சூரிக்கு இன்னொரு பிறப்பு: ‘விடுதலை’ முதல் நாள் பற்றி சிலிர்க்கும் இரா.சரவணன்

சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிகர் சூரி நடித்திருக்கும், ‘விடுதலை’படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தனது வழக்கமான பாணி படங்கள் அல்லாமல் முற்றிலும் புதிய முயற்சி என்பதால், இதன் ரிசல்ட் என்ன ஆகும் என்பதில் நடிகர் சூரி பெரும் எதிர்பார்ப்போடு பதற்றத்திலும் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் விடுதலை பட ரிலீஸ் அன்று நடிகர் சூரியின் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்பதை தனது சமூக தளப் பக்கத்தில் ஒரு சினிமாவைப் போலவே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன்.
ஏற்கனவே சசிகுமார் மூலமாக சூரியோடு பழக்கம்தான் என்றாலும்… கத்துக்குட்டி படத்தில் சூரி நடித்ததில் இருந்து சரவணனும் சூரியும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.
இப்படிப்பட்ட தன் நண்பர் சூரியின் வித்தியாசமான முயற்சி, அதற்கான ரிலீஸ் முதல் நாள் ரியாக்‌ஷன் பற்றியும் இயக்குனர் இரா. சரவணன் எழுதியிருக்கிறார்.

“சூரி அண்ணனின் படம் ரிலீஸாகும் போதெல்லாம், அவருக்கு முதலில் போன் செய்கிற ஆள் நான். ‘விடுதலை’ பார்த்து பேச்சு மூச்சில்லை. நான் மீண்டுவரவும், இயல்பாகவும் இரவு வரையானது. சூரி அண்ணனின் மேனேஜர் குமார் அண்ணனுக்கு போன் பண்ணினேன். “அண்ணன்கிட்ட இப்போ பேசலாமா?” என்றேன். சத்தம் போட்டுச் சிரித்தவர், “நீங்க எப்போ வேணும்னாலும் பேசலாமே…” என்றார்.
இரண்டாவது சிணுங்களிலேயே, “அண்ணே…” என்றார் சூரி அண்ணன். “இந்த நேரத்தில் நீங்க நிறைய பேரோட வார்த்தைகளைக் கேட்கனும்ணே… நான் பேசினா, நிறைய நேரத்தை எடுத்துக்குவேன். இப்போகூட நான் இயல்பு நிலைக்கு வரலை. உங்க மொத்த வாழ்க்கைக்கும் இந்த ஒத்த படம் போதும்ணே… எனக்கு ஆச்சரியமெல்லாம் இவ்வளவு நடிப்பையும் இந்த உடம்புக்குள்ள இத்தனை நாள் எப்படி அடக்கி வச்சிருந்தீங்க என்பதுதான்…” என்றேன். எப்பவும் போலவே கூச்சப்பட்டு நெகிழ்ந்தார்.

சிக்ஸர் அடிக்கிற சக்தியை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பெவிலியனில் நின்று பந்து பொறுக்கிப் போட பெரிய நிதானம் தேவை. என் ஆச்சர்யங்களைச் சொல்லிக்கொண்டே போக, “அண்ணே… அண்ணே…” என்றார் வேறேதும் சொல்ல முடியாதவராக.
“யாரு சரவணன் அண்ணனா?” என்றார் சூரி அண்ணனின் மனைவி. “நான் சிரிக்கிறதைப் பார்த்தே நீங்கதான் பேசுறீங்கன்னு என் வீட்ல கண்டுபிடிச்சிட்டாங்கண்ணே…” என இன்னும் நெகிழ்ந்து சிரித்தார்.

நியாயமான அத்தனை விஷயங்களிலும் சூரியின் தவிப்பையும் பொருமலையும் அருகிருந்து அறிந்திருக்கிறேன் நான். அவர் கொந்தளித்துக் குமுறிய பல பொழுதுகளில், “உங்களைப் போயி காமெடி நடிகர்னு சொல்றாங்களே…” எனச் சிலிர்த்திருக்கிறேன். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் நிர்மூலமானபோது, ஷூட்டிங் முடிந்து இரவு ஓடோடி வந்தார் சூரி அண்ணன். செருவாவிடுதி என்கிற கிராமத்தில் மக்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் படுத்துக் கிடக்க, அங்கேயே தங்கினார்; தூங்கினார். அடுத்த நாள் காலை அங்கிருந்த குட்டையிலேயே குளித்து, அந்த ஊர் மக்களுக்கு அவ்வளவு ஆறுதலாக நின்றார். ஓட்டுக் கேட்கப் போவதைப்போல் வீடு வீடாகப் போனார். எல்லோரிடமும் நின்று பேசினார். ஊடகங்களின் கவனத்துக்காகச் செய்யாமல், உண்மையான உணர்வோடு நின்றார்.

உண்மையில் ‘விடுதலை’க்கு முன்னரே மக்களோடு மக்களாக நிற்கிற குமரேசன்தான் அவர். மனதின் மொத்தச் சிலிர்ப்புகளையும் சொல்லி முடிக்கையில், இருவருமே அழுது தீர்த்திருந்தோம்.
‘விடுதலை’ குறித்து விவாதிக்க, விமர்சிக்க நிறைய இருக்கிறது. ஆனால், ‘விடுதலை’ மூலமாகப் புடம் போட்ட தங்கமாய், பழுக்கக் காய்ச்சிய கம்பியாய் கம்பீரமாகி இருக்கும் சூரி அண்ணனை அப்படியே கட்டிக்கொள்கிறேன். அண்ணனின் அடுத்தகட்ட பாய்ச்சலை உச்சி முகர்கிறேன்; கோடி பேருக்கான நம்பிக்கையாகக் கொண்டாடுகிறேன். மேக்கப்பை கலைக்கலாம்; ஆனால், தோலையே உரித்துப் போட்டிருக்கும் இந்த அவதாரம்… சூரி அண்ணனின் இன்னொரு பிறப்பு” என்று அழுத்தமாக குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
-வேந்தன்

மதுரை: பிரஸ்மீட்டை பன்னீர் தவிர்த்தது ஏன்?

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *