டு பிரதமரைச் சந்தித்து பேசினார்.

ஜூலை 12 அன்று நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் – 2” திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளை கடந்து வெளிவர உள்ளது.

இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை தயாரிப்பு நிறுவனம் சென்னையில் தொடங்கி ஹைதராபாத், மும்பையில் நடத்தி முடித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் விளம்பரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற்ற இந்தியன் – 2 புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அந்த நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார்.

Image
இது தொடர்பான புகைப்படங்களை நேற்று (ஜூன் 29) தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், “அதிகாரபூர்வ பணிகளுக்கு மத்தியில், இந்தியாவின் பிரபல கலைஞரும் ‘சூப்பர் ஸ்டாருமான’ கமல்ஹாசனுடன் பேச எனக்கு நேரம் கிடைத்தது.

இந்த 30 நிமிட சந்திப்பில் ஊழலுக்கு எதிரான கண்டிப்பு உள்ளிட்ட சினிமா துறை தொடர்பான கருத்துகளைப் பேசவும், பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.

Image
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உங்களை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்சனைகள் குறித்த அறிவார்ந்த விவாதம் செய்ததில் மகிழ்ச்சி.

நமது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பற்றிய உங்கள் கருத்துகளைக் கேட்டு, சினிமாவின் முக்கியப் பங்கு மற்றும் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான கடுமையான சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை குறித்து உங்களுடன் ஒத்துப்போவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை : தேர்தல் வெற்றி குறித்து மோடி பேச்சு!

ராகுல், கோலி, ரோஹித்… இந்திய அணியிடம் போனில் பேசிய மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel